Wednesday, February 2, 2011

பனைமரங்களின் கனவு

 
காற்றிலாடும் பனைமரங்கள் கனவுகண்டன
கற்பகமாய் மலர்வதுபோல் நினைவுகொண்டன
நோற்பதுபோல் ஒற்றைக்காலில் நின்றிருந்தன
நனவாகும் நமதுகனா என்றிருந்தன
 
சாமமாகும் போதுகூட விழித்திருந்தன
சாவிலாத வாழ்வுகாணத் துடித்திருந்தன
தாமதமேன் என்றுசொல்லித் தவித்திருந்தன
தூயமகன் வரவையெண்ணி சிலிர்த்திருந்தன
 
உதயவேளை தன்னிலங்கே ஒருவன் தோன்றினான்
ஓலைகளைப் பறித்தெடுத்துக் கொண்டுபோயினான்
பதப்படுத்தி ஆணிதொட்டு வரையலாயினான்
புண்ணியப்பூங் கவிதைகளைப் புனையலாயினான்
 
தேனலைகள் புரண்டெழுந்து திசைநனைத்தன
தெய்வங்களும் இறங்கிவந்து தமிழ்படித்தன
கானம்பாடும் பறவைகளும் குரல்கொடுத்தன
கம்பநாடன் என்றுசொல்லி சிறகசைத்தன
 
ஓலைகளில் அமுதவாரி ஊற்றெழுந்தது
உலகமெங்கும் கவிதையின்பக் காற்றெழுந்தது
காலம்நின்று பார்த்துவிட்டுக் கால்நடந்தது
தேரெழுந்தூர்த் தச்சன்செய்த தேரசைந்தது
 
பனைமரங்கள் அவனிடத்தில் பக்தி கொண்டன
பாட்டரசன் தொட்டவையோ முக்தி கொண்டன
கனவு நனவானதெனக் கண்டு கொண்டன
கவியமுதை ஓலைகளில் மொண்டுதந்தன
 
கம்பநாடன் விழிமலர்கள் கருணைநல்கின
கவிதைகள்தான் பனையின்நுங்கில் சுவையும்நல்கின
அன்றுமுதல் பனைமரங்கள் உயரமாயின
விண்ணிலுள்ள கம்பனுக்கு விசிறியாயின 

1 comment:

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

அருமை. பகிர்வுக்கு நன்றி.