தேவியர் மூவர்

மலையரசி மாதங்கி மாதரசி அருளாலே
மலைநாடு தனில்வந்து சேர்ந்தேன்
கலையரசி வெண்கமலக் கவியரசி திருநாளில்
கைகூப்பி அவள்பாதம் வீழ்ந்தேன்
உலையரிசி தனில்தொடங்கி உயர்வரசு வரைவழங்கும்
திருவரசி பதமலரில் தோய்ந்தேன்
நிலையரசு தேவியரின் அருளரசு என்பதனால்
நிமலையரின் கருணைகொண்டு வாழ்ந்தேன்

மூன்றுபெரும் அன்னையரும் மோகனமாய் புன்னகைக்க
மூளும்வினை ஓடிவிடப் பார்த்தேன்
தோன்றிவரும் உத்தியிலே தொழிற்படுமென் புத்தியிலே
தோகையரின் உந்துதலைப் பார்த்தேன்
ஆன்றவரும் அறிஞர்களும் அன்பர்களும் பாராட்டும்
அன்பினிலும் தாயரையே பார்த்தேன்
ஏனெனக்கு இவ்வளவு ஏற்றமென எண்ணுகையில்
எதிலுமவர் பெருங்கருணை பார்த்தேன்

மாயமிந்த வாழ்க்கையென மனம்சலிக்கும் வேளையிலே
மீட்டுகிற வீணையொலி கேட்கும்
தோயும்புகழ் செல்வமெலாம் தேர்கையிலே திருமகளின்
தூயவிழி பாதையினைக் காட்டும்
காயமிதன் உள்ளொளிரும் கண்காணா உயிருக்கும்
கனியமுதை சக்திகரம் ஊட்டும்
தாயரிந்த மூவரென்ற தூயவொரு நிம்மதியில்
தாவும்மனம் நூறுவித்தை காட்டும்