இன்று இளங்காலையில், கோவை பந்தயச்சாலையில் நடை.காதுகளில் இசை ஒலிப்பான் பொருத்தியிருந்தேன். வாணி ஜெயராம் வாரி வழங்கிக் கொண்டிருந்தார். அவருடைய பாடல்கள் நம்மோடு பேசும்.முற்றிலும் புதிய மொழியில், இசையின் புதுப்புது நிறங்களில்...
ஒரு பாடலின் நிறைவுக்கும் மறு பாடலின் தொடக்கத்திற்கும் நடுவிலான எதிர்பார்ப்பில் ஒளிர்கிறது எட்டாம் ஸ்வரம். வசீகர ஆலாபனைக்குப் பிறகு வெய்யிற்கீற்றாய் வருகிறது பல்லவி...
"குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட
கோதை நாயகன் வருவானடி
கோடிக் காலங்கள் நான் தேடி நின்றேன்
அவனை அறிவேனடி
குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட
கோதை நாயகன் வருவானடி"
பலமுறை கேட்ட பாட்டுதான். புத்தம் புதிதாய்ப் பொலிகிறது. படம் பார்க்காதவர்களுக்கும் கதை சொல்லும் கருணை, கவியரசரின் பாங்கு.
கணவனைப் பிரிந்திருக்கும் பெண்ணொருத்தி எந்த நேரமும் எதிர்ப்படுவான் என்னும் நம்பிக்கையில் திளைக்கிறாள். முதல சரணத்தில் பிரார்த்தனை. மறு சரணத்தில் குழந்தைக்குச் சொல்லும் நம்பிக்கை மொழி.
வானில் புகையோடு வருகின்ற தேரில்
ஞானத் திருச்செல்வன் வர வேண்டும் நேரில்
மானம் மரியாதை அவன் கையில் தாயே
அவனை என் கையில் தர வேண்டும் நீயே
தெய்வீகமன்றோ பெண்ணுக்கு தாலி
மணவாளன் தானே தாலிக்கு வேலி
மெத்தை விளையாட்டு சுகம் கண்ட பின்னே
தத்தை மொழியோடு தவழ்கின்ற கண்ணே
தந்தை வரும் நாளை எல்லோர்க்கும் கூறு
வந்த பின்னாலே பதினாறு பேறு...
எந்தப் படமென்று தெரியவில்லை .பழங்காலப் படங்கள் பற்றிய எல்லாக் கேள்விகளுக்கும் அரை விநாடிக்குள் பதில்தரும் திரைக் களஞ்சியம் கவியன்பன் கே.ஆர்.பாபுவை அலைபேசியில் அழைத்தேன்,. ஏழு மணி ஆகியிருந்தது.உறக்கத்தின் கடைசித் துளிக்கும் கண்திறப்புக்கும் இடையிலான கணத்தில் என் அழைப்பு அவரை எழுப்பியிருக்க வேண்டும்.
தூக்கக் கலக்கத்துடன் பதில் தந்தவர் இரண்டொரு நிமிடங்களிலேயே உற்சாகமானார்."ஏன் பாபு! இந்த குங்குமக் கோலங்கள் பாட்டு..''என்று தொடங்கியதுதான் தாமதம்." அண்ணன் ஒரு கோயில் தானுங்க! சிவாஜி படங்களில முக்கியமான படம். அதுக்கு மொதல்ல "எங்க வீட்டு தங்க லட்சுமி"ன்னுதான் பேரு வச்சாங்க! ஊட்டியில ஷூட்டிங்கப்போ சிவாஜிதானுங்க அண்ணன் ஒரு கோயில்னு பேரு வச்சாரு.
இந்தப் படம் கொடுத்த தெம்பில தானுங்க திரிசூலமெல்லாம் வந்தது. அதுவுமில்லாம படம் வர்றதுக்கு கொஞ்சம் முன்னாலதாங்க நாகப்பட்டினம் இடைத்தேர்தலு. இந்திரா காங்கிரஸ் அதிமுக கூட்டணியாச்சுங்களா!பத்து வருஷத்துக்கப்புறம் எம்ஜிஆரை சிவாஜி பார்க்கறாருங்க!! ரெட்டை எலையில அண்ணன் ஒரு எலையின்னா நான் ஒரு எலையின்னு நாகப்பட்டினத்துல பேசினாருங்க! அதனாலே எம்ஜிஆர் ரசிகர்களும் ரொம்ப ஆவலா அண்ணன் ஒரு கோயிலு படத்தைக் போயி பார்த்தாங்கன்னு வைங்க.அந்த விஜயன் டைரக்ஷனுங்க. கேரளாக்காரரு.அவரு படந்தான் இது,தீபம்,திரிசூலமெல்லாம்.."
ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் கவியன்பன். கடும் உடல்நலக்குறைவுக்குப் பின் அவர் மீண்டு ஓரிரு மாதங்களே இருக்கும்.கவியன்பனைப் பற்றி ஜான் சுந்தர் சொல்வார் "சார்! இந்த கம்ப்யூட்டரை இப்பதான் ஃபார்மட் பண்ணியிருக்கு,,அதுக்குள்ள பாருங்க"என்று.
அந்தப் பாடலில் வழிந்தோடும் உள்மனத் தவிப்பை மீண்டும் கேட்டபடியே இடைநிற்றல் நீங்கி தொடர்ந்து நடந்தேன் . சி.எஸ்.ஐ தேவாலயம் எதிரில் நடைபாதை ஓரத்தில் முப்பத்தைந்து வயது மதிக்கத் தக்க ஒரு பெண். வற்றி மெலிந்த தேகம். கைநீட்டவும் கூச்சப்படும் கண்களில் மௌன யாசிப்பு.மடியில் ஆறேழு வயது மதிக்கத்தக்க சிறுமி. நீட்டிய பணத்தை அந்தக் குழந்தைதான் வாங்கியது.
"என்னம்மா! குழந்தையை வச்சுகிட்டு இங்கே உட்கார்ந்திருக்கீங்க!" மெல்ல பேச்சுக் கொடுத்தேன். "இன்னைக்கு பள்ளிக்கூடம் லீவுதானுங்க" என்றதும் தூக்கி வாரிப் போட்டது.குழந்தையைப் பார்த்து 'என்னம்மா படிக்கிறே"என்றேன். 'ஃபோர்த் ஸ்டாண்டர்ட்" என்றது. அந்தப் பெண்ணுக்கு உடல்நலமில்லையாம். கோவையிலிருந்து தொலைவில் இருக்கும் தொண்டாமுத்தூர் பகுதியில் இருக்கிறார்களாம். குழந்தையும் அங்குதான் படிக்கிறதாம். சனி ஞாயிறுகளில் பந்தயச்சாலை நடைபாதையில் யாசகம்.
அங்கிருந்து வருவதென்றால் காலையில் முதல் பேருந்தில் கிளம்பியிருக்க வேண்டும். எல்லாத் தெய்வங்களும் தடுத்தாண்டதால்,'உங்க வீட்டுக்காரரு?"
என்றெல்லாம் கிளறாமல் மெல்ல நகர்ந்தேன்,அந்தப் பெண்ணின் கண்களில் துடித்த மன்றாடலும் வெற்று நெற்றியும் என்னவோ செய்தது. அந்தக் குழந்தையை திரும்பிப் பார்த்தேன், அம்மாவின் மார்பில் ஒடுங்கியிருந்தது.
"கோதை நாயகன் வருவானடி" என்று வாணி ஜெயராம் பாடிக்கொண்டிருந்த போது சத்தியமாய் நினைவு வரவில்லை.....இன்று குழந்தைகள் தினம் என்று!!