Tuesday, April 29, 2014

ஆவேனோ ஆளாய் அவர்க்கு


 காரைக்கால் அம்மைகை கொட்டிக் கவிபாட
ஊரைவிட் டோரமாய் ஓமென்று-காரிருளில்
தாண்டவம் ஆடும் திருவாலங் காட்டீசன்
பூண்டகழல் தானே பொறுப்பு.

இமயம் அதிர இமைகள் அசைப்பான்
டமருகங் கொட்டிதிசை யெட்டும்-உமையும்
இசைந்தாட ஆடும் இறைவனென் நெஞ்சம்
அசையச்செய் வானோ அருள்.

தேகத்தில் யானையுரி தன்னிடையி லேபுலித்தோல்
நாகங்கள் பூணும் நகைகளாம்-ஆகட்டும்
மண்டயோ டேந்தும் மகேசனொரு மானிடனை
அண்டவிடு வானோ அருகு.

அந்தரத்தில் வாழும் அமரர் நெருங்குங்கால்
நந்தி பிரம்பு நிறுத்துமாம்-வந்திக்காய்
வாங்கிய ஓரடியை வாரி வழங்கியவர்
ஆங்கும் தொடர்வார் அது.

தக்கனது யாகந் தவிடு பொடியாக
மிக்க சினங்கொண்டாய் மாதேவா-அக்கிரமம்
மாமனுமா காது மயலரும்ப அம்புவிடும்
காமனும் ஆகாதோ கூறு.

காலமெல்லாம் உந்தனிரு காது களில்முனிவர்
சீலமுறப் பாட்டிசைக்கச் செய்தாயே-நீலகண்டா
அய்ப்பாடு மாட்டி அலைகின்றோ மேயிந்த
ஏற்பாடு நீர்செய்த தோ.

எண்தோளாம் முக்கண்ணாம் என்ன இருந்தென்ன
பண்கேட்டால் போதும் பரமனுக்கு-விண்ணவரும்
ஏங்கவே தூதனாய் இங்கிறங்கிப் போனானே
பாங்கனைப் போலே பரிந்து.

மாங்கனிக்கும் பிட்டுக்கும் மண்ணில் இறங்கியவன்
ஆங்கொருநாள் பிள்ளைக் கறி கேட்டான் - தாங்கும்
இளையான் குடிமாறன் இட்டகீ ரைக்கும்
வளைந்தானே என்ன வயிறு


காளையே வாகனமாய்க் கொண்டவராம் சுந்தரனாம்
ஆளையே ஆளாகக் கொண்டவராம்-நாளையே
போவேனோ என்றவர்க்குப் பூங்கழலைத் தந்தவராம்
ஆவேனோ ஆளாய் அவர்க்கு.

கையில் அனலிருக்க கங்கை தலையிருக்க
மெய்யில் பொடியிருக்க மான்மழுவும்-ஐயன்
கரத்திருக்க ஆடுங் கழலிரண்டும் எந்தன்
சிரத்திருக்க மாட்டாதோ சொல்

(2009 ல் எழுதிய வெண்பாக்கள்..மின் பரணில் கிடந்தன)