Thursday, September 25, 2014

வியாச மனம்-4 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)

கடலின் அக அடுக்குகளிடையே உப்புச்சுவையின் திண்மையிலும் பாசிகளிலும் பவளங்களிலும் ஊடுருவி வெளிவரும் மீனின் அனுபவம்,ஒரு நீச்சல் வீரனுக்கு ஒருபோதும் வாய்க்காது. வாழ்வின் அத்தனை அம்சங்களுக்கும் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்துவிட்ட ஒருவன் கணங்களின் சமுத்திரத்தில் மீனாகிப் போகிறான். தனக்கான இரையையும் தனக்கான வலையையும் அவன் ஒன்றே போல் அறிகிறான்.



இந்த மனோலயத்திற்கு மிகச்சிறந்த உதாரணம்,பீஷ்மர்.விதம்விதமான மனப்போராட்டங்களில் தன்னை முன்னிலைப்படுத்தாமல் காலம் முதுகில் சுமத்தும் காரியத்தை மட்டுமே முன்னெடுத்துச் செல்பவர் அவர். பீஷ்மரின் பிரம்மச்சர்யமும்,அரசபதவியில் அமர்வதில்லை என்னும் சங்கல்பமும் அத்தகைய மனவோட்டத்தின் வெளிப்பாடுகளே. ஒரு நிமித்திகரை வருவித்து ,பாடல் வழியேஅவர் சொன்னதை யூகித்து காசிக்குச் செல்வதா வேண்டாமா எனும் இறுதி முடிவை வியாசரிடம் கலந்தாலோசித்த பின்னர் எடுக்கலாம் என்று கிளம்புகிறார்.

இங்கு,தீர்க்கசியாமர் என்னும் முதுநிமித்திகர் வாயிலாக பீஷ்மருக்கு சொல்லப்பட்டது,வியாசரின் தந்தை பராசரரின் வரலாறு.கருவிலிருந்து வளரும் சூழலில் என்னவெல்லாம் இருக்குமோ அவற்றின் அதிர்வுகள் கருவிலிருக்கும் குழந்தையை சென்றடையும். ஆதிவசிட்டரின் நூறாவது மகன் சக்தியை மணம்புரிந்த முனிகுமாரியாகிய அதிர்ஸ்யந்தியின் கருவில் இருக்கையில், துயரமான சூழலொன்றில் பராசரனுக்கு வேத ஞானம் வாய்க்கிறது.ஆதி வசிட்டருக்கு நூறு மகன்கள்.அவர்களில், சக்தி நீங்கலாக மற்ற மகன்களை கிங்கரன் பிடித்துத் தின்று விடுகிறான்.

புத்திர சோகத்திலிருந்து விடுபட  ஆதிவசிட்டர் மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியும் அவருக்கு உணர்த்தியவை என்ன என்பதை "முதற்கனல்" மிக அழகாக விவரிக்கிறது.


" துயரத்தால் நீலம் பாரித்துக் கருமையடைந்த வசிட்டர்,ஆயிரத்தெட்டு தீர்த்தங்களில் நீராடினார்.புத்திரசோகத்தை நீர் நீக்குவதில்லை என்று உணர்ந்து ஏழு அக்கினிகளில்மூழ்கி எழுந்தார்.துயரம்  இன்னும் பெரிய அக்கினி என்பதை மட்டுமே அறிந்தார்.இச்சைப்படி உயிர்துறக்கும் வரம் கொண்டவராதலால் தர்ப்பைப் புல்லைப் பரப்பி அமர்ந்து கண்மூடி தியானித்து தன் உடலிலிருந்து ஏழுவகை இருப்புகளை ஒவ்வொன்றாக விலக்கலானார்.
அதன் முதல்படியாக,அவர் தன் நாவை அடைந்த நாள்முதல் கற்கத் தொடங்கிய வேதங்களை ஒவ்வொரு மந்திரமாக மறக்கத் தொடங்கினார்."(ப-81)

அவையனைத்தும் அதிர்ஸ்யந்தியின் கருவிலிருந்த குழந்தையாகிய பராசரரை சென்றடைந்தன.பராசரருக்கும் மச்சகந்திக்கும் மகனாய்ப் பிறந்து,உறவுமுறையில் தனக்குத் தமையனான வியாசரை  சந்திக்கச் செல்கிறார் பீஷ்மர்.

அஸ்தினபுரியிலிருந்து வேதவனத்துக்குள் பீஷ்மர் நுழைவதை பாறையொன்றிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த சித்ரகர்ணி என்னும் சிங்கம்,வனம் வழியே வந்தாலும் உண்மையில் விதிவழியே வந்தது என்கிறார் ஜெயமோகன்.

பீஷ்மர் வியாசரின் குடிலருகே கட்டப்பட்டிருந்த கர்ப்பிணிப் பசுவாகிய கந்தினியைக் கண்டு ,அது எதையோ சொல்ல வருவதாய் உணர்ந்த வண்ணம் உள்ளே செல்கிறார்.பீஷ்மர் தன்னையும் வியாசரையும் எங்கே நிறுத்திக் காண்கிறார் என்பதை வியாசரிடம் அவர் சொல்லும் வார்த்தைகளினூடாக   முதற்கனல் உணர்த்துகிறது.

"மூத்தவரே! விண்ணிலிருக்கும் தூய ஒலிகளைத் தேடிச் சென்று கொண்டிருப்பவர் நீங்கள்.நான் மண்ணின் எளிய சிக்கல்களுடன் போரிட்டுக் கொண்டிருப்பவன்.எனக்குச் சொற்கள் கைகூடவேயில்லை.ஆகவே அம்புகளைப் பயிற்சி செய்கிறேன்...

...நான் என்னை மிகக்கூரியஆயுதமென்பதற்கு அப்பால் உணர்ந்ததேயில்லை.இவர்கள் சொல்லும் அன்பு பாசம் நெகிழ்ச்சி என்பதெல்லாம் என் முன் வந்து சேரும் மானுடப் பிரச்னைகளைப் புரிந்து கொள்வதற்கான வெறும் அடையாளங்களாகவே தெரிகின்றன".(ப-89)

இவை ஒரு கர்மயோகியின் மனநிலையா என்பதை காவியத்தின் இனிவரும் போக்குகளின் துணை கொண்டு பின்னர் காணலாம்.

பருந்தின் பிடியிலிருந்து தப்பி சிபியிடம் புகலடைந்த புறாவின் கதையை வியாசர் பீஷ்மருக்கு சொல்லத் தொடங்கினார். வெளியே சித்ரகர்ணியாகிய சிங்கம் கந்தினியாகிய கருவுற்ற பசுவை நெருங்கியது.கதையை வியாசர் முடிக்கவும்,சிம்மம் பசுவைக் கவ்வி தோளில் போட்டுக் கொண்டு ஓடி மறையவும் சரியாக இருந்தது.

வியாசரின் மாணவன் சுதன், மனம் வெதும்பி அந்த சிங்கத்துக்கு தீச்சொல் விடுக்க முற்பட்ட போது,வியாசர் தடுத்து,"நில் சுதனே...பசுவைக் கொல்வதுதான் சிங்கத்தின் தர்மம்.ஆகவே சிங்கத்துக்குப் பசுவாதையின் பாவம் கிடையாது"என்ற வியாசரின் கூற்றை பீஷ்மர் தனக்கான வழிகாட்டுதலாய் எடுத்துக் கொண்டு புறப்பட்டார் என்பதே இந்தக் கதைக்குப் போதுமானது.

ஆனால் முற்றிலும் வேறொரு புரிதலை நோக்கி இந்த அத்தியாயத்தில் ஜெயமோகன் பொன் மெழுகுகிறார். உள்ளே சிபிச்சக்கரவர்த்தியின் கதையை வியாசர் சொல்லும் போதே வெளியே சித்ரகர்ணியும் கந்தினியும் பேசிக் கொள்கின்றன.

"சித்ரகர்ணி கால்களைப் பரப்பி அடிவயிற்றைத் தாழ்த்தி நாசியை நீட்டி,மிக மெதுவாகத் தவழ்வது போல நகர்ந்து வாசலில் நின்ற வெண்பசுவை அணுகியது.கருவுற்றிருந்த கந்தினி என்ற வெண்பசு,"இம்முறை நான் அடைக்கலம் கோரியது அவன் காதில் விழவில்லை"என்று சொல்லிக் கொண்டது."(ப-94)

முந்தைய பிறவியில் சிபியாய் இருந்தவன் பீஷ்மனே என்றும்,செம்பருந்தாய் வந்ததே சித்ரகர்ணி என்றும்,பிரபை என்னும் வெண்புறாவாய் வந்தது கந்தினி என்றும் சொல்லவருவதன் மூலம், "முதற்கனல்"எதை உணர்த்துகிறது??

வினைப்பகடைகளான உயிர்களை அந்த வினைகள் தேயும் வரை காலம் தொடர்ந்து உருட்டி உருட்டி அதே விளையாட்டை விளையாடுவதாய் சொல்கிறதோ?

பீஷ்மரைப் பார்த்து தனக்குள் சித்ரகர்ணி சொல்வதாய் ஜெயமோகன் எழுதும் வரிகள் இதனை உறுதி செய்கின்றன.

"நீ என்னை அறிய மாட்டாய். நானோ ஒவ்வொரு பிறவியிலும் உன்னைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.உன்னுடைய ரதசக்கரங்கள் ஓடித் தெறிக்கும் கூழாங்கற்கள் கூட பிறவிகள்தோறும் உன்னைப் பின்தொடர்கின்றன என நீ அறியவும் முடியாது.நான் இந்த முதுமை வரை வேட்டையாடிக் கண்டறிந்தது ஒன்றே.காலத்தின் முடிவில்லா மடிப்புகளிலெல்லாம் பின்னிப் பின்னிச் செல்லும் அழியாத வலையொன்றின் வெறும் கண்ணிகள் நாம்".(ப-87)


இந்த இடத்தை நான் முக்கியமானதாகக் கருதுகிறேன்.புறச்சூழலில் பகை போல் தென்படும் உறவுகளும் நம் வினைத்தொகுதியைக் கரைக்க உதவுபவையே. முந்தைய ஏற்பாட்டில் சம்பவங்கள் நிகழ்கின்றன என்ற புரிதல் ஏற்படும் போது விழிப்புணர்வுடன் விதியின் விளையாட்டில் பங்கேற்ற வண்ணமே பார்வையாளர் மனநிலையை அடைகிறோம்.

இதையே பற்றற்ற நிலை என்கிறார்கள். பகைவன் எனும் போர்வையில் வருகிற மற்றொரு வினை மூட்டையின் பால் குரோதம் வளராமல் அன்பே மலர்கிறது. பகைவனுக்கருளுவது அனுபவரீதியாய் நிகழ்கிறது.

இந்த தன்மை "மீட்டிங்குவந்து வினைப்பிறவி சாராமே" என்று திருவாசகம் சொல்லும் உன்னதத்திற்கு நம் உயிரை மலர்த்துகிறது.

பரிவ்ராஜக வாழ்வு வாழ்ந்த காலத்தில் நரேந்திரர் ஒருமுறை பிச்சையேற்று வாழும் வாழ்வில் சலிப்படைந்தார். உணவைத்தேடிப் போவதில்லை என்னும் தீர்மானத்துடன்வனமொன்றில் மரநிழலில் அமர்கிறார். இந்த மரத்திலிருந்து உதிரும் சருகுகள் போல் இந்த உடம்பும் வற்றி உலர்ந்து உதிரட்டும் என்று கண்மூடி அமர்பவர்,நீண்ட நேரம் தியானத்தில் ஆழ்கிறார்.தன்னை யாரோ உற்று நோக்குவதாய் உணர்ந்து கண்விழித்தபோது மிக அருகில் ஒரு புலி அமர்ந்திருப்பதைக் காண்கிறார். அவர் இதழ்களில் ஒரு முறுவல் இழையோடுகிறது.

"பிச்சையேற்று இந்த உடம்பை எதற்கு வளர்க்க வேண்டும் என்று கருதினேன்.பசித்திருக்கும் புலியே,உனக்கிந்த உடம்பு உணவாகட்டும்"என்று மீண்டும் கண்மூடி அமர்ந்து கொள்கிறார்.

சிறிது நேரம் கழித்து கண்விழித்துப் பார்த்தால் அந்தப் புலியைக் காணவில்லை.
"தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு
  சிந்தையில் போற்றிடுவாய்
  அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்
  அவளைக் கும்பிடுவாய்"
என்று பாடிய பாரதியின் மனநிலை நரேந்திரருக்கு அனுபவமாகவே நிகழ்ந்தது.
ஒருவேளை  புலி அவரை அடித்திருந்தால் கந்தினிப் பசுவின் மனநிலையில்தான் இருந்திருப்பார் என்று தோன்றுகிறது.

இம்முறை மகாஞானியாகிய வேதவியாசரின் எல்லைக்குள் அதே விளையாட்டை விளையாடிய இரண்டும் என்னவாகியிருக்கும் என்ற கேள்வி எழுகிற போதே அவைபிறவாப் பெருநிலையை எய்தியிருக்கும் என்பதற்கான அனுமானங்களை முதற்கனல் வாயிலாகவே பெறுகிறோம்.

கந்தினிப் பசுவை தூக்கிச் செல்லும் சித்ரகர்ணி,அதனை எங்கே வைத்துக் கொல்கிறது என்று சொல்லும்போது,
"கங்கைக் கரையில் நீத்தார் சடங்குகள் செய்யும் ஹரிதகட்டம் என்னும் புனிதமான படித்துறைக்கு கந்தினியைக் கொண்டு சென்று போட்டு அதன் வயிற்றைக் கிழித்து,கருவை எடுத்து தலையை அசைத்தபடியும் உறுமியபடியும் சுவைத்து உண்டது சித்ரகர்ணி.

மனமும் வயிறும் நிறைந்தபின்,தொங்கும் உதடுகளிலும் மோவாய் மயிர்முட்களிலும் குருதி மணிகள் சிலிர்த்து நிற்க,
அருகே இருந்த பாறை மேல் ஏறி நின்று,வலது முன்காலால் பாறையை ஓங்கி அறைந்து,காடுகள் விறைக்க, மலையடுக்குகள் எதிரொலிக்க,கர்ஜனை செய்தது.அப்பால் ஒரு கடம்ப மரத்தடியில் யாழுடன் நின்று அதைப் பார்த்து பிரமித்த சூதனின் பாடலுக்குள் புகுந்து அழிவின்மையை அடைந்தது.(ப-95)

பாடலுக்குள் புகுவதெனில் புகழுடல் எய்தியிருக்கும் என்றும், புகழுடல் அடைவதெனில் ஊனுடலை உதறியிருக்க வேண்டுமென்றும் உய்த்துணர முடிகிறது.இதனை பின்னால் ஒரு காட்சியாகவே வைக்கிறார் ஜெயமோகன்.
பிறவித் தொடரின் கடைசிக் கடனை வியாசர் முன்னிலையிலேயே சித்ரகர்ணி கழிக்கிறது.

விருப்பு வெறுப்பின்றி,விழிப்புணர்வுடன் விதியின் விளையாட்டில் இறங்குபவர்கள் வினைத்தொகுதி கரைத்து விடைபெறுகிறார்கள் என்னும் உபதேசத்தை வியாசரும் சித்ரகர்ணியும் கந்தினியும் சேர்ந்து, பீஷ்மருக்கும் நமக்கும் முதற்கனல் வாயிலாய் வழங்குகிறார்கள். 

(தொடரும்)