Monday, November 9, 2015

ஏற்றாத தீபத்தும் எரிகின்ற ஜோதி!


கண்ணனைப் பற்றிய கவியரசர் கண்ணதாசனின் வரிகளில் இதுவும் ஒன்று. வள்ளலார் தண்ணீரில் விளக்கெரித்த வரலாறு நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது.தான்சேன் இசையால் விளக்கில் ஒளிகொண்ர்ந்ததும் நாம் அறிந்ததே. ஆனால் "ஏற்றாத தீபத்தும் எரிகின்ற ஜோதி"என்னும் வரியில் சூட்சுமமாய் சுடரும் தொனிப்பொருள், கவிஞர் உத்தேசித்து எழுதியதாகவும் இருக்கலாம். வந்து விழுந்ததாகவும் இருக்கலாம்.


இறைவன் முன் ஏற்றப்படும் ஒரு சுடர், நெருப்பென்னும் பெரும்பூதம் இறை சந்நிதியில்கட்டுப்பட்டிருப்பதை உணர்த்துகிறது. நெருப்பு பயன்பாட்டுக்கேற்ப பல்வேறு பெயர்களைக் கொண்டிருப்பது தமிழின் மொழிவளத்தை உணர்த்துகிறது. தழல்,கனல் போன்ற சொற்களில் தெறிக்கும் சீற்றம் அகன்று சோதி, சுடர் போன்ற சொற்கள் சாந்தத்தையும் மங்கலத்தையும் உணர்த்துகின்றன.


வள்ளலார் வழி ஒரு மந்திரமாகவேஆகிவிட்ட "அருட்பெருஞ்சோதி" எனும் சொல், மாணிக்க வாசகரின் மகத்துவக் கொடை. "ஆதியும் அந்தமுமில்லா அரும்பெருஞ்சோதி" என்கிறார் அவர். இதற்கு உரையெழுத வந்த பெருமக்கள்,
அருட்குணமும் தனித்தன்மையும் கொண்டதால் அரும்சோதி, கதிரவன் -நிலவு ஆகிய பேரொளிக் கூறுகளைக் கண்களாகக் கொண்டதால் பெரும் சோதி" என்றெல்லாம் விளக்கினர்.


ஏற்றாத தீபம் என்பது உடல். இதில் உள்ளே ஒரு சோதி எரிகிறது . அதுவே இறை. மறைந்திருக்கும் இறை நமக்குள் தேடல் தீவிரப்படும் போது வெளிப்படுகிறது.


எத்தனை முயன்றாலும் பச்சை விறகு பற்றிக் கொள்வதில்லை. காய்ந்த விறகு பற்றிக் கொள்கொகிறது. பற்றும் தன்மை நெருப்பில் மட்டும் இருந்து பயனில்லை. விறகுக்குள்ளும் இருக்கும் தீயே இந்த வித்தையைச் செய்கிறது.


'விறகிற் தீயினன்; பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்" என்கிறார் திருநாவுக்கரசர். எனவே உடலாகிய மண் அகலில் உள்ளுறையும் சோதியாய் உள்ளவன் இறைவன்.


உயிரில் சுடர் பூத்து  தேடல் தவிக்கும் போது அந்தச் சோதி   வெளிப்படுகிறது.


"சோதியே! சுடரே! சூழொளி விளக்கே" என்னும் வள்ளலாரின் வரி இங்கு பல திறப்புகளைத் தருகிறது. இறையாகிய சோதியின் முன்னே  உயிராகிய சுடர் உள்நிலையில் உணரத் தலைப்படும் போது  சுற்றியுள்ள அனைத்திலும் உள்ள தெய்வத் தன்மை துலங்குகிறது.சூழொளி விளக்கு என்னும் வரி அந்த உணர்வைத்தான் தருகிறது.


உள்ளிருக்கும் சோதியைஉணரத் தூண்டும் உன்னதத் திருநாளாய் இந்த தீபாவளி அமையட்டும்.