Wednesday, September 24, 2014

வியாச மனம்-3 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)

ஆளுமைகள் மீது நாம் கட்டமைக்கும் பிம்பங்கள் அளவில்லாதவை. அவர்களின் எல்லா பக்கங்களையும் கணக்கிலெடுத்துக் கொள்வதென்பது, அவர்களின் படுக்கையறையில் எட்டிப் பார்ப்பதல்ல. அவர்களை நிறைகுறைகளுடன் புரிந்து கொள்வது. மகத்துவம் பொருந்தியவர்களாய் மட்டுமே சித்தரிக்கப்படுபவர்கள் ,மறுவாசிப்பில் பகிரங்கமாகிற போது நம்முடன் இன்னும் நெருக்கமாகிறார்கள்.


சந்தனு தன் மகன் தேவவிரதனின்  இளமையை வாங்கிக் கொண்டு வாழ்ந்தார் என்பதும் ஒர் உபசார வழக்குதான். ஒருவகையில்.தேவவிரதனின் பிரமச்சர்யம் அவனை என்றும் வளரிளம் சிறுவனாக மட்டுமே கற்பனை செய்து தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ளும் சலுகையை சந்தனுவுக்கு வழங்கியதோ என்னவோ. மகன் தனியனாய் இருக்கும் வரை தன் தனிப்பட்ட சுதந்திரம் கேள்விக்குட்படாதது என்கிற எண்ணம் நடுத்தர வயது ஆண்கள் பலருக்கும் உண்டு.


சந்தனுவை முதற்கனல் அவனுடைய மரணத்தை முன்வைத்தே அறிமுகம் செய்கிறது.அந்தச் செய்தி வெளியாகும் தருணத்தை சூட்சும சமிக்ஞைகள் மூலம் முதற்கனல் சொல்கிறது.காரணம்,அது ஓர் அரசனின் மரணம் மட்டுமல்ல என்பதைக் குறிப்பால் உணர்த்துவதே நூலாசிரியரின் நோக்கம்.
 

 தொலைக்காட்சி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்தில்,தலைவர்கள் உடல்நிலை கவலைக்கிடமென்றால்,வானொலி ஒலிக்கும் பொது இடத்தில் மக்கள் கவலையுடன் கூடி நிற்பது வழக்கம்.
 

அதுபோல அரசருக்கு நிகழும் அசம்பாவிதத்தை உணர்த்த காண்டாமணி எந்நேரமும் ஒலிக்கும் என்னும் அச்சத்துடன் மக்கள் கூடியிருக்கிறார்கள்.அப்போது வெறி மின்னும் கண்களும் சடைவீழ் தோள்களும்,அழுக்காடைகளுமாய் ஒரு பித்தன் கூட்டத்தின் இடையில் வந்து நிற்கிறான்.


"காண்டாமணியின் ஓசை எழுவதற்குச் சில கணங்களுக்கு முன்பு,அரண்மனைக்கு மேலிருந்து ஒரு சிறிய வெண்பறவை எழுந்து வானில் பறப்பதை அவர்களனைவரும் கண்டனர்."அது பறந்து போய்விட்டது.அதோ,அது பறந்து போய்விட்டது"என ஆர்ப்பரித்தான். "சந்திர வம்சத்தின் மணிமுடி மீது வந்தமர்ந்த அந்தப் பறவை,அதோ செல்கிறது.குருவம்சத்தின் முடிவு நெருங்கி விட்டது "என்றான்.கூடியிருந்த அனைவரும் அதைக்கேட்டு நடுங்கி அதிர்ந்து சினம் கொண்டனர்.(ப-60)

அதற்குள்ளாக சந்தனுவின் மரணச்செய்தி வந்து சேர்கிறது.அந்தப் பித்தன்,ஒருகாலத்தில் அஸ்தினபுரியின் புகழ்பெற்ற நிமித்திகனாய் இருந்த அஜபாகன் என்றும் தெரிய வருகிறது.அவனுடைய இரண்டு வாசகங்கள் மிகவும் முக்கியமானவை.ஒன்று சந்தனுவைப் பற்றிய வாசகம்.அது தன் இச்சைக்காக குருகுல மரபின் சீரொழுங்கைக் குலைத்தது பற்றிய கூரிய விமர்சனம்."தர்மத்தின் மேல் இச்சையின் கொடி ஏறிவிட்டது"என்பதே அந்த வாசகம்.அடுத்த வாசகம், சந்தனுவின் இரண்டு பிள்ளைகளான சித்ராங்கதன்,விசித்திர வீர்யன் ஆகியோரின் எதிர்காலம் குறித்த வரைபடம்."வெற்று இச்சை,வீரியத்தைக் கோடைக்கால நதிபோல மெலியச் செய்கிறது.பலமிழந்த விதைகளை மண் விதைக்கிறது" (ப-61).அங்கேயே தன்னுள் வீசும் அனலழுத்தம் தாங்காமல் அஜபாகன் இறந்து போகிறான்.


அதன்பின் பதினாறாண்டுகள் ஆட்சி செய்த சித்ராங்கதன்,வேட்டைக்குப் போகும்போது நீரில் தன்னைப் போலவே தோற்றமளிக்கும் கந்தர்வனைத் தீண்ட எண்ணி நீரிலிறங்கி காணாமல் போகிறான்.இந்தச் சூழலில் பகையரசர்கள் போர்தொடுக்க வருவார்கள் என்னும் செய்தியைக் கையாள குழப்பமான சூழலில் வந்து போகிற அமைச்சர், அஜபாகன் என்னும் சிறுதெய்வத்தின் கோயிலில் நுழைகிறார்.இவன்தான் பதினாறாண்டுகளுக்கு முன்னர் குருகுலத்தின் வீழ்ச்சியை பிரகடனம் செய்த நிமித்திகன்.


சிறுதெய்வங்களுக்கும் கடவுளுக்குமான வேறுபாட்டை நன்குணர முதற்கனல் இங்கொரு வாய்ப்பளிக்கிறது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வங்களானவை மானுட வாழ்வை அவதானிப்பவை. விதியின் தீர்ப்புகளை முன்பே உணர்பவை. இந்தப் பின்புலத்தில் ஒரு காட்சியை ஜெயமோகன் காட்டுவதோடு "பளிச்'சென்று ஒரு வரியையும் எழுதுகிறார்.


"பலபத்ரர் தன் இல்லத்துக்குத் திரும்புகையில் கணிகர் வீதியின் மூன்று முனையில் இருந்த சின்னஞ்சிறு ஆலயத்தருகே ரதத்தை நிறுத்தினார்.உள்ளே ஒரு கையில் ஒருமை முத்திரையும்,மறு கையில் அறிவுறுத்தும் முத்திரையுமாக சிறிய கற்சிலையாய் அஜபாகன் அமர்ந்திருந்தான்.அருகே கல்லகலில் சுடர்மணி அசையாமல் நின்றது.

அந்தத் துயரம் நிறைந்த கண்களையே சிலகணம் பார்த்துநின்ற பலபத்ரருக்கு,தெய்வங்களின் கண்களில் துயரம் மட்டுமே இருக்க முடியுமென்று பட்டது.ஏனென்றால் அவை முடிவற்ற காலத்தில் மானுட வாழ்க்கையைப் பார்த்து நிற்கின்றன." (ப-66)

இறந்து பதினாறாண்டுகளில் சிறுதெய்வமாகக் கொண்டாடப்படுகிறான் அஜபாகன்.குருகுலத்திற்கு ஆபத்து வருமோ என்னும் அச்சத்தில் பலபத்ரர் தன்னையுமறியாமல் அவன் ஆலயத்தில் சென்று நிற்கிறார்.தன் கண்முன் கண்ட நிமித்திகனின் சிறுதெய்வ அதிர்வுகளை துணைக்கழைக்கும் இந்தத் தவிப்பு மிகத் துல்லியமாய் பதிவாகியிருக்கிறது.

சோ.தர்மனின் தூர்வை நாவலில் இப்படியொரு பாத்திரம் வரும்.பெரியபிள்ளை என்பவர் மாய மந்திரங்களில் வல்லவர். தன் கிராமத்தில் உள்ள ஒருவனின் பூசணித் தோட்டத்திற்குச் சென்று ஒரு காய் கேட்பார்."காலங்கார்த்தால ஓசிமயிரு கேக்க வந்துட்டீர்ல,நெறபொலியில கழுத வாய வச்சாப்ல' என அந்த மனிதன் சலித்துக் கொள்ள,"மனுசங்க கேட்டா தரமாட்டீங்கடா! எலிக்குதான் கொடுப்பீங்க" என்றபடியே வந்துவிடுவார்.மாலையில் நூற்றுக்கணக்கான எலிகள் ஒவ்வொரு காயையும் குடைய இவன் பெரிய பிள்ளையிடம் ஓடிப்போய் நிற்பான்.திருநீறு மந்திரித்துத் தந்து, "ஒரு திசைய  மட்டும் விட்டுட்டு தோட்டத்தில எல்லா திசையிலயும் தூவு. தூவுறப்ப பெரியபிள்ள பெரிய பிள்ள ன்னு சொல்லிகிட்டே தூவு' என்பார். விடுபட்ட திசை வழியாக அத்தனை எலிகளும் வெளியேறும்.


சில ஆண்டுகளில் பெரியபிள்ளை இறந்துபோக,சமாதி எழுப்புவார்கள்.அவர் மறைந்த நாளில் படையல் போடுவார்கள்.தோட்டத்தில் எலித் தொந்தரவு நிறைய இருந்தால் பெரியபிள்ளை சமாதியில் வேண்டிக் கொள்வார்கள் என சோ.தருமன் எழுதியிருப்பார்.

ஆதிகாலம் தொடங்கி சிறுதெய்வங்கள் இப்படித்தான் உருவாகின்றன என்று தெரிகிறது.
கங்காதேவிக்கும் சந்தனுவுக்கும் பிறந்த பீஷ்மர்,தேவவிரதனாய், மணம் செய்து கொள்ளாமல் வாழ,சத்யவதியின் மீது சந்தனு கொண்ட தீராக்காதலே காரணம் என்பதை பாரதம் சொல்கிறது. 

அந்தக் காதல் எத்தகையது என்பதை ஜெயமோகன் சொல்கிறார்.
"பதினெட்டு ஆண்டுகளும் சத்யவதியின் மேனியின் வாசனையன்றி வேறெதையும் அறியாதவராக அரண்மனைக்குள் வாழ்ந்தார் சந்தனு,ஒவ்வொரு நாளும் புதியநீர் ஊறும் சுனை.ஒவ்வொரு காலையிலும் புதுமலர் எழும் மரம்.ஒவ்வொரு கணமும் புதுவடிவு எடுக்கும் மேகம்,"
(ப-71)
"அன்னை மணம் அறிந்த கன்றின் காதுகளைப் போல அவர் புலன்கள் அவளுக்காகக் காத்திருந்தன"(ப 71-72).
முதல் மூன்று உருவகங்களும், அன்னை-கன்று உவமையும் சந்தனுவின் மிதமிஞ்சிய காதலை சுட்டும் விரல்களாய் நீண்டு கொண்டே போய் "சட்"டென்று வானை முட்டி நிற்கின்றன. அந்த அமுதமே சந்தனுவின் உயிரைப் பருகியது என்பதை உணர்த்தும் விதமாய் முது நிமித்திகரின் சொல்லாய் ஜெயமோகன் எழுதுகிறார்,"கன்றுக்குப் பாற்கடல் மரணமேயாகும்".(ப-72)

"கொற்றவை" நூலில் தன் கருத்தை முன்வைக்க,பழம்பாடல் சொல்லிற்று என்னும் உத்தியைப் பயன்படுத்தும் ஜெயமோகன், முதற்கனலில் தன் குரலை ஒலிக்கச் செய்ய சூதர்களையும் நிமித்திகர்களையும் துணைக்கழைக்கிறார்.


சிலம்பில் கோவலன் மாதவி மீது கொள்வதும் இதே போன்ற தீராக்காதலே ஆகும். புதிய முறையில் மாதவி தந்த இன்பத்தில் கோவலன் "விடுதல் அறியா விருப்பினன்" ஆகிறான். அதற்குக் காரணம், கண்ணகி போல் இல்லாமல் மாதவி "கூடலும் ஊடலும் கோவலற்களித்து" மகிழ்விக்கிறாள்.

ஆனாலும் மாதவியை விட்டு கோவலன் நீங்க ஒரு சிறு ஊடல் போதுமானதாய் இருக்கிறது.அந்த அளவிற்கு கோவலனின் தன்னகங்காரம்  தொழிற்படுகிறது.ஆனால் மாபெரும் குருகுல மரபின் தோன்றலாகவும் சக்கரவர்த்தியாகவும் திகழும் சந்தனு பேரழகியான மீனவப் பெண்ணிடம் தன்னை முற்றிலும் ஒப்புவித்து நிற்கிறான்.


அவ்வகையில் சந்தனு வெறிகொண்ட காதலன்.அத்துடன், இதற்கு முன்னர் கங்காதேவியிடம் கேள்வி கேட்டு,அவளை இழந்த அனுபவமும் ஓர் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

சித்ராங்கதன் இறப்புக்குப் பின்னர்,விசித்திரவீர்யனுக்கு மணமுடித்து வைத்தால் குருகுலம் தழைக்கும் எனும் எண்ணத்தில்,காசி மன்னன் பீமதேவன் தன் இளவரசியருக்கு அறிவித்திருக்கும் சுயம்வரம்  சென்று சிறையெடுத்து வருமாறு சத்யவதி பீஷ்மனுக்கு ஆணை பிறப்பிக்கும் இடத்தில் முதற்கனல் விசை கொள்கிறது.

பீஷ்மனுக்கு சத்யவதி பிறப்பிக்கும் ஆணை,"  நீ காசிநாட்டின் மீது படையெடுத்துப் போ..அந்த மூன்று பெண்களையும் சிறையெடுத்து வா" என்பதாகும் (ப-77).

ஆதுரச்சாலையில் நிரந்தர சிகிச்சை மேற்கொள்பவனாய் பலவீனனாய் இருக்கும் விசித்திர வீர்யனுக்காக மூன்று பெண்களை சத்யவதி சிறையெடுக்கச் சொல்வதில் இருக்கும் அகங்காரத்திற்கும் ஆத்திரத்திற்கும் காரணம்,சுயம்வரத்திற்கான அழைப்பு,  அஸ்தினபுரத்திற்கு அனுப்பப்படவில்லை என்பதே!


அது மட்டுமல்ல.காசி மன்னனிடம் பெண் கேட்டபோது,விசித்திர வீர்யனுக்கு வைத்தியம் செய்பவர்களை அனுப்புமாறும்,அவர்களிடம் கலந்தாலோசித்து முடிவு செய்வதாகவும்  அவன் அனுப்பிய ஓலையையும் சத்யவதி காட்டுகிறாள்.

திருமணத்திற்கு முன் மருத்துவப் பரிசோதனை அவசியம் என இன்று எழுந்திருக்கும் குரலுக்கான முன்னோடி, காசி மன்னன் பீமதேவனோ?


"அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுற்றி ஐம்பத்திநாலு அரிவாள்" என்றொரு பழமொழி உண்டு. வீண் ஜம்பத்தாலும் அகந்தையாலும் உந்தப்பட்டு  இயலாதவனான விசித்திரவீர்யனுக்கு பாரத வர்ஷத்தின் மூன்று பேரழகியரை சிறையெடுக்கச் சொல்வது பெண்மைக்கு ஒரு பெண் இழைத்த மாபெரும் அநீதி.


"அந்த சிற்றரசனுக்கு அத்தனை திமிரா"என்று கொதித்தெழும் பீஷ்மனை தன் ஆயுதமாக்கிக் கொள்கிறாள் சத்யவதி. பெண்களை சிறையெடுக்க அவன் எவ்வளவோ மறுத்தும் உத்திகளால் சம்மதிக்க வைக்கிறாள்.

இதற்கு முந்தைய அத்தியாயத்திலேயே ஒரு சூசகக் குறிப்பு சொல்லப்படுகிறது.


"அஜபாகனின் சொற்களிலிருந்து நிமித்திகர் ஊகித்த கடைசிச் செய்தியை அவர்கள் சத்யவதியிடம் சொல்லவில்லை.  குருகுல மன்னன் சந்தனு இறந்த அன்று அதே முகூர்த்தத்தில், பாரதவர்ஷத்தில் எங்கோ குருவம்சத்தை அழிக்கும் நெருப்பு பிறந்திருக்கிறது என அவர்கள் அறிந்திருந்தனர்.அருந்ததிக்கு நிகரான எரிவிண்மீன் என்ற சொல்,ஒரு பெண்ணைக் குறிக்கிறதென்றும் ஊகித்திருந்தனர்."(ப-62)

அந்த நெருப்பை சிறையெடுக்க சத்யவதி பீஷ்மனை வற்புறுத்தி,அதில் வெற்றியும் கண்டிருந்தாள். தொடர் தோல்விகளுக்கு அடித்தளம் அமைக்கும் வெற்றி அது!!
(தொடரும்)