Tuesday, November 10, 2015

பின்வாசல் வழிவந்த ஶ்ரீபதி பத்மநாபா

 
 
கோவையில் புகழ்பெற்ற கிறிஸ்துவக் கல்வி நிறுவனம்,நிர்மலா மகளிர் கல்லூரி.பத்தாண்டுகளுக்கு முன்னர், ஒருநாள் அந்த வளாகத்துக்குள் பரபரப்பாக பின்வாசல் வழியாக நுழைந்தார் ஶ்ரீபதி பத்மநாபா.அங்குமிங்கும் பார்த்தபடி அவர் வரவும் அவரை நோக்கி வேகமாக வந்தார் ஒரு பாதிரியார்.

பின்வாசல் வழியே வந்தது தவறோ  என இவர் தயங்கி நிற்க அருகே வந்த பாதிரியார் உரத்த குரலில் கேட்டார், "என்ன ஶ்ரீபதி! எப்படி இருக்கீங்க?"ஶ்ரீபதிக்கு அதிர்ச்சி. பாதிரியாரை அடையாளம் தெரியவில்லை.அதேநேரம் எங்கோ பார்த்தது போலவும் இருந்தது.சில விநாடிகளிலேயே அடையாளம் தெரிந்து மலர்ந்து சிரித்தார்.

நான்தான் அந்தப் பாதிரியார்!!லோகிததாஸின் "கஸ்தூரிமான்" தமிழ் படத்தில் பாதிரியாராக நடித்துக் கொண்டிருந்த (?) நேரம் அது. ஶ்ரீபதியும் லோகியைப் பார்க்கத்தான் வந்திருந்தார்.படத்தில் பாடல் எழுதுவது தொடர்பாக லோகியை பார்க்க வந்திருந்தார் என்று ஞாபகம்.

நவீன கவிஞராக, வரைகலை வடிவமைப்பாளர் மற்றும் ஆரண்யம் ஆசிரியர் பொறுப்புகளை சுதேசமித்திரனுடன் பகிர்ந்து கொள்பவராக,ஶ்ரீபதி பத்மநாபாவை நான் அறிவேன். ஒருகாலத்தில் சுதேசமித்திரனும் சங்கரும் கோவையில் லாரல் -ஹார்டி போல வலம் வந்தவர்கள். ஆனால் உருவத்தில் இருவருமே அப்போது அரை ஹார்டிகள்தான். சுதேசமித்திரனுக்கும் ஶ்ரீபதிக்கும் கூர்மையான நகைச்சுவை உணர்வுண்டு.ஶ்ரீபதி கொஞ்சம் கமுக்கமாய் இருப்பார். சுதேசமித்திரன் கலகலப்பாகப் பேசுவார்ரொம்ம்பவே....
 
ஶ்ரீபதி பத்மநாபா,சுதேசமித்திரன்,கைதபுரம் 

இதன்மூலம் நான் சொல்ல வருவது அபோதெல்லாம் பெரிய மனிதர்களை தொழில் நிமித்தமாக சந்திக்க சுதேசமித்திரனை நம்பி அழைத்துக் கொண்டு போக முடியாது என்பதுதான்...(இப்போதெல்லாம் அப்படியில்லை என்பதையும் சொல்ல வேண்டும்..ரொம்பவே பக்குவமாகிவிட்டார்)

என்னுடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பு,'இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்". ஈஷாவின் பாவஸ்பந்தனா வகுப்பில் ஏற்பட்ட அனுபவங்களில் எழுந்த கவிதைகள். அந்தத் தொகுப்பை இவர்கள் இருவரும்தான் வடிவமைத்தனர். அட்டைப்படத்தை ஶ்ரீபதி வடிவமைத்தார். பலருக்கும் அந்த அட்டையின் அம்சம் புரியவில்லை. சிலருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அந்த அட்டையின் புகைப்படம் அடங்கிய அழைப்பிதழை சத்குருவிடம் தந்தேன். "புக்கோட ரேப்பர் பிரமாதமா பண்ணீட்டீங்க" என்றார் சத்குரு.

இத்தனைக்கும் மத்தியில் ஶ்ரீபதி இசைப்பாடல்கள் எழுதுவார் என்பது அவர் லோகியைக் காண வந்தபோதுதான் எனக்குத் தெரியும் .பின்னர் அந்தப் பாடல்கள் பற்றி சுதேசமித்திரனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். சமீபத்தில் என் வலைத்தளம் தொடக்க விழாவிற்கு வந்திருந்த ஶ்ரீபதி   பத்மநாபா தன்னுடைய இரண்டு நூல்களை என்னிடம் தந்தார். ஒன்று,"மலையாளக் கரையோரம்" எனும் தலைப்பிலான கட்டுரைகள். இன்னொன்று,குஞ்ஞுண்ணி கவிதைகளின் மொழி வடிவம். முந்தைய நூலுக்கு நந்தன் ஶ்ரீதரனும் பிந்தைய நூலுக்கு விஜயகுமார் குண்ணிசேரியும் முன்னுரைகள் தந்துள்ளனர்.


சுவாரசியமான கட்டுரைகள் கொண்டது மலையாளக் கரையோரம்.டுங்களே, யோத்தி மாசி போன்ற அநியாய ரகளைக் கட்டுரைகள்,தன் தமிழாசிரியர் திரு.அரங்கநாதன் தமிழ் கற்பிக்கும் உத்தி,என பல அம்சங்களையும் கொண்ட இந்த நூலில் ஶ்ரீபதி பத்மநாபாவின் இசைப்பாடல் அனுபவங்கள் அள்ளிக் கொண்டு போகின்றன.

புகழ்பெற்ற பாடல்களைப் பகடி செய்து எழுதும் வழக்கம் பற்றிய கட்டுரை சிரிக்கவும் வைக்கிறது. மலைக்கவும் வைக்கிறது."பறவைகளில் அவள் கௌதாரி,பாடல்களில் அவள் ஒப்பாரி,கனிகளிலே அவள் பப்பாளி, காற்றினிலே அவள் சூறாவளி" என்கிற பாடலும்,"மண்ணில் இந்தக் காதலென்னும் போதை என்று தீருமோ,என்று கன்னிப் பாவை என்னும் பேயின் ஆட்டம் ஓயுமோ" என்கிற பாடலும் அட்டகாசம்.

கைதபுரம் தாமோதரன் பற்றிசொல்லும் போது "குஞ்ஞிக் கிடாவின்னு நல்கான் அம்ம நெஞ்சில் பாலாழி ஏந்தி" என்னும் அவரின் வரியை அவருடைய அனுமதியுடன், தன்னுடைய பாடலில் "பசிக்கிற போது அமுதினை ஊட்ட பாற்கடல் நெஞ்சில் ஏந்திய தாயே" என சேர்த்துக் கொண்டதாக ஶ்ரீபதி சொல்கிறார். "பாலுக்கழுத பிள்ளைக்கு பாற்கடல் ஈந்த பிரான்" என்று சைவ இலக்கியங்கள் சிவபெருமானைக் கொண்டாடுகின்றன.

தமிழ்சினிமா பாடல்களில் நா.முத்துக்குமாரின் பங்களிப்பை மகிழ்ந்து கொண்டாடும் கட்டுரைகள் ஶ்ரீபதியின் துல்லிய அவதானிப்பை உணர்த்துகின்றன.ஶ்ரீபதி திரைப்படம் எடுத்த கதை, ஶ்ரீபதி லாட்டரி டிக்கெட் நிறுவன மேலாளரான  கதை எல்லாம் அபாரம்.சரஸ்வதி டீச்சரும் முத்தப்பனும் பின்னே ஞானும் எனும் கட்டுரை கண்கலங்க வைக்கிறது.
ஶ்ரீபதி இந்த இரு நூல்களிலும் மறு அவதாரம் எடுத்திருக்கிறார். மறு அவதாரம் என்பதில் எத்தனையோ அர்த்தங்கள்,,

அவருக்கென் மனமார்ந்த வாழ்த்துகள்.


(இரு நூல்களுமே புது எழுத்து வெளியீடுகள். குஞ்ஞுண்ணி கவிதைகள் வாசித்துக் கொண்டிருக்கிறேன்,, )