தனித்தனியாய் சரவணப் பொய்கையில் வளர்ந்த குமர குமாரர்களை பராசக்தி
அரவணைக்க ஒன்றான திருவுரு,கந்தன் என்னும் வடிவமாய் கொண்டாடப்படுகிறது. ஆறு
திருவுருவங்கள் என்றாலும் ஒரே வடிவமாய் நின்றாலும்,குழந்தைக் குமரனை
கொஞ்சித் தீர்க்கிறது தமிழ்."சின்னஞ் சிறுபிள்ளை,செங்கோட்டுப் பிள்ளை
சிவந்த பிள்ளை" என உச்சி முகர்கிறது. சைவ மரபில், பிள்ளையார் என்றால்
முருகனைத்தான் குறிக்கும். மூத்த பிள்ளையார் என்றால்தான் விநாயகரைக்
குறிக்கும்.
புவனங்கள் அனைத்தையும் ஈன்ற உமையம்மையின் திருமுலைப்பாலை
அருந்தி, சரவணப் பொய்கையில் தாமரை மலரில் ஏறி,கார்த்திகைப் பெண்கள்
முலைப்பாலையும் விரும்பி அருந்தி அதன்பின்னும் அழுகிறதாம் முருகக்
குழந்தை.அதன் அழுகுரல் கேட்டதும் எதிரொலியாய் சில அழுகுரல்கள்.தான் வற்றப்
போகிறோமே என்று கடல் அழ, தான் பிளவுபடப் போகிறோமே என்று கிரவுஞ்ச மலை அழ,
தான் அழியப் போவதை எண்ணி சூரர் குலமும் அழுததாம்.
இந்தக் குழந்தைதான் குறிஞ்சி நிலத்தை உரிமையாய்க் கொண்டவன் என்கிறார் அருணகிரிநாதர்
எள்ளத் தனைவந் துறுபசிக்கும்
இரங்கிப் பரந்து சிறுபண்டி
எக்கிக் குழைந்து மணித்துவர்வாய்
இதழைக்குவித்து விரித்துழுது
துள்ளித் துடிக்கப் புடைபெயர்ந்து
தொட்டில் உதைந்து பெருவிரலைச்
சுவைத்துக் கடைவாய் நீரொழுகத்
தோளின் மகரக் குழைதவழ
தொட்டில் உதைந்து பெருவிரலைச்
சுவைத்துக் கடைவாய் நீரொழுகத்
தோளின் மகரக் குழைதவழ
மெள்ளத் தவழ்ந்து குறுமூரல்
விளைத்து மடியின் மீதிருந்து
விம்மப் பொருமி முகம்பார்த்து
வேண்டும் உமையாள் களபமுலை
விளைத்து மடியின் மீதிருந்து
விம்மப் பொருமி முகம்பார்த்து
வேண்டும் உமையாள் களபமுலை
வள்ளத் தமுதுண்டு அகமகிழ்ந்த
மழலைச் சிறுவா வருகவே
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.
மழலைச் சிறுவா வருகவே
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.
இந்த அழகுக் குழந்தையை அழவேண்டாமென குமரகுருபரரும் கெஞ்சுகிறார்."விரல் சப்பியதால் அமுதம் ஊறிய இதழ்கள் உலர்ந்துவிடக்கூடாது.விம்மலில் தொடங்கி பொருமலில் வளர்ந்து அலறி உன் குரல் கம்மிவிடக் கூடாது.கண்ணீர் சிந்துவதால் உன் கண்மலர்கள் சிவந்துவிடக்கூடாது.அழுவதால் அஞ்சனம் கரைந்து உன் அழகுத் திருமேனியில் கருமை படியலாகாது.காலை உந்தி எழு பார்க்கலாம் .. கைகளை ஒன்று சேர்த்து செங்கீரை ஆடு 'என்று கந்தக் குழந்தையை சமாதானம் செய்கிறார் குமரகுருபரர்.
விரல்சுவையுண்டு கனிந்தமுதூறிய செவ்விதழ் புலராமே,
விம்மிப் பொருமி விழுந்தழுது அலறியுன் மென்குரல் கம்மாமே,
கரைவுறும் அஞ்சன நுண்துளி சிந்திக் கண்மலர் சிவவாமே
கலுழ் கலுழிப்புனல் அருவி படிந்துடல் கருவடிவு உண்ணாமே
உருவ மணிச்சிறு தொட்டில் உதைந்து நின் ஒண்பதம் நோவாமே
ஒருதாள் உந்தி எழுந்து இருகையும் ஒருங்கு பதித்து நிமிர்ந்து
அருள்பொழி திருமுகம் அசைய அசைந்தினிது ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குகன் ஆடுக செங்கீரை"
அறுமுகச் செவ்வேளின் அழகுக் கோலத்தை செழுந்தமிழ் இலக்கியங்கள் கொண்டாடும் அழகே அழகு!!
(வருவான்)