போறாளே பொன்னுத்தாயி...

பல வருடங்களுக்கு முன்,நெருங்கிய உறவினர் இல்லத் திருமணத்திற்காக
திருச்சியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கினேன்.அறைக்குள் நுழைந்தபோது
காதுகளில் வாக்மென் ஒலித்துக் கொண்டிருந்தது.தொலைக்காட்சியை இயக்கியபோது,டயானாவின் இறுதி ஊர்வலம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

வாக்மென்னை அணைப்பதற்கு பதில் தொலைக்காட்சி ஒலியைக் குறைத்துவிட்டுவாக்மெனில் ஒலித்த பாடலைக் கேட்டுக் கொண்டே காட்சியைப் பார்த்தேன்.ஒலித்த பாடல்,"போறாளே பொன்னுத்தாயி பொலபொலவென்று கண்ணீர் விட்டு..தண்ணீருஞ் சோறுந் தந்த மண்ண விட்டு!பால்பீய்ச்சும் மாட்ட விட்டு,பஞ்சாரத்துக் கோழிய விட்டு-போறாளே பொட்டப் புள்ளஊர விட்டு"

டயானாவுக்காகவே பாடப்பட்டது போலிருந்தது.அந்தப் பாடலுக்காக
ஸ்வர்ணலதாவுக்கும் தேசிய விருது கிடைத்தது.பின்னணிப் பாடகி ஸ்வர்ணலதாமரணம் என்ற செய்தி இன்று மதியம் கிடைத்த போது
இந்தச் சம்பவம்தான் என் நினைவுக்கு வந்தது.

இசை ஆல்பங்களுக்காக நான் எழுதிவரும் பல பாடல்களில் சிலவற்றை
ஸ்வர்ணலதா பாடியிருக்கிறார்.உலகின் அன்னை என்ற தலைப்பில் அன்னைதெரசா பற்றிய ஒலிநாடாவில் நான் எழுதிய இரண்டு பாடல்களை அவர் பாடினார்.அப்போதுதான் அவர் எனக்கு அறிமுகம்.

யாரும் உன்பிள்ளைதான் -இந்த பூமிமீது
யாரும் உன் பிள்ளைதான்
என்ற பாடலில்,

தீயின் நாவு தீண்டினாலும்
தாயின் நாவில் ஏசு நாமம்

என்ற வரிகளைப் பாடும்போது அவர் கண்கள் கலங்கியிருந்தன.
ஸ்வர்ணலதாவின் தாய்மொழி மலையாளம் எனினும்,பாடல்களை கன்னடத்தில்எழுதிவைத்துக் கொண்டுதான் பாடுவார்.

பாடலை எழுதத்தொடங்கும் முன் டைரியின் மேலிரண்டு ஓரங்களில்
இசையமைப்பாளர்பெயரையும்,பாடலாசிரியர் பெயரையும் எழுதி வைத்துக் கொள்வது பாடகர்கள்வழக்கம்.மரபின் மைந்தன் முத்தையா என்று கன்னடத்தில் எழுத மிகவும் சிரமப்படுவார் அவர்."பாரிஸ் கிளியே பாரிஸ் கிளியே சாரல்மழையில் என்ன சுகமோ"
என்ற என் பாடலில்,"வைரமுத்துவும் என்னைப்பற்றித்தான் காதல்
கவிதை பாடிக்குவிப்பார்!பாப்பையாவுமே எந்தன் அழகை பட்டிமன்றத்தில்
பேசி ரசிப்பார்"என்ற வரிகள் சரணத்தில் இடம் பெற்றிருந்தன.அந்த வரிகளைப்பாட மிகவும் தயங்கினார்."எழுதியவர் வைரமுத்துவுக்கு வேண்டியவர்தான்"என்று யானிதேஷ் சொன்னபின் தயக்கத்துடன் பாடிக் கொடுத்தார்.

நான் பார்த்த வரையில் பின்னணிப் பாடகிகளில்,ஒலிப்பதிவுக்கு வந்த இடத்தில்அதிகம் பேசாதவர் அவர்.உயரம் உயரமாய் உடன்வரும் அவருடைய அண்ணன்கள்பாட்டுக்கானதொகை பேரங்களில் ஈடுபட்டு முடிக்கும் தறுவாயில் பாடலை எழுதிக்கொள்ளத் தொடங்குவார்.பாடும்போது தான் ஏதேனும் தவறுசெய்தால்,இசையமைப்பாளர் சுட்டிக் காட்டும் முன்பே நாக்கைக் கடித்துக்கொண்டு,"ஒன் மோர்" என்று தயாராகிவிடுவார்.
இசையமைப்பாளரின் தேவையறிந்து எதிர்பார்ப்புக்கும் மேலாக பாடிக் கொடுப்பதில் ஸ்வர்ணலதா கைதேர்ந்தவர்.புறப்படும் போது,பாட்டு ரொம்ப நல்லாயிருக்கு என்று இசையமைப்பாளரிடமும் பாடலாசிரியரிடமும் சொல்ல அவர் தவறியதேயில்லை.ஒருசில ஆண்டுகளாகவே அவர் லைம்லைட்டில் இல்லை.

என் பாடல்களுக்கு வழக்கமாக இசையமைக்கும் யானிதேஷ்,ஸ்வர்ணலதா
கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்பது குறித்து ஏனோ அடிக்கடி
கவலைப்படுவார். நுரையீரல்பாதிப்பால் 37 வயதில் அவர் மறைந்தார்
என்கிற தகவல் அதிர்ச்சியாய் இருக்கிறது.அமைதியான முகமும்,சோர்வான புன்னகையும்,தொழிலில் காட்டிய கவனமும் மனதில் வந்து வந்து போகின்றன.

"பொதிமாட்டு வண்டிமேலே போட்டு வச்ச மூட்ட போல போறாளே பொன்னுத்தாயி"என்றஅவர் பாடிய பாடலே அவரை வழியனுப்பட்டும்.
ஸ்வர்ணலதாவுக்கு என் அஞ்சலிகள்.