குகைபெருமான் -4

செஞ்சேரிமலை குகைப்பெருமானுக்கு மற்ற முருகன் கோவில்கள் போலவே ஆடிக்கிருத்திகை மிகவும் விசேஷம்.காலையில் அபிஷேக ஆராதனைகள், இரண்டு மூன்று சொற்பொழிவுகள், மதியம் அன்னதானம் என்று  அமர்க்களப்படும்.

அப்படியொரு ஆடிக்கிருத்திகையின் போது தவத்திரு சிவப்பிரகாச  சுவாமிகள், தமிழ்ப்புலவர் ஒருவர், நான் ஆகியோர் உரைநிகழ்த்தினோம்.  சிவப்பிரகாச  சுவாமிகள்  கோவை  மாவட்டத்தில்  தோன்றியவர். வள்ளலாரின் சன்மார்க்க  நெறியில் ஈடுபட்டு, வடலூரில்  தொடர்ந்து அன்னதானங்கள்  நிகழ்த்தி  வருகிறார். நம்காலத்தில் வாழ்கிற பெரிய அறிஞர்.இப்போது, சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட  விபத்து  காரணமாக வேன் பயணம், சக்கர  நாற்காலி என்று அவரின்  பயண  முறைகள்  மாறிவிட்டாலும் எளிவந்த  தன்மையும் இன்முகமும் இன்றும்  மாறவில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் ராமச்சந்திரன் செட்டியார் கடையில் உட்கார்ந்து கொண்டிருந்த போது, "அதோ வருகிறாரே,அவர்தான் சிவப்பிரகாச சுவாமிகள்"என்று வெங்கிடாஜலக் கவுண்டரின் விரல் நீண்டதிசையில் பார்த்தேன்.

நல்ல உயரம். வெள்ளாடை. மழிக்கப்பட்ட தலை. திருநீறு ஒளிபொருந்திய கண்கள். இதழ்களில் நிலையாகவே தங்கிவிட்ட புன்னகை. எல்லோரிடமும் ஏனுங்க-சொல்லுங்க என்று  "இங்க"  போட்டுப் பேசும் கொங்குதமிழ். அன்று  அவர் தந்திருந்த தலைப்பு, "ஆடியில் தோன்றிய முருகன்". முருகப்பெருமான் பிறப்பிறப்பு இல்லாத கடவுள். "பெம்மான் முருகன் பிறவான் இறவான்' என்பார் அருனகிரிநாதர்.இவரோ ஆடியில் தோன்றிய முருகன் என்று தலைப்புக் கொடுத்திருக்கிறாரே என்றுசேர்மன் வெங்கிடாஜலக் கவுண்டர் உட்பட எங்கள் எல்லோருக்குமே குழப்பம். சுவாமிகளிடம் கேட்க முடியாது. சேர்மன் வெங்கிடாஜலக் கவுண்டர் என்னைப் பார்த்த பார்வையில் "நீங்கள்எவ்வளவோ தேவலை" என்ற குறிப்பு தோன்றியது.
நான் அன்று பாரதியாரின் பாஞ்சாலி சபதம் குறித்துப் பேசினேன். அதற்கும் ஆடிக்கிருத்திகைக்கும்  என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்.  அப்போதுதான் பாஞ்சாலி சபதம் படித்து பல பாடல்களை மனனம் செய்திருந்தேன்.  இந்த சம்பந்தம் போதாதாக்கும்!!
ஒருவழியாக சுவாமிகள் பேசத்தொடங்கினார். வள்ளலாரின் வரலாற்றை ஆரம்பித்து,வள்ளலாருக்கு மானசீக குருவாக முருகன் இருந்ததை உருக்கமாக விளக்கி,நிலைக்கண்ணாடியில் வள்ளலாருக்கு முருகன்  காட்சி கொடுத்ததை, "ஆடியில் வந்த முருகன்"என்று கொண்டுவந்து நிறுத்திய போதுதான்சூட்சுமம் புரிந்தது.இயல்பான நகைச்சுவையும்,கூட்டத்தினர் தம்மை மறந்து சிரிக்கும்போது அவர்களுடன் சேர்ந்து கலகலவென்று சிரிக்கும் பாங்கும் சிவப்பிரகாச சுவாமிகளின் இயல்புகள்.

மிகச்சமீபத்தில் சுவாமிகளை ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன்.அமைப்பாளர் அவருக்கு சால்வை அணிவித்தார். "நமக்கு அய்யா சாலவை அணிவிச்சாங்க. அதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு தானுங்க போடோணும்.
அரசியல்வாதிகளுக்கு ஏன் சால்வை போடறாங்க தெரியுங்களா? இவங்களுக்கு ஏதாவது பிரச்சினை சால்வ்ஆகலையின்னா அவங்களுக்கு சால்வை போடறாங்க"என்று தன்னுடைய பாணியில் நக்கலடித்துவிட்டு
அடுத்த நிமிடமே அபாரமான இலக்கியச்செய்திகளையும பரிமாறிக்கொண்டிருந்தார் சுவாமிகள்.அவரை எனக்கு அறிமுகம்  செய்வித்த  குகைப்பெருமானுக்கு நான் எழுதிய இன்னொரு துதிமலர் இங்கே 

நாவினில் இனிக்கின்ற திருப்புகழ் நெஞ்சத்தின்
    நலிவினைத் தீர்க்கின்றது
    ஞானவேற் கந்தனின் திருநீறு,மேனியின்
    நோயினைத் தணிக்கின்றது
வாழ்வினிற் துணையென வஜ்ரவேல் திகழ்ந்தொரு
    வலிமையைத் தருகின்றது
    வளங்களும் நலங்களும் கந்தனின் அடியவர்
     வாசலில் குவிகின்றது
காவியம் நெஞ்சினில் கருப்பெற,கவித்துவம்
     கனிவுடன் வளர்கின்றது
     கருத்தெலாம் முருகனின் கனிமுகம் நிறைந்துயர்
     அருளினைத் தருகின்றது
தாழ்விலா இகநிலை,தளர்விலா மனநிலை
      நின்பெயர் கூற வருமே
       தென்சேரி அடிவாரம் திகழ்கின்ற குகைபால
        தண்டா யுதபாணியே
(தொடரும்)