சிற்றெறும்புப் பேரணியைசீர்குலைக்க ஒப்பாது
சற்றுநின்று பார்க்கின்ற செங்கண் களிறேபோல்
சொற்கள் பெருகி சலசலத்தல் பார்த்திருக்கும்...
முற்றி முதிர்ந்தமௌ னம்!!
நம்நோக்கம் மீறியும் நம்நாக்கு பேசினால்
நம்வாக்கு நம்வசம் இல்லையே-தன்போக்காம்
காட்டுக் குதிரை கடிவாளம் நீங்கினால்
வீட்டுக்கும் உண்டோ வழி.
வழிப்போக்கர் நாமெல்லாம்; வீதி நம தில்லை
குழிமேடு தாண்டுதல் கொள்கை-பழியென்னும்
சேறு படாவண்ணம் செல்லட்டும் நம்பயணம்
மாறுபா டெல்லாம் மறந்து.
மறந்தும் பிறர்முன்னே முள்ளைப்போ டாது
திறந்த திசைகளைத் தேடு-கறந்தபால்
போல மனமிருந்தால் போதும் அதுவேதான்
ஆலமுண்ட கண்டன் அமுது
அமுதென்றும் நஞ்சென்றும் அங்கெதுவும் இல்லை
நமக்குள்தான் பாற்கடலும் மத்தும்- தமக்குள்ளே
தேவர் அசுரர் திகழுவதைக் கண்டவர்கள்
சீவனிலே தோன்றும் சிவம்.
சிவம்பெருக்க வந்தோம் சிறுமாயை யாலே
அவம்பெருக்கக் கொண்டோமே ஆசை-தவமென்னும்
கட்டிக் கரும்பான கண்ணுதலான் முன்நாமும்
வட்டமிடும் சிற்றெறும் பு.