Sunday, April 13, 2014

கோவையில் சித்திரை....

 (சற்று முன்னர் கோவை பாலிமர் சேனலில் வாசித்த கவிதை)
புத்தம் புதிதாய் இன்னோர் ஆண்டு
புறப்படத் தொடங்கும் வேளையிலே
சித்திரைத் திங்கள் முதல்நாள் எனது
வாழ்த்துகள் ஏற்பீர் நேயர்களே

காலையில் எழுந்து கண்கள் திறந்ததும்
கண்ணாடி யோடு கனிகண்டு
நாளெல்லாம் நல் வாழ்த்துகள் சொல்கையில்
நெஞ்சில் இனிக்கும் கல்கண்டு

சித்திரை வெய்யில் சூடு குறைந்து
"சில்"லென்று காற்று வருகிறது
கத்திரி வெய்யில் நாடு முழுவதும்...
கோவையில் சூடு குறைகிறது

நல்ல வெய்யில் கோவையில்-ஆனால்
கொல்லும் வெய்யில் கிடையாது
மெல்ல மெல்ல குளுமை சேரும்
கோவையின் கோடைக்கு நிகரேது

கோடை அடங்கிப் போவது போலக்
கோபம் அடங்கப் பழகிடுவோம்
ஓடைநீரின் குளுமையை சொல்லில்
ஒவ்வொரு நாளும் நிரப்பிடுவோம்

நுங்கின் இதமாய் கொங்குத் தமிழென
நாடே நம்மைப் புகழ்கிறது
பொங்கும் சுவையில் சிறுவாணிக்கென
பெயரோ உலகெங்கும் இருக்கிறது

மக்கள் மனங்கள் குளிரும் வேளையில்
மண்ணும் குளிரும் ..அறிந்திடுவோம்
சிக்கல் வளர்க்கும் சினத்தை விட்டு
சிரித்த முகமாய் இருந்திடுவோம்


தொற்று நோய்கள் பற்றி விடாமல்
 தூய பழக்கங்கள் வரவேண்டும்
சுற்றம் நட்பு சூழ்ந்திட அனைவரும்
சுற்றுலா போய் வர வேண்டும்

பாரத நாட்டின் பழைய பெருமைகள்
பிள்ளைகள் பார்க்கச் செய்திடுங்கள்
வேர்விடும் பண்பின் வரலாறுகளை
வளரும் வயதில் சொல்லிடுங்கள்

தேர்வு முடிவுகள் தேர்தல் முடிவுகள்
தேடி வருகிற காலமிது
தீர்வுகள் கிடைக்கும் எனும் நம்பிக்கை
துளிர்விடுகின்ற நேரமிது

மதிப்பெண் கிடைத்தால் மாணவ மணிகள்
மேல்படிப்புக்கு சென்றிடுவார்
மதிப்பாய் நல்ல வாக்குகள் கிடைத்தால்
மேல்சபைக்குச் சிலர் சென்றிடுவார்

மார்க்குகள் வாங்க மாணவர் எல்லாம்
முனைப்பாய் உழைத்தது போலத்தான்
வாக்குகள் வாங்கத் தலைவர்கள் எல்லாம்
வீதி வீதியாய் வருகின்றார்

தலைவர்கள் போலத் திருடர்கள் வரலாம்
தெளிவாய் தெரிந்து வாக்களிப்போம்
நிலைமை உயர நல்லவை மலர
நாட்டு நலனுக்குத் துணையிருப்போம்


பயங்கள் நீங்கிச் சுயங்கள் உணர
ஜய ஆண்டினிலே முடிவெடுங்கள்
தயக்கம் தொலைத்து தெளிவாய் உழைத்து
முயற்சி செய்து ஜெயித்திடுங்கள்

வீடுகள் தோறும் வசந்தம் நிறைக
வளரட்டும் நம்பிக்கை நாற்றுகள்
பாடும் தமிழால் பரிவுடன் சொன்னேன்...
சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்