ஒய்யாரக் கண்களில்
மையாடும் சாகசம்
ஒருநூறு மின்னல்
வனம்
வையத்து மாந்தரை
வாழ்விக்கும் அற்புதம்
வினைதீர்க்கும்
அன்னைமனம்
கைநீட்டி ஆட்கொளும்
கருணையின் உன்னதம்
காளியின் சாம்ராஜ்ஜியம்
நைகின்ற நெஞ்சோடு
நலமெலாம் தந்திடும்
நீலியின் நவவைபவம்
பொன்மஞ்சள் பூச்சோடு
பேரெழிலின் வீச்சோடு
பைரவி அருள்செய்கிறாள்
தென்றலின் வழியாக
தெய்வீக மொழியாக
தயாபரி ஆட்கொள்கிறாள்
சின்னங்கள் நின்றூத
சிவிகையதன் மேலேறி
சிங்கார உலாப்போகிறாள்
என்றென்றும் துணையாக
ஏக்கத்தின் முடிவாக
எப்போதும் துணையாகிறாள்
தீவிரத் தன்மையாய்
திகழ்லிங்க பைரவி
திருக்கோலம் அருட்கோலமே
தேவியின் சந்நிதி
தேடினால் நிம்மதி
தேவைகள் ஈடேறுமே
ஓவியம் காவியம்
உயர்தனிக் கலைகளின்
உயிரெல்லாம் அவள்ஜாலமே
மேவினள் ஈஷாவில்
மேதினி ஈடேற
மேன்மைகள் நமதாகுமே