(26.09.2010) மதுரையில் ஈஷாவின் மகாசத்சங்கம். அருகே அழைத்த சத்குரு வாஞ்சையுடன் நலம் வினவி மிகுந்த கனிவுடன் தோள்களில் தட்டிய நொடியில் உள்ளே எதுவோ உடைய, அந்தத் தாக்கத்தில் எழுந்த கவிதை இது:
தோளில் அவர்கரம் படிந்தது - ஒரு
தூரம் உடனே தொலைந்தது
வாள்போல் பார்வை நுழைந்தது-என்
வினையின் வேரொன்று அறுந்தது
பாதை இருளின் வெளிச்சமாய்-ஒரு
பாறை கனமுள்ள அனிச்சமாய்
ஓதிட முடியா உருக்கமாய்-இங்கே
ஒருவரும் தராத நெருக்கமாய்
பொற்கணம் அருளிய குருவிடம்-என்
பொல்லா வினைகளை இறக்கினேன்
அக்கணம் தோன்றிய வெறுமையில்-வான்
அமுதம் அள்ளிப் பருகினேன்
கன்றின் இதழ்தொடும் தாய்முலை-எனைக்
கருணையில் கரைக்கிற மாமலை
நன்றியில் கண்களும் வான்மழை-என்
நெஞ்சினில் ஆனந்தத் தேனலை
1 comment:
தோளில் அவர்கரம் படிந்தது - ஒரு
தூரம் உடனே தொலைந்தது
வாள்போல் பார்வை நுழைந்தது-என்
வினையின் வேரொன்று அறுந்தது
superb sir.........
Post a Comment