Friday, October 25, 2013

போதிதர்மர்- அகலாத மர்மங்கள்



அறிய வேண்டிய ஆளுமைகள் ஆயிரமாயிரம் என்றாலும் அறிந்தே ஆக வேண்டிய ஆளுமைகளாக காலம் முன்னிறுத்தும் கம்பீரமான ஆளுமைகளில் ஒருவர், போதிதர்மர்.ஜென் தியான மார்க்கத்தின்
பிதாமகர்களில் ஒருவராகக் கருதப்படும் இவரை வண்ணத்திரை புதிய தலைமுறையின் பார்வைக்குக் கொண்டு வந்தது.
  
போதிதர்மர் பற்றிய முரண்பட்ட பல தகவல்கள்
கலவையாகக் கலந்து கிடக்கின்றன.அப்படியிருந்தாலும் தமிழகத்திலிருந்து
சென்ற இளவரசர் சீன மண்ணின் வழிபாட்டுக்குரிய குருவாய் வளர்ந்தார் என்பது எல்லா வகையிலும் பிரம்மிக்கத்தக்க வரலாறுதான்.

ஏழாம் அறிவு படத்தில் வருகிற அம்சங்களையும் கடந்து சில தகவல்கள்
போதிதர்மன் குறித்து கிடைக்கின்றன. பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் பவுத்தம் தமிழகத்தில் செல்வாக்கு பெற்றிருந்த
நிலையில்,பல்லவ மன்னன் கந்த வர்மனின் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் போதிதர்மர். குடும்பத்தில் கடைசிப்பிள்ளையை பௌத்த சமயத்துக்கு அர்ப்பணிப்பதென்ற மரபுப்படி பௌத்த வர்மனை கந்தவர்மன் குருகுலத்திற்கு அனுப்ப, பிரஜ்னதார குரு என்பவரிடம் அனுப்பப்பட்டு அவர் போதிதர்மன் ஆகிறார். போதிதர்மனின் இயல்பான அறிவும் களரி
குங்ஃபூ போன்ற வீர வெளிப்பாடுகளும் பிரஜ்னதார குருவை பெரிதும் கவர தன்னுடைய மடாலயத்தின் குருவாக போதிதர்மனை நியமித்தார் என்றொரு கருத்து நிலவுகிறது.

கந்தவர்மன் மரணப்படுக்கையில் இருந்தபோது, மூன்றாவது மகனையே பட்டத்திற்கு நியமித்ததாகவும் அதனால் சகோதரர்கள் போதிதர்மனை கொல்ல முயன்றதாகவும் இன்னொரு கதை நிலவுகிறது.
ஆனால் போதிதர்மர் ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபட்டு சீனா செல்ல
முயன்றதாகவும், அப்போது பல்லவ மன்னனாக இருந்த போதிதர்மனின் அண்ணன் மகன் தன் சித்தப்பாவை சீன அரசன் ராஜ மரியாதையுடன் வரவேற்க வேண்டிய ஏற்பாடுகள் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

பௌத்தத்தில் மதிக்கத்தக்க இடத்தைப் பெற்ற போதிதர்மரை சீன அரசர் மரியாதையுடன் வரவேற்க பரிந்துரை கூட தேவைப்பட்டிருக்காது. அப்போது நடந்தவொரு விசித்திரமான சம்பவம் பற்றி ஓஷோ ஓரிடத்தில் சொல்கிறார்.அரச மரியாதை போன்ற சடங்குகளிலும்
சம்பிரதாயங்களிலும் போதிதர்மனுக்கு பெரிய விருப்பம் ஏதுமில்லை.எனவே
அரசரும் மக்களும் பெருந்திரளாக வரவேற்கக் காத்திருக்கும் வந்தடைந்த போது,தன்னுடைய காலணிகளைத் தலையில்
தூக்கி வைத்திருந்தாராம்.அரசர் காரணம் கேட்டபோது,"இவை என்னை எவ்வளவு தூரம் சுமந்திருக்கின்றன!! இவற்றை சிறிது நேரம் சுமப்பதில் என்ன தவறு?" என்றாராம். தலையில் மகுடத்தை சுமப்பது பெரிய விஷயமும் இல்லை, காலணிகளை சுமப்பது கேவலமும் இல்லை
என்ற புரிதலை அரசனுக்கு ஏற்படுத்தவே இது நடந்தது போலும்!

போதிதர்மர் சீனாவை சென்றடைந்தது ஐந்தாம் நூற்றாண்டென்று
கருதப்படுகிறது.அநேகமாக அவர் நான்காம் நூற்றாண்டில் பிறந்தவராய் இருக்க வேண்டும். கி.பி547 ல் யாங் சூவான் சி என்பவர் எழுதிய
புத்தகத்தில் யாங் நிங் ஆலயத்தில் அவர் போதிதர்மரை சந்தித்ததாகவும்
அப்போது போதிதர்மருக்கு வயது நூற்றைம்பது என்றும் குறிப்பிடுகிறார்.அவர் சென்னையிலிருந்து கடல்வழியாக கங்ஸாவூ என்னும் இடத்திற்கு வந்து அங்கிருந்து தரை மார்க்கமாக நன்ஜிங் வந்ததாக சிலர் கருதுகிறார்கள். இன்னும் சில ஆய்வாளர்கள்,அவர் நிலம் கடந்து பாலைவனங்கள் கடந்து கால்நடையாகவே மஞ்சள் நதிக்கரை வந்தடைந்தார் என்கிறார்கள். எப்படியிருந்தாலும் அது ஆபத்துகளைத் தாண்டிவரும்
அதிதீரப் பயணம்தான்.

கி.பி.465 முதல் 550 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்த வூ டாய் என்ற அரசரின்
அரசவையில் சிறிது காலம் போதிதர்மர் இருந்தார் என்று கருதப்படுகிறது.பின்னர் சீனாவின் வடபகுதிக்கு நகர்ந்த
போதிதர்மருக்கு பௌத்தர்களிடமிருந்தும் சில எதிர்ப்புகள்
கிளம்பியிருக்கின்றன.பௌத்த நூல்களுக்கு புத்த விகாரங்கள் அதிக
முக்கியத்துவம் தருவதை அறிந்த போதிதர்மர்," ஞானமடைவதற்கான கருவிகளே புத்தகங்கள். புத்தகங்களே உங்களுக்கு ஞானம் தந்துவிடாது"என்று சொல்லவும் சிலர் கடுப்பானார்கள்.
போதிதர்மருக்கு எதிர்ப்பானார்கள். "ஞானம் அடையும் வழியில் புத்தர்
எதிர்ப்பட்டால் அவரையும் கொல்" என்பது போன்ற சூட்சுமமான ஜென்,அவர்களின் புரிதல் எல்லைக்கு அப்பாற்பட்டிருந்தது ஆச்சரியமில்லை.

அதன்பின்னர் போதிதர்மர் வந்து சேர்ந்த இடம்,ஹெனன் பகுதியில் உள்ள ஷாவொலின் ஆலயம். 495ல் இங்கே வந்து சேர்ந்த போதிதர்மர் ஒன்பது வருடங்கள் மௌனத்தில் இருந்தாராம்.இந்தியாவில்
போர்வீரர்களுக்கு தரப்பட்ட மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தற்காப்புப்
பயிற்சிகளைத்தான் அவர் சீனநாட்டில் போதித்தார்.இதற்கொரு சுவாரசியமான காரணமும் சொல்லப்படுகிறது.தன்னுடைய தியான மார்க்கத்தின் தீவிரத்தன்மையைத் தாங்க முடியாத அளவு சீனத் துறவிகள் பலரும் பலவீனமாக இருப்பதைப் பார்த்து இந்த தற்காப்புப் பயிற்சிகளை துணைப்பாடங்களாகத்தான் தந்திருக்கிறார் போதிதர்மன்.

எந்தப் பயிற்சி இருப்பதிலேயே  சிரமமோ அதை முயலுங்கள்" என்கிற சித்தாந்தத்தில் ஒவ்வோர் உடம்பையும் புடம் போடுவது போல்
பக்குவம் செய்து தந்தார் போதிதர்மன்."சஞ்சின் கதா" என்ற பெயரில்
போதிதர்மர் போதித்த கலையிலிருந்து பிறந்ததே கராத்தே.என்கிறார்கள். அதேபோல கிபா தாச்சி என்ற முறையும் போதி தர்மரால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான்.குனிந்திருக்கும் குதிரை போன்ற
இந்த ஆசனம் உடற்பயிற்சியாகவும் தியானமாகவும் இருக்கிறது.

ஓர் ஊதுபத்தி எரிந்து முடிகிற நேரம்-அதாவது ஒருமணிநேரம் வரை அந்த
ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கடும் பயிற்சியை போதிதர்மர் தந்த
பொக்கிஷங்களில் ஒன்று என்கிறார்கள்.
தன்னுடைய போதனைகள் எழுதப்படக்கூடாதென்றும் நேரடி போதனையாகவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தரப்பட வேண்டுமென்றும் போதிதர்மர் மிகவும் உறுதியாகக்
கூறிவிட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் தசைமாற்றம் மஜ்ஜை மாற்றம் போன்றவை குறித்த போதிதர்மரின் போதனைகள் புத்தக வடிவம் பெற்றன.இரத்ததையும் மஜ்ஜையையும் தூய்மை செய்து,அதன்மூலம் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி அதையே ஞானமடையும் பாதையாகப்
பயன்படுத்தும் யுக்திகள் போதிதர்மரின் கொடைகளாகத் தொகுக்கப்பட்டன.

அவருக்கு விஷம் கொடுத்துக் கொன்றார்கள் என்பது போன்றவற்றுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை.அதேநேரம் அவர் எந்த வயதில் எப்படி இறந்தார் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை. முற்றாகவும் முழுதாகவும் பொழிந்துவிட்டுக் கரைந்து போகும் முகில்களுக்கு முகவரிகள்இல்லாதது
போல்;போதிதர்மரின் வாழ்வு பற்றிய  செய்திகள் கைவசமில்லை.ஆனால் அந்த ஆளுமையிடமிருந்து நாம் அறிய வேண்டிய செய்தி இதுதான். கலைகள் எத்தனை அரிதானவை என்றாலும் அவை
ஞானம் அடைவதற்கான கருவிகளே! த்ற்காப்புக் கலையிலும் இருக்கிறது
தியானத்தின் அம்சம்!!