Sunday, October 13, 2013

வழிகாட்டாய்


 மனக்கேடு கொண்டெழுப்பும் கோட்டை-அது
  மணல்வீடாய் சரிந்துவிழும் ஓட்டை
 குணக்கேடு தீரேன்நீ பராசக்தி பாரேன்என்
  ஏட்டை-என்ன -சேட்டை

குச்சியிலே கோடிழுத்தா கோலம்?-எனை
குற்றம்சொல்லி துப்புதடி காலம்
உச்சகட்டம் என்நடிப்பு உள்ளகதை உன்நினைப்பு
தூலம்-அலங்-கோலம்

 கோயிலுக்குள் நின்றுகொண்ட கள்ளி-இவள்
  கொஞ்சுகிறாள்பிள்ளையினைக் கிள்ளி
 தாய்மிதித்துப் பிள்ளையழ நாமங்களை சொல்லியழ
  தள்ளி -சென்றாள்-துள்ளி
   
எத்தனைநாள் இப்படியுன் ஆட்டம்-என்
இமைநடுவே கண்ணீரின் மூட்டம்
வித்தகியுன் கைவிரல்கள் பற்றியிங்கே பலவகையாய்
காட்டும்-பொம்ம- லாட்டம்

இப்போதென் அழுகுரலைக் கேட்டாய்-எனை
இப்படியே விட்டுவிட மாட்டாய்
தப்பேது செய்தாலும் கற்பகமே உன்கரங்கள்
நீட்டாய்-வழி-காட்டாய் 


இவ்வளவு நாள்பொறுத்தேன் தாயே-இந்த
இன்பதுன்பம் அத்தனையும் நீயே
கவ்வுகிற பேய்முதலை கால்நெருங்க உள்ளமிரங்
காயே-மஹா-மாயே