நீர்க்குடத் தளும்பலின் நிமிஷத் தெறிப்பாய்
வேர்த்தடம் தெரியும் வேம்பின் நிழலாய்
பூத்துச் சிரிக்கப் போகிற அரும்பாய்
சேர்த்து வைத்த மயிலிறகுகளாய்
உள்ளே சிலிர்க்கிற சிலுசிலுப்புக்குள்
ஊடே வருபவை உன்ஞாபகங்கள்..
பிரியாப் பிரிவின் பார இலகுவை
சரியாய் உணரக் கிடைத்த சந்தோஷம்
சின்ன வலியின் மின்னல்கள் அனுப்பி
என்னுள் மழையைத் தொடங்கி வைக்கையில்
வாசனைச் சரங்களை விசிறும் பூமி
கால்பதியாது குதியிடும் காற்று
சூட்டை அணைத்து கண் சிமிட்டும் சூரியன்
சாட்டைக் கிரணங்கள் சொடுக்கும் நிலவு
மூச்சின் வெம்மையில் குளிர்காய்வதற்கு
எத்தனிக்கும் எரிமலைக் குழம்பு
வெளிச்சத்திரையை விலக்கிக் கொண்டு
வெளியே வருகிற நட்சத்திரங்கள்
அகலாப் பார்வையை அழுந்தப் பதிக்கையில்,
அனிச்சையாய்ப் புரண்ட நீ எனது தோள்களில்
பல்முனை பதிய சிறுதுயில் கொண்டாய்;
ஆகாயத்தின் ஆதங்கப் பார்வையை
அலட்சியப் படுத்தும் விதமாய் நானும்
இந்தக் கனவை இழுத்துப் போர்த்தினேன்
2 comments:
கவிதையும் அழகு!அதற்கான படம் கொள்ளை அழகு!!
நன்றி முருகேஸ்வரி
Post a Comment