வியாச மனம்-2 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது.நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் விஜயதசமி பூஜை.அவர் வைதீக மரபில் வந்தவர். அவருடைய குடும்பத்தினரும் அவருடைய சகோதரர் குடும்பத்தினருமாக வந்து பூஜை ஏற்பாடுகளை ஒழுங்கு செய்து கொண்டிருந்தனர். இரண்டு வயது முதல் பதினான்கு வயதிலான குழந்தைகள் இருந்தனர். நிவேதனத்திற்காக வைக்கப்பட்டிருந்த இனிப்புகளையும் சுண்டல் வடைவகையறாக்களையும் பழங்களையும் தொடக்கூடாதென்று அந்த நண்பர் குழந்தைகளை எச்சரித்த வண்ணம் இருந்தார்.


அதேநேரம் அவருடைய சகோதரரின் இரண்டு வயதுக் குழந்தை இலையில் வைக்கப்பட்டிருந்த இனிப்பை எடுத்து வாயில் வைத்தது. அதை ரசித்துப் பார்த்த அந்த நண்பர் "வாழைப்பழம் சாப்பிடலையோ கண்ணா?'என்று இலையில் வைத்திருந்த வாழைப்பழத்தை உரித்து ஊட்டத் தொடங்கினார்.

"அவனுக்கு மட்டும் நைவேத்யம் பண்ணாமலேயே தரேளே"என்று மற்ற குழந்தைகள் ஆட்சேபிக்க,"சும்மாருங்கோ! அவன் குழந்தை.அவன் என்ன வேணும்னாலும் பண்ணலாம்.அவன் சாப்பிட்டா சாமியே சாப்பிட்ட மாதிரி"என்றார்.

மனித வர்க்கத்தில் மட்டுமல்ல.எல்லா உயிரினங்களுக்கும் இந்தச் சலுகை உண்டு. இதற்கு வேதங்களிலோ சாத்திரங்களிலோ நீங்கள் விதிமுறைகளைத் தேடக்கூடாது.இது ஒவ்வோர் உயிருக்குள்ளும் இருக்கும் தாய்மையின் தீர்ப்பு. பறவைக் குஞ்சுகளையும் விலங்குகளின் குட்டிகளையும் காணும் போதெல்லாம் தாயினும் சாலப் பரிகிற மனம் கடவுளின் நீட்சியாய் இயங்குகிறது.

 ஜனமேஜயன் சிறுவனாயிருந்த போது தன் தம்பியருடன் வனத்தில் விளையாடப்போன சம்பவம் ஒன்று,முதற்கனலில் வருகிறது. "வேள்வி செய்து விளையாடலாம்"என்று ஜனமேஜயன் சொல்கிறான். பெரியவர்கள் செய்வதை வேடிக்கை பார்க்கும் பிள்ளைகளுக்கு அவற்றை விளையாட்டாகச் செய்து பார்க்கத் தோன்றுவது இயல்பு. குதிரையைக் கட்டிவைத்து அசுவமேத யாகம் நிகழ்த்துவதை வேடிக்கை பார்த்துள்ள அந்தச் சிறுவர்கள் குதிரைக்கு பதிலாக ஏதேனும் விலங்கொன்றைக் கட்டி வைக்க முற்படுகிறார்கள்.

பிறந்து எட்டே நாட்களான நாய்க்குட்டி ஒன்று புதரிலிருந்து தலைநீட்ட அதைக் கட்டி வைத்து பிள்ளைகள் விளையாடத் தொடங்கினர்."அந்தக் குட்டியை அதன் அன்னை ஷிப்ரதேஜஸ் என்று அழைத்தது"என்கிறார் ஜெயமோகன் விளையாட்டுக் குணம் மிகுந்த அந்த நாய்க்குட்டி,ஆகுதிக்கு வைக்கப்பட்டிருந்த மாமிச வாசனையை உள்வாங்கி,கட்டுகளை விடுவித்து ஓடோடி வந்து மானிறைச்சியை நக்கத் தொடங்கிற்று.
உடனே ஜனமஜேயன்,அது விளையாட்டு  வேள்வி என்பதையும் மறந்து ,
அது சின்னஞ்சிறு குட்டி என்பதையும் மறந்து தர்ப்பையால் அதன் முகத்தில் ஓங்கியறைய,தர்ப்பை முட்கள் கண்களில் குத்த விழியிழந்து ஷிப்ரதேஜஸ் ஓலமிட்டழுதபடி கல்லிலும் முள்ளிலும் தட்டுத் தடுமாறி ஓடியது என்றொரு சம்பவத்தை ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.அதற்கடுத்து ஜெயமோகன் செய்யும் புனைவு அற்புதமானது. மூலநூலில் இல்லாத காட்சி இது. ஜனமஜேயன் முன்னால் நாய்களின் அதிதேவதையான சரமை வந்து தோன்றுகிறது.ஜனமஜேயனிடம் சரமை சொல்லும் சொற்கள் வாசகனின் உயிரை உலுக்குபவை.


"ஒவ்வோர் உயிருக்கும் அதற்கான மனமும் உடலும் படைப்பு சக்தியால் அளிக்கப்பட்டிருக்கின்றன.அவை ஒவ்வொன்றையும் உணர்ந்து அவையனைத்தும் தங்களுக்கு உகந்தபடி வாழ்வதற்கு வழிசெய்வதே மன்னனின் கடமை.நக்குவது நாயின் இச்சையாகவும் தர்மமாகவும் உள்ளது. அதைச் செய்தமைக்காக நீ அதன் மெல்லிய சிறு கழுத்தையும் மலர்ச்செவிகளையும் வருடி ஆசியளித்திருக்க வேண்டும்.உன் மனம் அதைக் கண்டு தாயின் கனிவை அடைந்திருக்க வேண்டும்.ஆனால் நீ நெறி வழுவினாய் என்றது சரமை.தவறை உணர்ந்த ஜனமஜேயன் எழுந்து கண்ணீருடன் கைகூப்பி நின்றான்."தவறுக்கான தண்டனையை நீ அனுபவித்தாக வேண்டும்.இந்த விழியிழந்த நாய்போலவே நீ வாழ்நாள் முழுக்க இருப்பாய் என்று சொல்லி சரமை மறைந்தது."(ப-38)

பொதுவாக இது போன்ற சாபங்கள் எப்படி தொழிற்படுகின்றன என்று விவரிப்பவர்கள் அவன் நாயாக மாறினான் என்பார்கள்.அல்லது அடுத்த நொடியே கண்ணிழந்தான் என்பார்கள். அல்லது சரமையிடம் மன்றாடி பகலெல்லாம் அரசனாகவும் இரவில் மட்டும் கண்ணிழந்த நாயாகவும் மாற சலுகை பெற்றான் என்பார்கள்.ஆனால் இந்த சம்பவத்தை ஜெயமோகன் மேலெடுத்துச் செலுத்தும் விதம் அழகானது.


"கண்ணிழந்த நாயின் பதைப்பை அதன்பின் தன்னுள் என்றும் உணர்ந்து கொண்டேயிருந்தார் ஜனமஜேயன்.தெரியாதவற்றிலும் அறியாதவற்றிலும் முட்டி மோதிச் சரிவதையே தன் வாழ்க்கையாகக் கொண்டிருந்தார்.புரியாதவை எல்லாம் அகத்தில் எத்தனை பெரிதாகின்றன என்று அவர் அறிந்தார்" (ப-38).

அது ஒரு நாய்க்குட்டி என்கிற தகவலே போதுமானது.ஆனால் ஷிப்ரதேஜஸ் என்னும் அழகான பெயர் ஜெயமோகன் வைத்தது.அது அந்த நாய்க்குட்டியை நமக்கு மேலும் நெருக்கமாக்குகிறது. அது மட்டுமல்ல.உள்ளபடியே வேள்வியில் வைக்கப்பட்ட ஆகுதியாய் இருந்தாலும் அதன்மேல் இச்சை கொள்வது நாயின் இயல்பு என்பதை நிலைநிறுத்துவது நம் மரபில் சொல்லப்பட்ட பழைய உவமை ஒன்றை கேள்விக்குள்ளாக்குகிறது. 

இராவணன் கபட சந்நியாசி வேடத்தில் வந்து தன் இச்சையை சீதையிடம் சொல்லும் போது, "வேள்வியில் அளிக்கப்படும் ஆகுதிப் பொருளுக்கு நாய் ஆசைப்பட்டது போலல்லவா உன் ஆசை இருக்கிறது"என சீதை சீறுவதாய் கம்பர் எழுதுகிறார்.


"புவியிடை ஒழுக்கம் நோக்காய்; பொங்கெரி,புனிதர் ஈயும்
  அவியை நாய் வேட்டதென்ன என்சொனாய் தீயோய்"       என்கிறார்.
இந்த உவமையை உள்வாங்கிய பாரதி,அதனை சற்றே மாற்றி, பாஞ்சாலியை தருமன் சூதில் வைத்திழந்ததைச் சொல்ல "வேள்விப் பொருளினையே புலை நாயின்முன் மென்றிட வைப்பவர்போல்" என்று பாடுகிறான்.

இந்தப் பார்வையை புரட்டிப் போடும் விதமாய் முதற்கனலில் சரமையின் வருகை அமைகிறது. (பின்னர் வந்த புராணங்களிலேயே சரமை பற்றிய குறிப்பு இருப்பதாகவும் தன் புனைவில் அதனைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் ஜெயமோகன் தனிப்பட்ட உரையாடலில் என்னிடம் தெரிவித்ததையும் இங்கு பதிவு செய்கிறேன்.)  

மூன்றாவதாக இதிகாசங்களில் கதை மாந்தர்களின் சாபங்களை எந்த இடத்தில் சொன்னால் சரியாயிருக்கும் என்றும் ஓர் உத்தி உண்டு. ஜனமஜேயன் சின்ன வயதில் வேள்வி செய்து விளையாடிய போது சாபம் பெற்றார் என்னும் செய்தியை,அவன் சர்ப்பசாந்தி வேள்வி செய்து அதன் நிறைவு நாளில் வேள்விக்கூடத்திற்குள் நுழையும் தருணத்தில் முதற்கனல் சொல்கிறது.

"அந்த இறுதிநாளில் வேள்விக்கூடத்தினுள் நுழைந்த போது அங்கிருந்த நூற்றுக்கணக்கான பந்தற்கால்களில் அவருடைய பிரக்ஞை நிலையழிந்து முட்டி முட்டித் தத்தளித்தது"(ப-38)

இந்தத் தட்டழிதல், வேள்வியின் மூல சங்கல்பத்தையே உடைத்துப் போட வரும் சின்னஞ்சிறுவனாகிய ஆஸ்திகனுடன் வாதமிட்டு தோற்கும் போதும் வெளிப்படுகிறது.

நான்காவதாக,சரமை என்னும் நாய்களுக்கான அதிதேவதையின் வருகையை முன்வைத்து சில விஷயங்களை சிந்திக்க வேண்டும். ஒவ்வோர் உயிரினத்திற்கும் ஓர் அதிதேவதை உண்டு.ஓஷோவிடம் ஒருவர் கேள்வி கேட்டார்."யானைகளில் நான் ஐராவதமாக இருக்கிறேன், பசுக்களில் காமதேனுவாக இருக்கிறேன் என்று கீதையில் கண்ணன் சொல்கிறான்.அப்படியென்றால் மற்ற பசுக்களிலோ யானைகளிலோ கடவுள் இல்லையா"என்பது அந்தக் கேள்வி. 
அதற்கு ஓஷோ சொன்ன பதில் இது.
"ஒரு யானையின் உச்சகட்டமான சாத்தியங்கள் ஐராவதத்தில் வெளிப்படுகின்றன. ஒரு பசுவின் உச்சகட்டமான சாத்தியங்கள் காமதேனுவில் வெளிப்படுகின்றன. கடவுள் எல்லா உயிர்களிலும் உண்டு என்றாலும் தன்னுடைய உச்சகட்ட சாத்தியத்தைத் தொட்ட உயிர் தெய்வமாகிறது"என்றார். 
நாய்களுக்கான அதிதேவதைசரமை பற்றி முதற்கனலில் வாசித்தபோது இந்தச் செய்தியை நினைவுபடுத்திக் கொண்டேன்.


யாகத்தில்  ஆஸ்திகன் எழுந்து நின்று நடத்தும் போராட்டத்தில் தீர்ப்பு சொல்ல வியாசரை அழைத்து வருவதற்கு வைசம்பாயனரும் அமைச்சர் பத்மபாதரும் குருஷேத்திரம் அருகிலுள்ள குறுங்காடாகிய வியாசவனம் சென்று சேர்வதை ஐந்தாம் அத்தியாயம் சொல்கிறது. அந்த நாளில்தான் வியாச பாரதம் எழுதி முடிக்கப்பட்டது என்று சொல்ல வருவதன் மூலம் ஜெயமோகன் வியாச பாரத உருவாக்கம் குறித்து கவித்துவமான பதிவுகளை முன்வைக்கிறார்.

  "வியாசர் குருஷேத்திரத்தை விட்டு விலகிச் செல்வதையே தன் இலக்காகக் கொண்டு,பாரதவர்ஷமெங்கும் அலைந்தார்.பனிமுடிகள் சூழ்ந்த இமயத்தின் சரிவுகளிலும்,மழையும் வெயிலும் பொழிந்து கிடந்த தென்னகச் சமவெளிகளிலும் வாழ்ந்தார்.கற்கக் கூடிய நூல்களையெல்லாம் கற்றார்.மறக்க முடிந்தவற்றையெல்லாம் மறந்தார்.அத்தனைக்குப் பின்னரும்,குருஷேத்திரத்தின் கனவுருத் தோற்றம் அவருக்குள் அப்படியேதான் இருந்தது.அவருக்குள்ளும் வெளியிலும் வீசிய எந்தக் கொடுங்காற்றும் அந்த ஓவியத் திரையை அசைக்கவில்லை"(ப-48)

இதற்குப் பிறகு ஜெயமோகன் காட்டும்  காட்சிகள் சிலிர்ப்பூட்டுகின்றன. அவற்றில் முதலாவது, குமரி முனையில் பராசக்தியின் பாதம் படிந்த பாறையில் அமர்ந்த போது வியாச மகரிஷி தனக்குள் மோதும் மூன்று கடல்களைக் கண்டாராம். இரண்டாவது, குமரிக் கடலில் அவர் வந்து நின்றபோது மீனவப் பெண்ணின் மகனாகிய அவர் உடலில் மீன் மணம் நுகர்ந்து பல்லாயிரம் மீன்கள் அலைமோதினவாம்.மூன்றாவதாக அங்கே யோகத்தில் அமர்ந்த போதுதான் ஐந்தாம் வேதத்தின் முதல் சொல்லை வியாசர் கண்டடைந்தாராம். இந்த செய்தியை ஜெயமோகனின் சொற்களிலேயே வாசிப்பது நல்லது.


"மூன்று கடல்களின் அலைகளும் இணைந்து நுரைத்த குமரி முனையில்,நெடுந்தவ அன்னையின் ஒற்றைக்காலடி படிந்த பாறையுச்சியில் அமர்ந்து அலைகளை நோக்கி அமர்ந்திருந்த போது அவர் தன்னுள் மோதும் மூன்று கடல்களைக் கண்டு கொண்டார்.
நூறுநூறாயிரம் சொற்களுக்கு அப்பாலும் அவருடலில் எஞ்சியிருந்தமீன்மணம்கண்டு,கீழே நீல நீரலைகளில் மீன்கணங்கள் விழித்த கண்களுடன் வந்து நின்று அலைமோதின.கண்களை மூடி அவர் யோகத்திலமர்ந்த போது மீன்கள் ஒவ்வொன்றாக விலக,அவருக்குள்ளிருந்து மறைந்த அத்தனை சொற்களும் சென்ற வெளியில் நிறைந்த "மா"என்ற முதற்சொல்லைக் கண்டடைந்தார்." (ப-48)

வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் மகாபாரதத்தை எழுதினார் என்றும், அப்படிஎழுதும் வேகத்தில் எழுத்தாணி உடைந்துவிட தந்தத்தை உடைத்து விநாயகர் எழுதினார் என்றும் சொல்லப்படும் தொன்மத்தை ஜெயமோகன் எதிர்கொள்ளும் விதம் புதுமையானது.   

பாரதமெங்கும் அலைந்து திரிந்து சொற்களைக் கண்டடைந்த வியாசர் வியாசவனத்தில் குடியேறிய போது,புதர்களை விலக்கி எழுந்த மதகளிறு,துதிக்கை சுழற்றி ஓங்காரமெனப் பிளிறி,அவரிருந்த கல்லால மரத்தைக் குத்தியதாகவும்,அதன் தந்தங்களில் ஒன்று ஒடிந்து மரத்தில் பதிந்திருக்க அதை எடுத்து ஓம் என வெண்மணல் விரிந்த கதுப்பில் எழுதியதாகவும் குறிப்பிடுகிறார்.


இங்கு விநாயகரை விட்டுவிட்டு முதற்கனலை ஜெயமோகன் நடத்துகிறார் என்று கொள்வதற்கில்லை. வந்தவர் விநாயகர் என்றும் சொல்லாமல்,விநாயக அம்சத்தை பிரதிட்டை செய்து வியாசர் பாரதம் எழுதினார் என்று சொல்வதன் மூலம் தொன்மத்திற்கும் புனைவுக்கும் இடையே  சமன் செய்கிறார் ஜெயமோகன்.

" ஒற்றைக் கொம்புள்ள கணபதியை தன்முன் நிறுவி,அவர் எழுதிய காவியத்தின் கடைசிச் சொல்லாகவும் ஓங்காரமே அமைந்தது.அந்த ஒலி அவருள் மட்டுமே ஒலித்தது.முழுமையிலிருந்து முழுமை நோக்கி வழிந்த காவியத்தை எழுதி நிறுத்திய தாழை மடலை,மதகளிற்று முகத்தானின் மண்சிலைக்கு முன்னால் வைத்துவிட்டு,மெலிந்த கைகளைக் கூப்பியபடி,கண்களிலிருந்து கண்ணீர் சொட்ட அமர்ந்திருந்தார் வியாசர்" (ப-50)
வியாசர் சொல்லச் சொல்ல தன் தந்தமொடித்து மேரு மலையின் மேல் விநாயகர் மகாபாரதத்தை எழுதினார் என்பது பாரதநாட்டில் ஆழமாக வேர்விட்டிருக்கும் கருத்து.
விநாயகரைப் பற்றிச் சொல்லும் போது பகழிக் கூத்தர் திருச்செந்தூர் பிள்ளைத் தமிழில்,
"கனவட கிரிமிசை குருகுல மரபினர்
கதைதனை யெழுதிமு டித்த கருத்தினர்
" என்கிறார்.
பிற்காலத்தில் முத்தமிழில் பாடப்பட்ட பாரதத்தை முன்னதாக மேருமலையில் எழுதியவர் என்னும் பொருளில் அருணகிரிநாதர்,
"முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே"
என்று பாடுகிறார்.


மதகளிற்றின் உடைந்த தந்தம் என்று மட்டும் சொல்லி தொன்மத்தை சமன்படுத்த நினைத்த ஜெயமோகன்,பன்னெடுங்காலமாய் வேர்விட்டிருக்கும் நம்பிக்கையை முற்றாகக் கடந்து போக மனமின்றி, பாரதம் எழுதிய தாழைமடலை விநாயகர் திருவுரு முன்னர் வைத்து வியாசர் வணங்குவதாக எழுதியிருக்கக் கூடும்.அந்த விநாயகருக்குத்தான் வெளிச்சம்!!

ஆஸ்திகன் கேட்டபடி தட்சனும் அவன் மனைவியும் விடுவிக்கப்பட,தன் வேள்வி நோக்கம் நிறைவேறாமல் ஜனமஜேயன் திகைத்து நிற்க அந்த வேள்விக்கூடத்தில் வியாசரின் ஆணைப்படி வைசம்பாயனர் மகாபாரதத்தை வாசிக்கத் தொடங்குவதாய் ஒரு காட்சியை நிறுவி அதன்வழி  கதைக்குள் நுழைகிறது "முதற்கனல்".நாகங்களின் தலைவனான தட்சனை ஆஸ்திகன் மீட்ட நாளாகிய ஆடி மாத வளர்பிறை ஐந்தாம் நாளே "நாகபஞ்சமி"என்று கொண்டாடப்படுவதாய் "முதற்கனல்" சொல்கிறது.

(தொடரும்)