Saturday, November 14, 2015

சஷ்டி நாயகன் சண்முகன்.3.குரு முருகன்



குழந்தைகள் உலகம் நல்லறங்களால் நிறைந்தது. பிள்ளைகளுக்கு ஏற்படும் முதல் அதிர்ச்சியே பெரியவர்கள் பொய் சொல்வார்கள் என்பதுதான்.பச்சை விளக்கு வருமுன் சீறிக்கிளம்பும் வாகனங்களை,வெளிப்படையான விதிமீறல்களை ஒரு குழந்தை தெய்வக் கண்கொண்டு,கண்டு மிரள்கிறது.
குழந்தைகளும் தெய்வங்கள் என்பது இதனால்தான்.இப்படி இருக்கும்போது தெய்வக் குழந்தைகளின் உறுதிப்பாட்டை கேட்கவா வேண்டும்.எதையும் தொடங்கும் முன்னர் விநாயகரை வணங்க வேண்டும் என்பது மரபு.திரிபுரங்களை எரிக்கக் கிளம்பிய சிவபெருமான் அந்த விதியி மீறுகிறார்.உடனே விநாயகர் அவருடைய தேரின் அச்சினை தூள்தூளாக்குகிறார்.

'முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா:" என்கிறார் அருணகிரிநாதர்.
இதேதான் கந்தன் கைகளில் குட்டுப்பட்ட நான்முகனுக்கும் நடந்தது. படைத்தல் தொழிலின் அதிபதிக்கு படைப்பின்
மூல ஒலியாகிய பிரணவத்தின் பொருள் தெரிய வேண்டாமா எனபதுதான் அறுமுகனின் சீற்றம்.
மூலப்பரம்பொருளாகிய சிவன் வீற்றிருக்கும் பீடம், பிரணவம். காசியில் உயிர்விடுவோர் செவிகளில் ஈசனோதும் மந்திரம் பிரணவம்.இதன் பொருள் பிரம்மனுக்குத் தெரியவில்லை. இந்த வாசகத்தைப் படிக்கும் நம் இதழ்களில் ஓர் ஏளனப் புன்னகை அரும்பும் என்பதை,கச்சியப்ப சிவாச்சாரியார் உணர்ந்திருக்கக் கூடும்.
பிரம்மாவுக்கே இதுதான் நிலைமை என்றால் நாம் நம்மை விஷயம் தெரிந்தவர்களாக நினைத்துக் கொள்வது எவ்வளவு அபத்தம் என்கிறார்.

ஈசன் மேவரும் பீடமாய் ஏனையோர் தோற்றும்
வாச மாய்எலா வெழுத்திற்கும் மறைகட்கும் முதலாய்க்
காசி தன்னிடை முடிபவர்க் கெம்பிரான் கழறும்
மாசில் தாரகப் பிரமமாம் அதன்பயன் ஆய்ந்தான். 

 
தூம றைக்கெலாம் ஆதியு மந்தமுஞ் சொல்லும்
ஓமெ னப்படும் ஓரெழுத் துண்மையை யுணரான்
மாம லர்ப்பெருங் கடவுளும் மயங்கினான் என்றால்
நாமி னிச்சில அறிந்தனம் என்பது நகையே.
 
நான்முகன் தலைகளில் குட்டி செவ்வேள் சிறையிலடைக்க, விஷயம் கயிலாயம் வரை போக சிவபெருமான், நான்முகனை விடுவித்து அனுப்புமாறு நந்தியிடம் சொல்லியனுப்பினார்.
"விடுவிக்க முடியாது..நீ வேண்டுமானால் நான்முகனுக்குத் துணையாக சிறையிருக்கிறாயா" என முருகன் கேட்க வந்த சுவடு
தெரியாமல் திரும்பினார் நந்தி.
தேவர்கள் சூழ தன் புதல்வனின் மலைநோக்கி மலைபோன்ற ரிஷபத்தில் தாமே எழுந்தருளினார் ஈசன். மகனை  மடியில் அமர்த்திக் கொண்டு மெள்ள விஷயத்திற்கு வந்தார். முருகன் தந்த பதிலில் முக்கண்களும் பிதுங்கினபோலும். முருகன் கேட்டது இதுதான். " அப்பா!  அனைத்திற்கும் தொடக்கமே பிரணவம்தான். பிரம்மாவுக்கு அதற்கே பொருள் தெரியவில்லை. அப்புறம் அந்த இலட்சணத்தில்தானே அவர் நான்கு வேதங்களையும் கற்றிருப்பார்!!"
பிள்ளை போட்டபோட்டில் பதறிவிட்டார் பெருமான்.
அத்துடன் விட்டாரா? "தினமும் உங்களை வணங்கினால் கூட நான்முகனுக்கு அகந்தை அகல்வில்லை.எனவே அவரை விடுவிக்க மறுத்தேன்'' என்றார்.


உறுதி யாகிய ஓரெழுத் தின்பயன்
அறிகி லாதவன் ஆவிகள் வைகலும்
பெறுவ னென்பது பேதைமை ஆங்கவன்
மறைகள் வல்லது மற்றது போலுமால்
நின்னை வந்தனை செய்யினும் நித்தலுந்
தன்ன கந்தை தவிர்கிலன் ஆதலால்
அன்ன வன்றன் அருஞ்சிறை நீக்கலன்
என்ன மைந்தன் இயம்பிய வேலையே
தன் நியமனமும் தவறு,பக்தன் என்ற முறையில் பிரம்மாவின் நியமங்களும் தவறு என்றதும் பொய்க்கோபம் கொண்டார் பிறைசூடி 
 

"மைந்தநின் செய்கை யென்னே மலரயன் சிறைவி டென்று
நந்திநம் பணியா லேகி நவின்றதுங் கொள்ளாய் நாமும்
வந்துரைத் திடினுங் கேளாய் மறுத்தெதிர் மொழிந்தா யென்னாக்
கந்தனை வெகுள்வான் போலக் கழறினன் கருணை வள்ளல்". 
 
 நான்முகனுக்கு கந்தன் மனதில் குறித்திருந்த தண்டனைக் காலம் முடிந்தது போலும்.
 உடனே விடுவிக்க சம்மதித்தான் .இங்கேதான் முருகன் சுவாமிநாதன் ஆகிற சம்பவம் 
நிகழ்கிறது. பலரும் நினைப்பது போல "உனக்கு உபதேசிக்கும் போது
 நான் குரு நீ சீடன்" என்றெல்லாம் முருகன் சொல்வதாகக் கந்தபுராணத்தில் இல்லை.  

பிரணவத்தின் பொருளை பரமன் முருகனிடம் கேட்கவும்,''இவ்வளவு பேர் இருக்கையில் அதனைச் சொல்லலாமா?மறைவாகத்தானே சொல்ல வேண்டும்"ஏன்று முருகன் பதில் சொன்னதாகவும் சிவபெருமான் சிரித்துக் கொ ண்டே தன் செவியைத் தாழ்த்திக் காட்ட முருகன் விளக்கிக்  கூற அதனைக் கேட்டு மகனுக்கு தந்தை அருள் புரிந்ததாகவும்தான் கந்த புராணத்தில் வருகிறது.




காமரு குமரன் சென்னி கதும் என உய்த்துச் செக்கர்த்
தாமரை புரையும் கையால் தழுவியே அயனும் தேற்றா
ஓம் என உரைக்கும் சொல்லின் உறு பொருள் உனக்குப்
                                     போமோ
போம் எனில் அதனை இன்னே புகல் என இறைவன்
                                     சொற்றான்.


    முற்று ஒருங்கு உணரும் ஆதிமுதல்வகேள் உலகம்  எல்லாம்
பெற்றிடும் அவட்கு நீ முன் பிறர் உணராத வாற்றால்
சொற்றதோர் இனைய மூலத் தொல் பொருள் யாரும்
   கேட்ப
இற்றென இயம்பல் ஆமோ மறையினால் இசைப்பது 
ல்லால்
என்றலும் நகைத்து மைந்த எமக்கருள் மறையின்
                                     என்னாத்
தன் திருச் செவியை நல்கச் சண்முகன் குடிலை
                                     என்னும்
ஒன்று ஒரு பதத்தின் உண்மை உரைத்தனன் உரைத்தல்கேளா
 அருள் புரிந்தான் என்ப ஞான நாயகனாம்                  அண்ணல். .





இதன்பின்னர் அகத்தியர் பணிந்து வேண்டியதால் பிரணவத்தின் பொருளை அவருக்கு முருகன் உபதேசம்செய்ததாக கந்தபுராணம் சொல்கிறது



தந்தை மகன் என்னும் எல்லைகள் தாண்டி சீலங்கள் நிலைநிறுத்தப்படுவதில் விநாயகரும் முருகரும் காட்டிய உறுதிக்கு இந்த சம்பவங்களே சாட்சி.
(வருவான்)