அந்த விமானம் கிளம்பட்டும்

 
 உறுமிக் கிளம்பி ஓடு தளம் ஓடி
 திரும்பி நகர்ந்து திடுமென்று விசைகொண்டு
மெல்ல எழும்பி முன்சக்கரம் உயர்த்தி
செல்லும் விமானமது 'ஜிவ்'வென்று பறக்கட்டும்;

உள்ளே பரபரப்பும் உயிர்கள் படும் தவிப்பும்
மெள்ள சமன்கொள்ள மேலெழும்பும் வேகமுமாய்
எத்தனையோ உணர்ச்சிகளை ஏந்திப் பறக்கட்டும்;
புத்தகப் பக்கம்போல் புரள்கின்ற காற்றலையில்
எத்தனையோ யுகங்கண்ட ஏகாந்த வெளியின்மிசை
தத்துவத்தின் முடிதேடும் தேடலைப்போல் முந்தட்டும்;

வந்தவழி இன்னதென்னும் வரைபடமும் காணவில்லை
இந்தப் பயணம் எதுவரையோ தெரியவில்லை;
வலவன் செலுத்துகிறான் வலம் இடமும் சொல்லாமல்
கலம்கொண்ட எரிபொருளோ குறைந்தும் குறையாமல்;
விசித்திரப் பறவையிது;விபரங்கள் உணராது;
உலோகச் சிறகுக்கு உணர்ச்சிகளும் கிடையாது;

விட்டில் வெளிச்சமொன்று வெண்ணிலவாய் வளர்ந்ததுவும்
கட்டிய மாளிகையே கொடுஞ்சிறையாய் ஆனதுவும்
பொத்திவைத்த வெஞ்சினமே பெருநஞ்சாய் மாறியதும்
சத்தியத்தை அடகுவைத்து சமர்க்களத்தில் ஆடியதும்
யார்பகடை நானென்றே யாமத்தில் புலம்பியதும்
போர்க்குணத்தில் பொங்கியதும் பள்ளியிலே விம்மியதும்
கடக்கும் நொடியின்று கனமாய் கனப்பதுவும்
பறக்கும் விமானத்தின் பேரொலியில் அடங்கட்டும்;
 

வானெழுதும் சரித்திரத்தில் வந்தசிறு பிழையொன்று
தானே தனிக்கதையாய் தலையெடுத்த வேடிக்கை
இங்கே நடந்ததையும் ஏதேதோ செய்ததையும்
பங்கெடுக்கும் மௌனவிதி பக்கம்வந்து அமர்ந்ததையும்
வேடங்கள் பூண்டிருக்க வேதங்கள் திகைத்திருக்க
நாடகங்கள் விதம்விதமாய் நிகழ்ந்திருக்க-அத்தனையும்
கோடங்கி சொன்னவொரு குறிபோல மாறிவரும்
பூடகங்கள் என்னவென்று புரியுமுன்னே பறக்கட்டும்;

கருவி பலபடுமோ;கைபடுமோ;வீணையிலே
சுருதி விலகி சுகராகம் பிழைபடுமோ
அவதி விலகிஆனந்தம் துளிர்விடுமோ
கருதி இருப்பதொன்று ; கடவுள் நினைப்பதொன்று;

உரையெழுத முடியாத உண்மைகளின் ஆழத்தை
தரையிறங்கும் முன்பாக தெரிந்துகொண்டால் தெளிந்திடலாம்