Tuesday, November 17, 2015

சஷ்டி நாயகன் சண்முகன்-6-காதல் முருகன்

"யானை தன் அணங்கு வாழ்க! மாறிலா வள்ளி வாழ்க!" என்று கந்த புராணத்தின் நிறைவில் முருகன் வாழ்த்தில் வரும். அசுரர்களிடமிருந்து தேவர் குலத்தை மீட்ட முருகனுக்கு இந்திரன் தன் மகளாகிய தெய்வானையை மணமுடித்துத் தந்தான். வேட்டுவர் குலத் தலைவன் நம்பிராஜன் மகளாக வளர்ந்த வள்ளியை வேலன் தேடிப்போய் மணமுடித்தான்.

இருவருமே திருமாலின் புதல்வியர் என்றும் வெவ்வேறு இடங்களில் என்றும் கந்த  புராணத்திலேயே செய்தி உண்டு. மாமன் மகள்கள் !!

அருளாளர்கள் முருகன் மேல் இயற்றிய பனுவல்களில் வள்ளிக்கு கூடுதல்முக்கியத்துவம் தரப்படுவதைக் காணலாம். மானின் வயிற்றில் மானிடப் பெண்ணாய் அவதரித்த வள்ளியம்மை வரலாறு ஒரு தத்துவத்தைஉணர்த்துகிறது. தன்னை மறந்திருக்கும் உயிர்களை முருகன் வலியத் தேடிப்போய் ஆட்கொள்வான் என்பதே அந்தத் தத்துவம்.

அதனால்தான், முதன்முதலில் வள்ளியை நாரதர் சொன்னவண்ணம் சென்று பார்த்த கந்தன் பழம்பொருள் மீண்டும் கிடைத்ததுபோல் மகிழ்ந்தான் என்கிறார்
கச்சியப்பர்.

"மண்டலம் புகழுந் தொல்சீர் வள்ளியஞ் சிலம்பின் மேல்போய்ப் 
பிண்டியந் தினையின் பைங்கூழ்ப் பெரும்புனத் திறைவி தன்னைக் 
கண்டனன் குமரன் அம்மா கருதிய எல்லை தன்னில் 
பண்டொரு புடையில் வைத்த பழம்பொருள் கிடைத்த வாபோல்." 

 
"வள்ளிக்கு வாய்த்தவனே!மயிலேறிய மாணிக்கமே" என்னும் அருணகிரியார்,
 வள்ளிமேல் இருக்கும் காதலால் முருகன் அவளுடைய திருவடிகளைத் தொழுவான் என்பதை பகிரங்கமாகப் பறை சாற்றுகிறார் .

"பணியா எனவள்ளி பதம் பணியும்
  தணியா அதி மோக தயாபரனே"
என்றும்

"பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா" 
 
என்றும் பாடுகிறார்.  அதற்காக அருணகிரியாரிடம்" நீங்கள் தெய்வானையம்மைக்கு ஏன் முக்கியத்துவம் தரவில்லை என்று கேட்க முடியாது. "முதல் பாடலிலேயே அம்மையைத் தானே பாடினேன்"  என்று
சொல்லித் தப்பித்து விடுவார்
"முத்தைத் திரு பத்தித் திருநகை
  அத்தி" எனச்சொல்லித்தான் அருணகிரியார் திருப்புகழையே தொடங்குகிறார்.

இனி, கந்தபுராணத்தின்படி முதியவர் வேடத்தில் வந்து முருகனாகக் காட்சி கொடுத்து வள்ளியையும் மையல் கொய்யச் செய்து மறுநாள் வருவதாய் பன்னிருகைப் பரமன் புறப்பட்டுப் போய்விடுகிறான்.பிரிவாற்றாத வள்ளியை  அனைவரும் உறங்கிய நேரம் பார்த்து ,தோழி முருகனிடம் கொண்டு சேர்க்க அழைத்துச் செல்கிறாள்.முருகனும் வள்ளியைப் பிரிந்திருக்க ஏலாது அங்கே வந்து தவிக்கிறான்.


தாய்துயில் அறிந்து தங்கள் தமர்துயில் அறிந்து துஞ்சா 
நாய்துயில் அறிந்து மற்றந் நகர்துயில் அறிந்து வெய்ய 
பேய்துயில் கொள்ளும் யாமப் பெரும்பொழு ததனிற் பாங்கி 
வாய்தலிற் கதவை நீக்கி வள்ளியைக் கொடுசென் றுய்த்தாள்
 
முருகன்  உடன்போக்கு முறையில் அழைத்துச் செல்ல முற்படுகையில் நாரதர் தடுத்து நன்மணம் முடிக்கச் சொல்வதாகவும்,அதேநேரம் மகளைக் காணாமல் தவிக்கும் தாய் தந்தைக்குச் சொல்ல எல்லோரும் வந்து முருகனே தங்கள் மகளை மணக்க வந்தவன் என்றறிகிறார்கள்.

வந்தவன் முருகன் என்பதை அறியும் வரை பெற்றோரும் உற்றோரும் படும் தவிப்பை கச்சியப்பர் பதிவு செய்கிறார். அதனை சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் விரிவாக தன் காவடிச் சிந்தில் பாடுகிறார். 


பாதிராத்திரி வேளையில் வீட்டுப்
          பக்கத்தில் வந்து மேவிப் - பஞ்ச
          பாதகன் ஒரு பாவி - சிறு
          பாவையை மெள்ளக் கூவிக் - கையைப்
     பற்றிக் கூட்டிக்கொண் டேகி னான்; பதை
          பதைக்குதே என்றன் ஆவி


 தேடினும்கிடை யாத தாகிய
          திரவியக் கரு கூலம் - போலே
          செனித்தபெண் ணுக்குச் சீலம் - வேறே
          திரும்பின தென்ன காலம்? - கொங்கை
     திரண்டி டாமுன்னம் மருண்டி டற்கெவன்
          செய்தானோ இந்த்ர சாலம்?

காடுசேர்கையில் கரடி வேங்கைகள்
          காட்டுமே ஆர வாரம், - அதைக்
          காதில் கேட்கவி சாரம் - வைத்துக்
          கலங்குவாள்; அந்த நேரம் - என்றன்
     காதலி தன்னை ஆதரித் துயிர்
          காப்பது வேலன் பாரம்.


இதனை முருகன் மேல் காதல்கொண்ட பெண்ணின்  தாய் நிலையில் இருந்து பாடினாலும் இதனை வள்ளியின் நற்றாயோடும் செவிலித்தாயோடும் பொருத்திப் பார்க்க இந்தச் சிந்தின் சில பத்திகள் இடம் கொடுக்கின்றன.

குன்று தோறும் இருப்பவன் குமரன் என்பதற்கு ஒரு புதிய விளக்கத்தை திரிகூட ராசப்பக் கவிராயர் வழங்குகிறார்.குறவர்கள் வேறு குலத்தின் பெண் கொள்ளவோ கொடுக்கவோ மாட்டார்கள். விதிவிலக்காக முருகனுக்குக் கொடுத்தார்களாம்.சும்மா கொடுக்கவில்லை.முருகன் வள்ளியை யானையிடமிருந்து காத்த வீரத்தைப் பாராட்டியும் வேங்கை மரமாய் வள்ளிக்கு நிழல் கொடுத்த காதலை மெச்சியும்தான் கொடுத்தார்களாம். அதுமட்டுமா? 
தங்கள் ஆளுகையிலிருக்கும் அத்தனை மலைகளையும் மாப்பிள்ளைக்கு சீதனமாய் கொடுத்து விட்டார்களாம்.


"ஒருகுலத்திற் பெண்கள்கொடோம்
 ஒருகுலத்திற் கொள்ளோம்
உறவுபிடித்தாலும்விடோம்  குறவர்குலம்நாங்கள்
 வெருவவரும் தினைப்புனத்தில் பெருமிருகம் விலக்கி
 வேங்கையாய் நிழல்பரப்பும் பாங்குதனைக் குறித்தே 
 அருளிலஞ்சி  வேலர்தமக்கு ஒருமகளைக் கொடுத்தோம் 
ஆதினத்து மலைகளெல்லாம் சீதனமாக் கொடுத்தோம்"

இப்படி காலந்தோறும் தமிழ்க்கவிஞர்களால் உறவோடும் உரிமையோடும் கொண்டாடப்படும் கந்தன் புகழ்போற்றும் கந்தபுராணத்தை வாசிப்பதால் .வாசிக்க முயல்வதால் அல்லது பிறர் வாசிக்கக் கேட்பதால்என்ன பயன்? கச்சியப்பரே சொல்கிறார் கேளுங்கள்.

                    
பொய்யற்ற கீரன் முதலாம்புல வோர்பு கழ்ந்த 
ஐயற் கெனது சிறுசொல்லும் ஒப்பாகும் இப்பார் 
செய்யுற் றவன்மால் உமைபூசைகொள் தேவ தேவன் 
வையத்த வர்செய் வழிபாடு மகிழும் அன்றே
 
 வற்றா அருள்சேர் குமரேசன்வண் காதை தன்னைச் 
சொற்றாரும் ஆராய்ந் திடுவாருந் துகளு றாமே 
கற்றாருங் கற்பான் முயல்வாருங் கசிந்து கேட்கல் 
உற்றாரும் வீடு நெறிப்பாலின் உறுவர் அன்றே
 
 
(எப்போதும் உடனிருப்பான்)