அர்ச்சனை நேரத்தில் இட்டமலர்
அரைநாள் சென்றால் சருகாகும்
உச்சி முகர்பவர் சொல்லொருநாள்
உதறித் தள்ளும் பழியாகும்
பிச்சியின் கூத்துகள் இவையெல்லாம்
பாடம் நமக்கு நடத்துகிறாள்
இச்சைத் தணலை அவித்துவிட்டு
இலையைப் போடவும் சொல்லுகிறாள்
மண்ணில் இறக்கி விட்டவள்தான்
மழலை ஆட்டத்தை ரசிக்கின்றாள்
கண்கள் கசக்கி அழுவதையும்
கண்டு தனக்குள் சிரிக்கின்றாள்
எண்ணி ஏங்கி அழுகையிலே
இடுப்பில் சுமக்க மாட்டாளோ
வண்ணப் பட்டால் விழிதுடைத்து
விளையாட்டுகளும் காட்டாளோ
படுவது பட்டுத் தெளிவதுதான்
பக்குவம் என்பாள் பராசக்தி
கெடு வைப்பதற்கு நாம்யாரோ
கேட்டால் சிரிக்க மாட்டாளோ
விடுநீ மகனே வருந்தாதே
விடியும் என்று சொல்கின்றாள்
தடுமாறாமல் துயிலவிட்டு
தானாய் நாளை எழுப்பிடுவாள்
அன்னையின் பிள்ளைகள் நாமெல்லாம்
அவலம் நேரப் போவதில்லை
முன்னை வினைகள் முகங்காட்டும்
முள்ளை எடுத்தால் சோகமில்லை
இன்னும் அழுதால் அழுதுவிடு
இமைகள் துடைத்துத் தொழுதுவிடு
மின்னும் சிரிப்புடன் எழுந்துவிடு
மாதங்கி பதங்களில் விழுந்து எழு