வியாச மனம்-8 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)


படிக்கும் போதெல்லாம் சற்றே நெருடக்கூடிய திருக்குறள் ஒன்றுண்டு."நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்"என்பதே அது.பிறருக்கு துன்பம் செய்தவர்களே நோய்வாய்ப்படுகிறார்கள் என்பது உண்மையாகவே இருக்கட்டும்.அதற்காக,ஏற்கெனவே நோயில் நொந்து நொம்பலப்படுபவனை இப்படி மறுபடியும் குத்தலாமா என்று திருவள்ளுவரிடம் கேட்கத் தோன்றும்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒருவனை திருவள்ளுவர் பார்க்கப் போனால் அவன் என்ன கதிக்கு ஆளாவான் என்பதை யோசித்துப் பாருங்கள்.

ஹிரோஷிமா குண்டு வெடிப்பு பற்றிய ஓர் ஆவணப்படமுண்டு.உடலெல்லாம் காயமாய் துவண்டு கிடக்கும் சிறுவன் ஒருவனை மருத்துவமனைக்குத் தூக்கி வருவார்கள்.ஏற்கெனவே காயங்களால் துடிக்கும் அந்தச் சிறுவனுக்கு ஊசி போட அவன் முகம் கூடுதல் வலியில் சுருங்க ஏங்கியழுவான். அப்படி ஊசி போடும் மருத்துவராக திருவள்ளுவர் எனக்குத் தெரிகிறார்.ஆம்...அந்தக் குறள் நலன் பயக்கும் ஊசிதான்.

 தான் யாருக்கோ துன்பம் செய்ததால்தான் தனக்கு துன்பம் வந்திருக்கிறது என்னும் எண்ணம் ஏற்பட்டு விட்டால் யார்மீதும் வருத்தம் வராது. அந்த நோயைப் பொறுத்துக் கொள்வதும்,பிறருக்கு துன்பம் செய்யக்கூடாது என்னும் எண்ணமும் ஒரு தவமாகவே மாறிவிடும்.

"உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
  அற்றே தவத்திற் குரு."
என்னும் நிலையை எளிதில் எட்டிவிடலாம்.
1996ல் நான் முதன்முதலாக ஈஷா யோக மையத்தின் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்தேன்.அந்த வகுப்புகளில்  போதனையாக மட்டுமின்றி, வாழ்க்கை அனுபவமாக அவர்கள் நம் எண்ணப் போக்குகளில் நுழைக்கும் அம்சங்களில் ஒன்று, "ஏற்கும் தன்மை".ஏற்கும் தன்மையில் இருப்பவனுக்கு அடிபட்டால் வலிக்காதா என்ற கேள்விக்கு சத்குரு அன்று சொன்னது இன்றும் மனதில் ஆழப் பதிந்திருக்கிறது."வலி இருக்கும்,துன்பம் இருக்காது". There will be pain,but no suffering.

தான் ஒரு நோயாளி என்பதை பிரக்ஞைபூர்வமாக ஏற்றுக் கொண்டவனாக விசித்திர வீரியனை முதற்கனல் காட்டுகிறது.
நூற்றியோரு மருத்துவர்களின் பாதுகாப்பில் ஆதுரச் சாலையில் பன்னிரண்டு ஆண்டுகளாக இருக்கிறான்  விசித்திர  வீரியன்.
அவனுடைய வீரியத்தைப் பெருக்கி எப்படியேனும் ஒரு குழந்தையைத் தரும் தகுதியை உருவாக்க வேண்டும் என்பதற்காக தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் வாஜி கல்ப நிபுணர்கள் வந்து கொண்டேயிருக்க,அவர்களின் அத்தனை பரிசோதனை முயற்சிகளுக்கும் ஆளான விசித்திர வீரியனின் தோற்றம் பற்றிய வர்ணனை பதட்டமூட்டுவதாக இருக்கிறது.


"விசித்திரவீரியன்,சுண்ணாம்பு போல வெளுத்த உடலும்,மெலிந்து நடுங்கும் உதடுகளும்,மஞ்சள் படர்ந்த கண்களும்,கொண்டிருந்தான்.அவன் உடலெங்கும் நரம்புகள் நீலநிற சர்ப்பக் குழவிகள் போலச் சுற்றிப் படர்ந்து,இதயத்துடிப்புக்கு ஏற்ப அதிர்ந்து கொண்டிருந்தன.மெலிந்த கைகால்களில் மூட்டுகள் மட்டும் பெரிதாக வீங்கியிருக்க,தசைகள் வற்றி எலும்புகளில் ஒட்டியிருந்தன.இள வயதில் வந்து வந்து சென்று கொண்டிருந்த மூட்டு வீக்கத்தால் அவன் வெளியே நடமாடி அறியாதவனாக இருந்தான்.ஒவ்வொரு நாளும் பிரம்ம முகூர்த்தத்திலேயே அவன் மருத்துவர்களால் எழுப்பப்பட்டு,பலவகையான மருத்துவ முறைகளுக்கு ஆளாக்கப்பட்டான்.இளமைமுதல் அவன் அறிந்ததெல்லாம் மருத்துவம் மட்டுமே."(ப-128)


நாகபுட மருத்துவத்தில் அவனின் உயிர்வேகம் அதிகரித்ததறிந்து வேசர நாட்டு மருத்துவருக்கு பொன்னும் பாராட்டும்  சத்தியவதி  தந்தனுப்ப,விசித்திர வீரியன் கிடந்த கிடப்பை ஜெயமோகன் இப்படி எழுதுகிறார்.

"சித்திரமெத்தையில் சாய்ந்து நரம்புகளில் விஷம் ஓடும் குளம்படியைக் கேட்டபடி அரைக்கண்மூடிக் கிடந்த விசித்திர வீரியன்".(ப-129)


அவனுக்குத் துணையாக இருக்கும் ஸ்தானிகரிடம்,மருத்துவத்தின் ஒரு பகுதியாக நாகசூதனைப் பாட அனுமதிக்கும்படி கேட்கிறார் வேசர நாட்டு மருத்துவர்.அதன் மூலம் இச்சா சக்தி பெருகும் என்றவர் சொல்ல,ஸ்தானிகர்"அவர் எந்தக் கதைக்கும் காதுள்ளவராகவே இதுநாள்வரை இருந்திருக்கிறார் என்றார்.விசித்திர வீரியன் "காது மட்டும்தான் உழைப்பில்லாமல் பணியாற்றும் உறுப்பு ஸ்தானகரே"என்றான். ஸ்தானகர்,"அதனால்தான் இச்சாசக்தியான நாகங்களுக்குக் காதுகள் இல்லை போலும்"என்றார். விசித்திர வீரியன் உரக்கச் சிரித்தான்.(ப-129)

என் நினைவு சரியாக இருக்குமேயானால்,விசித்திர வீரியன் முதற்கனலில் பேசுகிற முதல் வாசகமே இதுதான்.கடும் நோய்நிலையை வர்ணித்துவிட்டு நோயாளியை சிரிப்பும் கும்மாளமும் மிக்கவனாய் அறிமுகம் செய்கையில் வாசகனுக்குக் கண்கள் மலர்கின்றன.


நாகவிஷம் இச்சா சக்தியை தூண்டக் கூடியதாய் ஏன் அறியப்படுகிறது  என்பதும் முதற்கனலில் விளக்கப்பட்டுள்ளது.ஆலகாலம் உண்ட சிவன், வாசுகியை ஆசீர்வதித்து அனுப்பிவைக்க நாகலோகத்திற்கு வாசுகி திரும்புகையில் கொண்டாட்டம் நிகழ்கிறது.


பன்னிரண்டாயிரம் கோடி நாகங்கள் பிணைந்து நெளிந்தாடி நடனமிட,அந்த அசைவில் பாதாளமே குலுங்கியது.பாதாளம் மீதமர்ந்த பூமி அசைந்தது.நாகங்களின் மதநீரின் மணம் எழுந்தபோது,மண்ணின் மீது நூறாயிரம் காடுகளின் அத்தனை மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்கின.மரங்களுக்குள் அரக்காகவும்,மலர்களுக்குள் தேனாகவும்,கனிகளின் சாறாகவும் நாகங்களின் மதநீரே ஆனது.

நாகமதத்தின் வாசனையை உணர்ந்து மண்மீதிருந்த அத்தனை ஆண்களும் காமம் கொண்டனர்.அத்தனை பெண்களும் நாணம் கொண்டனர்.யானைகள் துதிக்கை பிணைத்தன்.மான்கள் கொம்புகள் பூட்டின.நாரைகள் கழுத்துகள் பின்னின.தேனீக்கள் சிறகுகளால் இணைந்தன. புழுக்கள் ஒன்றை ஒன்று உண்டன."
(ப-133)

ஜெயமோகனை பலரும் ராட்சசன் என்று சொல்வதற்கான காரணங்களை இந்தப் பத்தி நியாயப்படுத்துகிறது.

விசித்திரவீரியனின் ஆன்மாவிலேயே உற்சாகம் படிந்திருப்பதை நாம் உணர முடிகிறது. ஸ்தானிகரிடம் விசித்திரவீரன் மனம் திறக்கும் இடம், அவனை இன்னும் நெருக்கமாய் நாம் உணர வழி செய்கிறது.

"ஸ்தானிகரே! இத்தனை நாளில் ஒருகணம் கூட நான் மரணத்தை அஞ்சியதில்லை என்றறிவீர்களா" என்றான்."எனக்கு நான்கு வயதாக இருந்தபோது,ஒருநாள் காய்ச்சலில் படுக்கையில் இருந்தேன்.என்னைத் தொட்டுப் பார்த்த அரண்மனை மருத்துவர்,அந்திக்குள் நான் உயிர்துறப்பது உறுதி என்று சொன்னார்.நான் கண்களை மூடிக் கொண்டேன்.அந்தி வர எவ்வளவு நேரமிருக்கிறது என்று தெரிந்திருக்கவில்லை.ஆகவே ஒவ்வொரு கணமாக நான் செலவிடத் தொடங்கினேன்,என் அன்னையை எண்ணிக் கொண்டேன்.அவள் வலுவான கரங்களையும் விரிந்த விழிகளையும் கண்முன்னால்  கண்டேன்.என் தமையனின் அழகிய முகத்தையும் இறுகிய சிலையுடலையும் அணு அணுவாகப் பார்த்தேன்.நான் உண்ட இனிய உணவுகளை,பார்த்த அழகிய மலர்களை,கேட்ட இனிய இசையை என ஒவ்வொன்றாக எண்ணிக் கொன்டேயிருந்தேன்.

ஸ்தானிகரே, முடிவேயில்லாமல் வந்து கொண்டிருந்தன நினைவுகள். எவ்வளவு அதிகமாக வாழ்ந்துவிட்டேன் என்று பிரமித்துப் போய்க் கிடந்தேன்.....
அன்று தூங்கிப் போனேன்.விழித்தபோதும் நான் இருந்தேன்.என்மீது குனிந்த அன்னையிடம்,"அன்னையே !நான் சாகவில்லையா?"என்றேன்."விசித்திரவீரியா!நீ இருக்கிறாய்"என்றாள்.அந்த வரி என் ஆப்த வாக்கியமானது.நானறிந்த ஞானமெல்லாம் அதன்மேல் கனிந்ததுதான்.நான் இருக்கிறேன்.அதைப் பலகோடி முறை எனக்குள் சொல்லிக் கொண்டேன்.இங்கே இதோ நானிருக்கிறேன்.அவ்வரியிலிருந்து ஒவ்வொரு கணமும் நான் முடிவில்லாமல் விரிகிறேன்...

ஸ்தானிகர் அவன் முகத்தில் விரிந்த புன்னகையைப் பார்த்தார்.அது காலத்துயர் அணுகாத யட்சர்களின் புன்னகை".(ப-229-230)

நோயின் மீதான சலிப்பை விடவும் நோயையே தன் வாழ்வின் ஆதாரமாக்கிக் கொண்ட விசித்திர வீரியன் உண்மையிலேயே விசித்திரமான வீரியன்தான். இந்த உலகின்மீது அபரிமிதமான நம்பிக்கையை நன்றியுணர்வை தன் நோயிலிருந்தே பெறுபவன் ஒருவகையில் ஞானிதான்.

அம்பிகையிடம் பேசும்போது விசித்திரவீரியன் ஒரு கட்டத்தில் சொல்லும் வார்த்தைகள், அவன் மீதான எல்லையற்ற வாஞ்சையை ஏற்படுத்துகின்றன.
"சிறு நாய்க்குட்டிகள் கண்திறந்த மறுநாளே மனிதர்களை நம்பிப் பின்னால் வெல்வதுபோல நான் உலகை நம்புகிறேன். இவ்வுலகிலுள்ள அத்தனை பேரும் என்னைவிட வலிமையானவர்கள்.வலிமையானவர்கள் ஒருபோதும் பலவீனர்களைத் துன்புறுத்துவதில்லை.எல்லா மனிதர்களும் நெஞ்சுக்குள் ஒரு சிறு முலையையாவது வைத்திருக்கிறார்கள்"(ப-243,244)


அதனால்தான் முதலில் விசித்திர வீரியனை மஞ்சத்தில்முதன் முதலாக சந்திக்கும் தருணத்தில் காவன் தன்னைத் தீண்டக் கூடாது என்றே எண்ணும் அம்பிகை சிறிது நேர உரையாடலிலேயே அவனை அள்ளி அணைத்து இறுக்கிக் கொள்கிறாள்.அவனை கைக்குழந்தையாக்கி தன் கருவறையில் செலுத்திக் கொள்ள ஏங்குகிறாள்.(ப-242).

ஓர் ஆணுக்குரிய அலைபாய்தல் இல்லாத இயல்பான கண்கள் விசித்திரவீரியனுக்கு இருப்பதாய் தன் நெடுநேரப் பேச்சுக்குப் பின் அம்பிகைசொல்கிறாள்.


"நான் ஏன் இவற்றை உங்களிடம் சொல்கிறேன் தெரியுமா?என்று அம்பிகை கேட்டாள்."சொல்"என்றான் விசித்திரவீரியன்."உங்கள் விழிகள்.அவற்றில் ஆணே இல்லை.".
விசித்திரவீரியன் சிரித்து,"அதைத்தான் மருத்துவர்கள்தேடிக் கொண்டிருந்தார்கள்"என்றான். (ப-247)
துளியும் தன்னகங்காரம் இல்லாதவனுக்குத்தான் தன்னைத்தானே இப்படி கேலி செய்து கொள்வது சாத்தியம்.


"ஆண்களின் கண்களில் உள்ளவை இருவகை உணர்வுகள்.ஒன்று வேட்கை.எப்போதும் எரியும் சுவாலை.அதன் சுவாலை விலகினால் தெரிவது .புறக்கணிப்பின் ஏளனம்.அதையே   ஆண்மை என்கிறார்கள்.அவை உங்கள் கண்களில் இல்லை.இவை என் அன்னையின் கண்கள் போலிருக்கின்றன.".(ப-248)   என்கிறாள் அம்பிகை.

 அப்படி வேட்கை தெரியும் கண்களுள்ளவர்களில் பீஷ்மரும் விதிவிலக்கில்லை என்று சொல்லும்போதுதான் அம்பை கவனித்ததை   அவளும் கவனித்திருப்பது தெரிகிறது கருத்தரிக்க உகந்த நாளென்று கருநிலவு நாளில் அம்பிகை விசித்திரவீரியனின் முதலிரவை சத்யவதி  ஏற்பாடு செய்திருந்தும் உரையாடலிலேயே அந்த இரவு கழிகிறது.அதைத் தெரிந்து கொள்ளும் சத்யவதி  சீற்றத்துடன் விசித்திர வீரியனிடம் பேச அங்கே அவன் சொல்லும் பதில் மிக முக்கியமானது..


"சத்யவதி சீறும் முகத்துடன்,'உனக்கு வெட்கமாக இல்லையா?நீ ஓர் ஆணென ஒரு கணமும் உணர்ந்ததில்லையா?'என்றாள்.விசித்திர வீரியன் விழிகளை அவளை நோக்கித் திருப்பி,"நான் ஆணென்று உணராத ஒருகணமும் இல்லை அன்னையே"என்றான். "சொல்லப்போனால் இவ்வுலகின் ஒரே ஆண் என்றும் உணர்ந்திருக்கிறேன்" (ப-250)

இந்தச் சொற்கள் எவ்வளவு உள்ளர்த்தம் மிகுந்தவை என்பதை சத்யவதி விசித்திரவீரியனின் மரணத்தின்பின்னால் உணர்ந்து கொள்வதோடு அதைபீஷ்மனிடம் பகிர்ந்து கொள்ளவும் செய்கிறாள்.
"அந்தக் காசிநாட்டு இளவரசி அழுததைப் பார்த்தேன்.அக்கணமே நெஞ்சு திறந்து இறந்துவிடுபவள்போல..அப்போதுதான் என் மனம் நிறைந்தது.ஒரு பெண்ணின் மனதை நிறைத்துவிட்டுச் செல்வதுதான் ஆண்மகன் ஒருவன் மண்ணில் வாழ்ந்தமைக்கான அடையாளம்.(ப-285)

"ஒரு பெண்ணை யாரோ ஓர் ஆண்தான் முழுப்பெண்ணாக்குகிறான் என்பது தெரியுமா உனக்கு?அப்படிப்பட்ட ஆணைச் சந்திப்பவளே நல்லூழ் கொண்டவள்..ஆனால் ஒன்று சொல்கிறேன்.அந்த ஆணைத் தன் மகனாகக் கொண்டவள்,பெரும்பேறு பெற்றவள்.அவள் நான்".(ப-285-286)

தன்னாலேயே பிரம்மச்சர்ய விரதம் மேற்கொண்ட பீஷ்மனிடம் ஒரு பெண்ணை முழுமையாக்குபவன்தான் ஆணென்று சத்யவதி சொல்வது விதியின் உச்சகட்ட நகைச்சுவை உணர்வன்றி வேறென்ன?

(தொடரும்)