கண்திறக்கும் கருணை


வைத்திருக்கும் கொலுநடுவே வைத்திடாத பொம்மையொன்று
மைத்தடங்கண் விழிதிறந்து பார்க்கும்
கைத்ததிந்த வாழ்க்கையென்று கண்கலங்கி நிற்பவர்பால்
கைக்கரும்பு கொண்டுவந்து சேர்க்கும்
மெய்த்தவங்கள் செய்பவர்கள் பொம்மையல்லஉண்மையென்று
மேதினிக்குக் கண்டறிந்து சொல்வார்
பொய்த்ததெங்கள் பாழும்விதி பேரழகி பாதம்கதி
பற்றியவர் பற்றறுத்து வெல்வார்

மான்மழுவை ஏந்துகரம் மாலையிட நாணும்முகம்
மாதரசி போலழகி யாரோ
ஊன்பெரிதாய் பேணியவர் தேன்துளியைஉள்ளுணர்ந்தால்
உத்தமியைத் விட்டுவிடு வாரோ
வான்பெரிது நிலம்பெரிது வாதமெல்லாம் எதுவரையில்?
வாலைமுகம் காணும்வரை தானே!
நான்பெரிது என்றிருந்த பேரசுரன், நாயகியாள்
நேரில்வர சாய்ந்துவிழுந் தானே!

தொட்டிலிலே பிள்ளையென தோட்டத்திலே முல்லையென
தேவியவள் கண்சிமிட்டி சிரிப்பாள்
வட்டிலிலே அமுதமென வாய்நிறையும் கவளமென
வேண்டுமட்டும் வந்துவந்து குவிப்பாள்
எட்டும்வரை நாம்முயல எட்டாத உயரமெல்லாம்
ஏற்றிவிட்டு சக்தியன்னை நகைப்பாள்
பட்டதெல்லாம் போதுமென போயவளின் முன்புவிழ
பாதநிழல் தந்தவளும் அணைப்பாள்

இங்கிவளைப் பாடும்கவி இப்படியே நீளுமினி
எழுதவைத்து எழுதவைத்து ரசிப்பாள்
எங்குவலை யார்விரித்தும் எங்கும்விழமாட்டாமல்
எப்போதும் தீமைகளைத் தடுப்பாள்
என்கவலை உன்கவலை எல்லாமே அவளறிவாள்
ஏக்கமெல்லாம் முந்திகொண்டு துடைப்பாள்
கண்குவளை பூத்திருக்க கைவளைகள் ஒலித்திருக்க
கால்சலங்கை கேட்கவந்து சிரிப்பாள்