குகைப்பெருமான் -6

பிரசாதக்கடை வைத்திருக்கும் பெரியவர் தேவசேனாபதி அய்யாவை சமீபத்தில் பார்த்த போதுதான் இன்னொருவிஷயமும் தெரிந்தது.அவருடைய சம்பந்தி,அமரர் கவிஞர் தடாகம் இளமுருகு என்பதுதான் அது.அவரும் தென்சேரிமலை வேலாயுதசாமியையும் அடிவாரத்தில் உள்ள குகைப்பெருமானையும் பாடியிருக்கிறாராம்.முருகன் பக்திப்பாடல்களை விரும்பிக் கேட்கும் நேயர்களுக்கு கவிஞர் தடாகம் இளமுருகுவை நன்கு தெரிந்திருக்கும்.


சூலமங்கலம் சகோதரிகள் பாடிய புகழ்பெற்ற பாடலொன்று அவர் எழுதியதுதான்."சுட்டதிருநீறெடுத்துதொட்ட கையில் வேலெடுத்து தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம்!கட்டழகானதொரு கந்தவடிவேலவனைக்காட்டுவது ஆறெழுத்து மந்திரம்"என்ற பாடல் அது.

என்னுடைய நண்பர் வளர்கவி இராதாகிருஷ்ணனுக்கு இளமுருகு அசிரியர்.இந்தப் பாடலை வளர்கவிஅடிக்கடி சிலாகித்துச் சொல்வார்.குறிப்பாக,குன்றுதனில் நின்றுவளர் கன்றுவழங்கும் நமக்கு
என்றும்வளர் செல்வம் பதினாறுமே!என்ற வரியை அவருடைய வாய் அடிக்கடி முணுமுணுக்கும்.
முருகனைப்பற்றி ஏராளமான இசைப்பாடல்களை எழுதியிருக்கிறார் இளமுருகு.சூலமங்கலம் சகோதரிகள்பாடிய,"கோபுர வாசலிலே உன் கோலம் தெரியுதய்யா!கொஞ்சும் தமிழ்கேட்டு உன்முகம் குறுநகை
புரியுதய்யா!" என்ற பாடலும்,மாஸ்டர் மகராஜன் பாடிய "தென்பழனிக் குன்றத்திலே தென்றல்வரும் மன்றத்திலே அன்பழகன் வீற்றிருந்தான் அழகாக!அவன் அங்கிருந்து காட்சிதந்தான் அருளாக!" என்ற
பாடலும் தடாகம் இளமுருகு எழுதிய பாடல்களில் முக்கியமானவை.தன் வாழ்வின் அந்திமக்காலத்தில் தன்னுடைய ஆசிரியர் இளமுருகு,கல்கி பகவானின் சீடராகமாறியிருந்த செய்தியை வளர்கவி என்னிடம் சொன்னார்.இறைவன் எல்லாம் நிறைந்தவன்.சர்வ வல்லமை பொருந்திய கடவுளர்கள்,ஒருவருக்கொருவர் உறவினர்களாகவும் இருக்கிறார்கள்.
அவனையே நம்பியிருக்கும் அடியார்களோ ஒருவருக்கொருவர் உறவு கொண்டாடி,இறைவனேகதியென்று இணைந்து பாடிப் பரவசம் பெறுகிறார்கள்.இறைவன்மேல் பிடிப்பும் உரிமை கலந்த
சலிப்பும் உருவாகும் விதமாக,துதிமலர்களில் இடம்பெற்ற பாடல் இது.தனைவெற்றி கொள்ளவே தெய்வங்கள் இல்லாருன்

தாய்தந்தை யாகவுள்ளார்

தடைகளை நீக்கியே துணைசெயும் இறைவருன்

தமையனா ராகிநின்றார்

வினைவெற்றி வழங்கிடும் அரங்கரோ மாமனாய்

வளர்நகை பூத்து நின்றார்

வலம்நல்கும் திருமகள் நினக்கொரு மாமியாய்

வாஞ்சையே காட்டுகின்றார்

தினைமுற்றும் வனந்தனில் வளர்வள்ளி அம்மையொரு

துணையாக சேர்ந்துநின்றார்

தனித்தபேர் எழிலாளும் தெய்வானைத் தாயுமோர்

இணையாக வந்துநின்றார்

வினைமுற்றும் எளியனின் நினைவேநீ கொள்ளாமல்

விடுவதில் வியப்பில்லையே

சுனைபொங்கும் தென்சேரி அடிவாரம் வளர்பால

தண்டா யுதபாணியே