வியாச மனம்-7 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)


பீஷ்மருடனான முந்தைய சந்திப்பில் எவ்வளவு ஆற்றாமையும் சினமும் அம்பைக்கு இருந்ததோ இப்போது அதே அளவு அம்பையின் மனதில் பீஷ்மர் மீதான பிரியம் எழுந்து படகில் வழிந்து நதியை நிரப்பியது என்றே தோன்றுகிறது.

அவளுக்குள் தூண்டப்பட்ட சுடர் வழியெங்கும் எப்படி விகசித்தது   என்பதை ஜெயமோகன்,ஒளிமிகும் உவமை ஒன்றினால் விளக்குகிறார்.

"நெய்விழும் தீப்போல அவ்வப்போது சிவந்தும்,மெல்லத் தணிந்தாடியும்,சுவாலையென எழுந்தும் படகுமூலையில் அவள் அமர்ந்திருக்கையில்,படகு ஒரு நீளமான அகல்விளக்காக ஆகிவிட்டதென்று நிருதன் எண்ணிக் கொண்டான்.இரவு அணைந்தபோது, வானில் எழுந்தபலகோடி விண்மீன்களுடன் அவள் விழியொளியும் கலந்திருந்தது.இரவெல்லாம் அவளுடைய கைவளை குலுங்கும் ஒலியும் மூச்செழுந்தடங்கும் ஒலியும் கேட்டுக் கொண்டிருந்தன.பகலொளி விரிந்தபோது சூரியனுடன் சேர்ந்து படகின் கிழக்கு முனையில் உதித்தெழுந்தாள்".(ப-153)


முன்னர் இதே படகில் பிரபஞ்சத்தால் கைவிடப்பட்ட கோள்போல் இருந்த அம்பை ,இப்போது பிரபஞ்சத்தின் ஒவ்வோர் அசைவிலும் அங்கமாயிருந்து தனக்குள் அந்த இரவில் அபரிமிதமான சக்தியை சேமித்திருக்கக் கூடும்.பிரபஞ்சம் அவளுக்குள் இறக்கியிருந்த அபரிமிதமான சக்தி அவளை அடுத்த பரிணாமத்திற்கு தயார்படுத்தியிருக்க வேண்டும்.
'

    அம்பை வருவதை முன்கூட்டியே அறிந்திருந்த பீஷ்மர்,தன் கைகளில் ஓர் ஒளிவாளை ஏந்தி அதன் கருக்கை வருடியபடியே அமர்ந்திருந்தார் என்கிறது முதற்கனல்.ஆயினும் அம்பையின் கூரிய ஆயுதங்களுக்கு முன்ர் அவர் நிராயுதபாணியாய் நிற்பதை அடுத்தடுத்த காட்சிகள் காட்டுகின்றன.


தன் மனதிலிருப்பதை அம்பை சொல்லும் முன்னரே மெல்லிய நடுக்கத்திற்கு ஆளாகும் பீஷ்மர்,உரையாடத் தொடங்குகையில் தடுமாறும் இடங்கள் பீஷ்மர் என்னும் ஆளுமையை நிறைகுறைகளுடன் அறிந்து கொள்ளப் பெரிதும் பயன்படுகிறது.  

"நான் வந்தது உங்களைத் தேடி" என அம்பை பகிரங்கமாகப் பேசத் தொடங்கும் நொடியிலிருந்தே எப்படியாவது தப்பித்துச் செல்ல முடியுமா என பீஷ்மர் தடுமாறுகிறார்.

"வேட்டை நாய்முன் சிக்கிக் கொண்ட முயல்போல பீஷ்மர் அச்சத்தில் சிலிர்த்து அசைவிழந்து நின்றார்".(ப-155)

ஒரு நீண்ட இரவு அம்பைக்கு சுயம்வர மண்டபத்தில் நிகழ்ந்தவற்றை மீண்டும் மனதில் ஓடவிட்டுப் பார்க்கும் அவகாசத்தைத் தந்திருந்தது போலும்! எல்லா முனைகளிலிருந்தும் அவளுடைய சரமாரி தாக்குதல்கள் பீஷ்மரை உலுக்கத் தொடங்கின.

அம்பை-பீஷ்மர் உரையாடல் மிகவும் சுவையான பகுதி. ஆனால் முதற்கனல் முன்னிறுத்தும் உரையாடல்  பீஷ்மரின் தடுமாற்றமும் முரண்பட்ட சொற்களும் அவர் மேற்கொண்ட விரதம் திணிக்கப்பட்டதுதானோ என்னும் கேள்வி பலப்படுகிறது.

பொதுவாக தலைமைப் பாத்திரங்களின் தடுமாற்றங்களை காவியகர்த்தா திரைபோட்டு மறைக்க முற்படுவதுண்டு. சில நேரங்களில் அந்தத் திரை காற்றில் அசைந்தேனும் அந்தப் பாத்திரத்தின் அந்தரங்கத்தை காட்டிக் கொடுத்துவிடும்.

இராமகாதையில், சூர்ப்பநகை-இராமன் உரையாடலின்போது இராமனின் தரப்பில் சின்னஞ்சிறிய சறுக்கல் ஒன்று நிகழும்.  
 அந்தணப் பெண் வடிவில் வந்து நிற்கும் சூர்ப்பநகையிடம்,"நீ அந்தணப் பெண்,நான் அரசகுலத்தவன்.நாம் எப்படி மணந்து கொள்வது"என்றெல்லாம் பேசுவாரே தவிர தனக்குத் திருமணம் ஆகிவிட்டதை சொல்ல மாட்டார்.

இது சிறிய விஷயம்தான்.விளையாட்டாகக் கூட சொல்லியிருக்கக்கூடும்.ஆனால் இதற்குப் பின்னால் உள்ள மனநிலை ஆழமான ஆய்வுக்குரியது.    

ஆனால் முத்ற்கனலில் அப்படி எந்தத் திரையும் இல்லை.விலகும் திரைகளே அதிகம்.

"நான் காமத்தை ஒறுக்கும் நோன்பு கொண்டவன்.என் தந்தைக்குக் கொடுத்த வாக்கு அது.அதை மீற முடியாது"என்று பீஷ்மர் சொன்னதும் அம்பை அதை சற்றும் பொருட்படுத்தாமல் எதிர்பாராத கோணத்தில் அம்பு தொடுப்பதை முதற்கனல் காட்டுகிறது."நம் கண்கள் சந்தித்த போது..நீங்கள் முன்பு என்னைப் பார்த்த முதல் பார்வையே 
பெண்ணின் பார்வைதான்" (ப-156)

எப்போதுமே தர்க்கரீதியான சமாதானங்களால் உள்ளுணர்வின் கூரிய அவதானிப்புகளை எதிர்கொள்ள முடியாது.தர்க்க அறிவு மிகவும் தக்கையானது.

சுயம்வர மண்டபத்துக்குள் நுழைந்து நாணொலி செய்த பீஷ்மர்,அனிச்சையாக தன்னைத் தூக்க நான்கடிகள் எடுத்து வைத்ததை சுட்டிக் காட்டியும்,பீஷ்மரின் அகத்துடன் உரையாடிய முதல்பெண் தானே என்றும் அம்பை பேசப் பேச பீஷ்மர் பதட்டமுறுகிறார்(ப-156)

அவர் காத்திரமாக மறுக்க மறுக்க உரையாடலில் அம்பை அனாயசமாய் முன்னேறுவதை நாம் உணர முடிகிறது. தாய்மையின் கனிவுடன் "ஏனிந்த பாவனைகள்.எதற்கு உங்களை இப்படி வதைத்துக் கொள்கிறீர்கள்"என அம்பை கேட்கிறாள்.

கங்கதேசத்தவர்கள் அஸ்தினபுரியை ஆளக்கூடாதென்பதற்காக சந்தனு செய்த அரசியல் உத்தியே பீஷ்மர் மீது திணிக்கப்பட்ட தேவவிரதம் என அம்பை சொன்னதும் சீண்டப்பட்ட பீஷ்மர்,"என் ஒருவில் போதும் பாரத வர்ஷத்தை  சட்டப்படி வென்றெடுக்க"என்கிறார்.

இது ஒருவகையில் பீஷ்மரின் சுதர்மத்திற்கானமுரண்பாடு. எந்த தேசத்தை கட்டிக் காக்க தீராப் பழியையும் ஏற்கத் துணிந்தாரோ அந்த தேசத்தை தன்னால் வெல்ல முடியும் என்று வீரம் பேசுவது சமன் குலைந்த பேச்சே ஆகும்.
அந்த விநாடியே அம்பை திருப்பியடிக்கிறாள்."பார்த்தீர்களா! நான் உங்கள் வீரத்தைக் குறைத்து எண்ணிவிடக் கூடாதென நினைக்கிறீர்கள்.நான் சொல்வதெற்கெல்லாம் இதுதான் ஆதாரம்.எந்த ஆணும் காதலியிடம் பேசும் பேச்சுதான் இது"என்றாள்"(ப-157)

அம்பையை வீழ்த்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில்,பீஷ்மர் 
"நீங்கள் அன்புக்காக வாதிடுகிறீர்கள்.அபத்தத்தின் உச்சமென்றால் இதுதான்"(ப-158) என்று தன் முதல் வெற்றிக்கனியைப் பறிக்கிறார்.

வாதங்களின் தொடர்ச்சியில் பீஷ்மர் சொல்லும் ஒரு வாக்கியத்தை, "அழுக்கின் மீதேறும் மூதவி"என்று வர்ணிக்கிறார் ஜெயமோகன்.

"என்னைக் கிழித்துப் பார்க்கும் பெண்ணருகே என்னால் வாழ முடியாது.எனக்குத் தேவையானவள் ஒரு பேதை.நான் கண்ணயர விழைவது ஒரு பஞ்சு மெத்தையில்,கூரிய அம்புகளின் நுனியில் அல்ல"(ப-160)

இதற்கு எதிர்வினையாய் அம்பை அழுது உடைந்து முழங்காலிட்டுக் கெஞ்ச, அவளை அளியெடுக்கும் வேகத்தை சிரமப்பட்டு பீஷ்மர் அடக்கிக் கொண்டதாய் முதற்கனல் சொல்கிறது.

பீஷ்மர் சொன்ன சொற்களை விடவும் அதிகமாய் அம்பையை காயப்படுத்தியது,காதல் கனிய அவள் நின்ற நிலையில்,பீஷ்மரே அறியாமல் அவர் இதழ்களில் எழுந்த
ஏளனச் சுழிப்பு என்றும் முதற்கனல் சொல்கிறது.(ப-161)

அதன்பின்னர்தான் அம்பை சந்நதம் கொள்கிறாள்."இடிபட்டெரியும் பசுமரம்போல் சுருங்கி நெரிந்து துடித்த அவளுடலில் இருந்து சன்னதம் கொண்டெழும் மயான சாமுண்டியின் பேரோலம் கிளம்பியது.ரத்தமும் நிணமும் சிதற எலும்பை உடைத்து இதயத்தைப் பிழிந்து வீசுபவள்போல் மார்பை ஓங்கியறைந்து சினம் கொண்ட சிம்மக் கூட்டம் போலக் குரலெழுப்பியபடி அவள் வெளியே பாய்ந்தாள்"(ப-161)

இங்கே நாம் பீஷ்மரை இன்னும் நெருக்கமாகப் புரிந்து கொள்ள ஏற்கெனவே மேற்கோள் காட்டப்பட்ட அவரின் வாக்குமூலம் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.


   "என்னைக் கிழித்துப் பார்க்கும் பெண்ணருகே என்னால் வாழ முடியாது.எனக்குத் தேவையானவள் ஒரு பேதை.நான் கண்ணயர விழைவது ஒரு பஞ்சு மெத்தையில்,கூரிய அம்புகளின் நுனியில் அல்ல".

அம்பையை அவமானப்படுத்தும் நோக்கில் சொல்லப்பட்டாலும் தன் அடிமனதில் என்ன விதமான பெண்ணுக்கான தேடல் இருக்கிறது என்று பீஷ்மர் தன்னையுமறியாமல் சொல்லிவிட்டது போலத் தோன்றுகிறது.
இரண்டாவதாக இது பீஷ்மர் தனக்குத் தானே விடுத்துக் கொண்ட தீச்சொல் என்றும் நமக்குத் தோன்றுகிறது.அன்பின் பெருக்கத்தில் நின்ற பெண்ணை அம்புப் படுக்கை என்று இழித்துரைத்ததன் பலன்,பீஷ்மர் தன் இறுதிநாட்களை அம்புப் படுக்கையில் செலவிட வேண்டி வந்ததோ என்று தோன்றுகிறது. இந்தப் புரிதல் நோக்கி ஜெயமோகன் மெல்ல வாசகரை நகர்த்துகிறார் என்றும் தெளிவாகிறது.

அடுத்ததாக முதற்கனலின் சித்தரிப்பை மையப்படுத்தி,பீஷ்மரை நாம் புரிந்து கொள்ள முற்படுகிறோம். அவருடைய பிரம்மச்சர்யம் இயல்பானதா,திண்மையானதா என்கிற கேள்விக்கு முதற்கனலினூடாக விடை தேட முயல்கிறோம்.

இங்கே நாம் கம்பனை துணைக்கழைக்கலாம். இராமனை திரும்பவும் அயோத்திக்கு அழைத்துச் செல்ல பரதனும் சத்ருகனனும் வருவதை அவர்கள் படையெடுத்து வருவதாய் தவறாகப் புரிந்து கொண்டு  பொங்கியெழுகிற குகன் பரத சத்ருகனரை நெருக்கத்தில் பார்த்ததும் உண்மையை உணர்கிறான். அப்போது அவன் சொல்வதாய் கம்பன் எழுதும் வரிகள் இவை.

"நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்.அயல்நின்றான்
 தம்பியை ஒக்கின்றான்:தவவேடம் தலைநின்றான்
 துன்பமொரு முடிவில்லை,திசைநோக்கித் தொழுகின்றான்
எம்பெருமான் பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு"


பரதனைப்பார்த்தால் குகனுக்கு இராமனைப்போல் இருக்கிறது.சத்ருகனைப் பார்த்தால்,இலக்குவனைப்போல் இருக்கிறது.இதுவல்ல விஷயம்.

மாறுவேடப் போட்டியில் இரண்டு குழந்தைகள் ஒரே வேடத்தில் வந்தால் யாருக்கு அந்த வேடம் பெரிதும் பொருந்துகிறது என்ற அடிப்படையில் முதல் பரிசுக்குரியவரை தேர்வு செய்வார்கள். இராமனின் அடியவனாய்,பக்தனாய்,தீராக்காதலனாய் அறியப்படும் குகன் பரதனைத்தான் தேர்ந்தெடுக்கிறான்என்பதால் "தவவேடம் தலைநின்றான்"என்கிறான்.

இராமனின் தவவேடம் சிற்றன்னை சொல்லியதால் ஏற்கப்பட்டது.பரதனின் தவவேடமோ அண்ணன் மீதுள்ள பாசத்தால் தானாக முன்வந்து தரித்தது.

பீஷ்மனோ அவன் பிள்ளைகளோ நாடாள மாட்டார்கள் என்னும் உறுதியை சத்தியவதிக்கு எப்படித் தருவதென சந்தனு சங்கடப்பட்டதால் பீஷ்மர் மேற்கொண்டது பிரம்மச்சர்யம்.


மகாபாரதத்தில் முனிவர்களே இல்லறத்தில் இயல்பாக ஈடுபட்டும், "பிள்ளைவரம்" கொடுத்தும்  காவியத்தை நடத்த பீஷ்மர் வலிந்தேற்ற பிரமச்சர்யம், அவரை வாழ்நாள் முழுவதும் அம்புப் படுக்கையில்தான் கிடத்தியிருந்ததோ என்னும் எண்ணத்தை முதற்கனல் ஏற்படுத்துகிறது.