Wednesday, September 22, 2010
கடல் தடங்கள்
சிப்பிகள் கிடக்கிற கரையோரம் -நான்
சிரத்தையில்லாமல் நடக்கின்றேன்
உப்புக் கடலலை கூச்சலிட்டும்- நான்
ஒன்றும் சொல்லாமல் கடக்கின்றேன்
கலங்கரை விளக்குகள் கப்பலெல்லாம்-என்
கண்களில் பட்டிடப் போவதில்லை
பலமுறை வருடிய ஓடங்களை-நான்
பார்த்தினி ஏதும் ஆவதில்லை
மூச்சை யடக்கிநான் முத்தெடுத்தேன் -அது
மாலையென் றானபின் கையிலில்லை
வீச்சினை உணர்ந்து உப்பெடுத்தேன் -அது
விரல்களில் கரித்தது தங்கவில்லை
ஓடிப் பொறுக்கிய கிளிஞ்சல்களும்-நகம்
ஒட்டிய கடற்கரை மணல்துகளும்
வாடி யிருக்கிற நேரத்திலே-சில
வார்த்தைகள் என்னுடன் பேசிடட்டும்
காலக் கடல்ரொம்பப் பெரியதுதான் -அது
காட்டி மறைப்பவை ஏராளம்
காலை வருடிய சிற்றலையை-தொட்டுக்
காட்ட முடியுமோ யாராலும்
உப்புக் கடலலை பக்கத்திலே -நான்
உள்ளவன் என்பதைக் காலம் சொல்லும்
எப்போதும் கடலுண்டு என்னுடனே-இதை
இமைக்குள் தெரிகிற நீலம்சொல்லும்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//காலக் கடல்ரொம்பப் பெரியதுதான் -அது
காட்டி மறைப்பவை ஏராளம்//
//எப்போதும் கடலுண்டு என்னுடனே-இதை
இமைக்குள் தெரிகிற நீலம்சொல்லும்//
அருமை!!
உங்கள் தொடர் வாசிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி நிலாமகள்
Post a Comment