Friday, September 26, 2014

வியாச மனம்-5 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)

21 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் நெருங்கிய உறவில் ஒரு திருமணம்.என் ஒன்றுவிட்ட சகோதரர்தான் மணமகன். திருமணம் முடிந்து மறுநாள் மாலை வேறோர் ஊரில் வரவேற்பு.மணமகளுக்கு அப்பா மட்டும்தான்.அம்மா இல்லை. அவர் மணமகன் வீட்டிற்கு வரவில்லை.மறுநாள் நேராக வரவேற்புக்கு வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தார்.

வரவேற்பு மேடைக்கு போவதற்கு முன்னர்,இப்போது எனக்கு அண்ணியாகிவிட்ட மணமகள்(பெயர் வண்டார்குழலி) தலைவலிக்கிறது என்று சொல்ல,பொறுப்புள்ள கொழுந்தனாய் மாத்திரை வாங்கிக் கொண்டு வருவதற்குள் மணமக்கள் மேடையேறியிருந்தனர். அப்போதுதான் உள்ளே நுழைந்திருந்த மணமகளின் தந்தைமண்டப வாயிலில் இருந்து தொலைவிலிருந்த மேடையைப் பார்த்தார். நெற்றி சுருங்கியது.உள்ளே வந்து கொண்டிருந்த என்னிடம் கேட்டார்,"குழலிக்கு தலைவலியா?".

தாய்மைக்கு நிகரானது தந்தைமை என்றறிந்த தருணம் அது.அம்பை,அம்பிகை,அம்பாலிகை ஆகிய மூன்று மகள்களின் தந்தை என்பதில் மிகுந்த பெருமை கொண்டிருந்தவன் காசி நகரின் மன்னன் பீமதேவன்.ரஜோ குணம்,சத்வ குணம்,தமோகுணம் ஆகிய முக்குணங்களும் காசி மன்னனுக்கு மகளாகப் பிறந்ததாய் நிமித்திகர்கள் சொன்னார்களாம்.(ப-99).

அம்பை தழல்போன்றவள், அம்பிகை குளிர்ந்தவள்,அம்பாலிகை விளையாட்டுப்பெண் என்கிறது முதற்கனல் ,பீமதேவன்,"விழிகளால் அம்பையையும் கைகளால் அம்பிகையையும் உதடுகளால் அம்பாலிகையையும் கொஞ்சினான்"(ப-209) என்கிறது முதற்கனல்.

மூன்று மகள்களுடன் ரதத்தில் செல்லும்போது,உஷையும் சந்தியையும் ராத்ரியும் துணைவரும் சூரியன்போல் தன்னை உணர்வான் பீமதேவன் (ப-210)

நுண்ணுணர்வுகளின் கண்ணிகொண்டு புதல்வியரைச் சுற்றி பொன்வேலி அமைத்திருந்ததாலோ என்னவோ,அவர்களின் சுயம்வர நாளன்று சற்றும் நிலை கொள்ளாதவனாகக் காட்டுகிறது முதற்கனல்.அவன் மனைவி புராவதிக்கும் அதே நிலைதான்.

புதல்வியர் மூவரும் சுயம்வரத்திற்குத் தயாராகும் முகமாய் ஆலயங்களில் வழிபாடுகள் நிகழ்த்திவிட்டு கன்னிமை நிறைவுப்பூசை மேற்கொள்கையில் அவர்தம் உடல்களில் குடியிருந்த தேவதைகளும் காவலிருந்த தேவர்களும் பலியேற்று  விடைபெறுவதாய் முதுபூசகி சொல்கிறாள்."இனி உங்கள் கற்பே உங்களுக்குக் காவலாகும்"என்கிறாள்.(ப-111)


தமிழ்மரபில் கன்னிப் பெண்ணுக்குத் துணையாக ஆயம்,காவல்,தாய் என மூன்று குழுக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை  தோழியர் கூட்டம், காவல் செய்யும் செவிலியர்,தாய் என்றே புரிந்து கொண்டிருக்கிறோம்.திருமணம் நிகழும் வரை இந்த மூவரின் துணை இருக்கும்.பின்னர், கணவனே அந்த மூவகைப்பொறுப்புக்கும் உரியவன்.

சிலப்பதிகாரத்தில் மாதரியிடம் கண்ணகியை அடைக்கலப் படுத்துகையில் கவுந்தியடிகள்"ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத் தாயும் நீயே ஆகித் தாங்கு" என்கிறார். இந்த மூன்றுமாய் இருக்க வேண்டிய கணவன் இனி திரும்பப் போவதில்லை என்பதை குறிப்பால் உணர்த்துவது  போல் கவுந்தியடிகளின் கூற்று அமைகிறது.


சால்வனால் நிராகரிக்கப்பட்டு தந்தையிடம் அடைக்கலம் தேடி வரும் அம்பையின் முன் இந்த  தேவதைகள் தோன்றிப் பேசுவதையும் முதற்கனல் பின்னால் காட்டுகிறது.

எனவே தமிழ்மரபில் குறிக்கப்படும் "காவல்" என்பது சூட்சும வட்டத்தில் செயல்படும் இந்த தேவதைகளைக் குறிக்கிறதா என்பது ஆய்வுக்குரிய ஒன்று.இந்த அத்தியாயத்தில் இன்னோர் இடமும் சிலப்பதிகார சொற்பிரயோகம் ஒன்றை நினைவூட்டுகிறது.அம்பையை சால்வன் சுயம்வர மண்டபத்தில் முதன்முதலாகக் காண்கையில் சற்றே அச்சம் கொள்கிறான்.

"திரையை ஒரு சேடி விலக்க,உள்ளே அம்பை,செந்நிறமான ஆடையுடன் செந்நிறக் கற்கள் பொறிக்கப்பட்ட மணிமுடியும்,ஆபரணங்களும் அணிந்து நெய்யுண்ட வேள்விச்சுடர் போலக் கைகூப்பி நின்றாள்.அவளை முதல்முறையாக நேரில் பார்க்கும் சால்வன்,மெல்லிய அச்சத்துடன் தன்னருகே அமர்ந்திருந்த தமகோஷனின் கைகளைப் பற்றிக் கொண்டான்.தமகோஷன்,"பாய்கலை ஏறிய பாவை போலிருக்கிறார்"... என்றான்".

(ப-117)

பாய்கலைப் பாவை என்பது பாய்ந்து செல்லும் மானை வாகனமாகக் கொண்ட துர்கையைக் குறிக்கும்.வேட்டுவ வரியில் இப்பெயர் வருகிறது. கானகம் வழியே செல்கையில் வனமோகினி வழிமறிக்கும்போது கோவலன் பாய்கலைப் பாவை மந்திரம் சொல்லி வனமோகினியை விரட்டியதாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

அம்பை ரஜோகுணம் கொண்டவள் என்பதைக் குறிக்கும் விதமாய்,பீஷ்மர் சிறையெடுக்க வந்ததும் கங்கநாட்டு மன்னனின் உடைவாளை உருவி தன்னைத் தொட வந்த பீஷ்மனின் மாணவனை வீழ்த்தி மற்ற மாணவர்கள் மத்தியில் சுற்றிச் சுழன்று போரிட்டதாக முதற்கனல் சொல்கிறது. (ப-120)

மற்ற மன்னர்கள் துரத்த முயன்று தோற்க சால்வன் மட்டுமே மூன்று நாழிகைகள் தொடர்ந்து போரிட்டுத் தொடர்ந்ததோடு பீஷ்மரின் ரதத்தின் கொடிமரத்தை உடைத்து,அர்த்த சந்திர அம்பு கொண்டு அவரது கூந்தலை வெட்டுகிறான்.பீஷ்மர் முகம்மலர்ந்து அவனை வாழ்த்துகிறார்.(ப-123)



ஆனால் இளவரசியர் மூவரை படகிலேற்றிச் செல்கையில் தான் சால்வனை விரும்புவதாக அம்பை சொல்ல, அவனைக் குறித்த தன் துல்லியமான கணிப்பை முதன்முதலில் வெளியிடுகிறார் பீஷ்மர்.

"தேவி,அவனை நானறிவேன்.என்னை வெல்ல முடியாதென்றாலும் என்னை எதிர்த்தேன் என்ற பெயருக்காகவே,என் பின்னால் வந்தவன் அவன்.அதாவது,சூதர் பாடல்களுக்காக வாழ முனையும் எளிய ஷத்திரியன்."(ப-126)

இது எவ்வளவு துல்லியமான உண்மை என்பதை  சௌப நாட்டுக்கு அம்பை போனதும் சால்வன் சொல்கிற சொற்களே நிறுவுகின்றன. தன் விருப்பத்தையறிந்து பீஷ்மர் தன்னை அனுப்பி வைத்தார் என்று அம்பை சொன்னதும் சால்வனுக்கு கோபம் வருகிறது.

"அப்படியென்றால் உன்னை எனக்கு பீஷ்மர் தானமாக அளித்திருக்கிறார் இல்லையா?உன்னை ஏற்றுக் கொண்டு நான் அவரின் இரவலனாக அறியப்படவேண்டும் இல்லையா?இன்று பீஷ்மரிடம் மோதியவன் என என்னை பாரத வர்ஷமே வியக்கிறது.அந்தப் புகழை அழிக்கவே உன்னை என்னிடம் அனுப்பியிருக்கிறார்.ரதத்தில் செல்லும் வணிகன் இரவலனின் திருவோட்டில் இட்ட பிச்சையா நீ என்றான்"(ப-140)

அம்பைக்கு அப்போதும் புரியவில்லை."என்மேல் உங்களுக்கு காதலே இல்லையா?"என்று கேட்க,சால்வன் தன் அமைச்சர் குணநாதரைக் காட்டி
"அக்காதலை இவர்தான் உருவாக்கினார்.இவர்தான் உன்னைக் கண்டுபிடித்துச் சொன்னார்"என்க, குணநாதரோ,"இளவரசியே!அரசர்களுக்கு அரசியலில் மட்டுமே காதல் இருக்க முடியும் "என்கிறார் (ப-141)

இதை வாசிக்கையில் நமக்கொன்று தோன்றுகிறது.ஒருவேளை அம்பை சால்வனை மணந்து வந்திருந்தாலும்,அதுவும் சிறையெடுப்பாகத்தான் இருந்திருக்கும்.அஸ்தினபுரிக்காக பீஷ்மர் அம்பின் முனையில் சிறையெடுத்தார்.சால்வனின் ஆயுதம் காதல்.

தன் கம்பீரம் மறந்து, தன்னையுமறியாமல் தளர்ந்து விழுந்தழுகிறாள் அம்பை.ஆனால் எது குறித்து மனவுறுதியை இழக்கிறார்களோ அதன் அடிப்படையிலேயே அதே உறுதியை பலமடங்கு கூடுதல் வல்லமையுடன் மீட்டெடுக்கும் வல்லமையை பெண்களுக்கு இயற்கை தந்திருக்கிறது.இறந்த உறவுக்காக என்றாலும் இழந்த காதலுக்காக என்றாலும் வீறிட்டழுது முடித்ததுமே வைராக்கியம் பிறந்து   விடுகிறது.

திடம் கொண்டு நடக்கும் அம்பையை தொடர்ந்து வந்த சால்வன், தன் அரசியல் சூழலைப் புரிந்து கொள்ளும்படி மன்றாடி"நீ பட்டத்தரசி ஆக முடியாது ,ஆனால் என் அந்தப்புரத்தில் இருக்கலாம்"என்றதும் மிதிபட்ட ராஜநாகமாய் சீறியெழுந்து அவனுக்கு உயிர்ப்பிச்சை தந்துவிட்டு விலகுகிறாள் அம்பை.(ப 142-143)


பீஷ்மருக்கஞ்சி அம்பையை சால்வன் திருப்பியனுப்பினான் என்று மகாபாரதத்தின் ஏனைய பிரதிகள் சொல்ல,சால்வனின் கபட நாடகத்தையும் விளம்பர மோகத்தையும் முதற்கனல் சொல்கிறது.

பெண்சாபம் விழுந்த மண்ணென்று குடிமக்கள் தூற்றி பாஞ்சால நாட்டுக்கு இடம்பெயர,சண்டி தேவிக்காக பூசனை செய்கிறான் சால்வன்.முதலில் வந்து பரிசினை ஏற்று வாழ்த்துப் பாட வேண்டிய முதுசூதர் "பெண்சாபம் கொண்ட சால்வனையும் அவனுடைய தேசத்தையும் சூதர்கள் இனி பாட மாட்டார்கள் என சூதர்களின் தெய்வமாகிய ஆதிசேடன் மீது ஆணையிட்டதையும்,முதிய உழத்தி ஒருத்தி சாபமிட்டதையும் சூதர்கள் வாயிலாக பீஷ்மர் கேள்வியுறுகிறார்.

தமிழில் சங்க இலக்கியத்தில் மன்னர்கள் "புலவர் பாடாது ஒழிக என் நிலவரை"என்று வஞ்சினம் உரைப்பர். அறமல்லாத ஒன்று நிகழ்கையில் புலவர்களும் சூதர்களும் புறக்கணிப்பார்கள் என்பது இதன்மூலம் உறுதிப்படுகிறது.


கூடவே இன்னொரு தகவலும் கிடைக்கிறது. சௌப தேசத்தின் செல்வத்துக்கரசியான சாவித்ரி நிலம் நீங்கிச் செல்ல, கைவிடப்பட்ட வீடுகளிலும்கலப்பை விழாத நிலங்களிலும் நாகங்கள் குடிபுகுந்தன என்பதே அது.

இங்கே பீஷ்மர் சொல்வதாக அவ்வையின் வாசகம் ஒன்றினை ஜெயமோகன் மேற்கோள் காட்டுகிறார். "வேதாளம் சேரும்..வெள்ளெருக்கு பூக்கும்...பாதாள மூலி படரும் ..சேடன் குடிபுகும்..அதுதான் சொல்லப்பட்டிருக்கிறது என்றார்"(ப-277)

அட்சரம் பிசகாமல் அவ்வை பாடலை மேற்கோள் காட்டியிருப்பதால் பீஷ்மர் அவ்வையை மேற்கோள் காட்டுவதாய் வாசகன் புரிந்துகொள்ள இடமிருக்கிறது. அவ்வைக்கு முன்னரே நீதிநூல்களில் இக்கருத்து இடம்பெற்றிருந்துஅதைத்தான் பீஷ்மர் சொல்வதாய் இருந்தால் கூட அவ்வையின் சொற்களால் அதை சொல்லியிருக்க வேண்டாம். பீஷ்மருக்கும் அவ்வைக்கும் இடையிலான பன்னெடுங்கால இடைவெளியை ஜெயமோகன் நன்கறிவார்.

அந்த சூட்டிலேயே அஸ்தினபுரத்திற்கு மட்டும் பரிசில் பெற சூதர்கள் வந்துள்ளனரே என பீஷ்மர் கேட்க சூதர்கள் "மன்னன் முதற்றே அரசு. நாங்கள் குருகுலத்தை ஆளும் விசித்திரவீர்யனின் நற்பண்புகள் கருதி வந்தோம்" என்கிறார்கள்.

"மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்"என்னும் சங்க இலக்கிய வரி இங்கு நம் நினைவில் நிழலாடுகிறது. எவ்வளவு பொன் கொடுத்தாலும் தகுதியற்றவர்களை  சூதர்கள் பாட மாட்டார்கள் என்பதை உணர்த்த பீஷ்மர் அம்பையிடம் சொல்வதாய் அற்புதமான சொற்றொடர் ஒன்றை ஜெயமோகன் அமைத்திருப்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

"இளவரசியே...சூதர் பாடல்கள் வேதவனத்தின் கிளிகள் போல.நீட்டிய கைகளை அவை அஞ்சும்.அவற்றை அறியாது தியானத்தில் இருக்கும் யோகியரின் தோள்களிலேயே அமரும் (ப-126)

தொடரும்