Saturday, September 27, 2014

வியாச மனம்-6 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)

 இராமன் தோன்றுவதற்கு முன்னரே வான்மீகி இராமாயணத்தை எழுதிவிட்டார் என்று சொல்லப்படுவது பற்றி ஓஷோவிடம் அவருடைய சீடர்கள் கேட்டார்கள்."முன்னரே எழுதப்பட்டது என்று பொருளல்ல. முன்னரே எழுதிவிடக்கூடிய அளவு கணிக்கக்கூடிய வாழ்க்கைமுறைதான் இராமனுடைய வாழ்க்கை.அவர் ஒரு சூழலில் எத்தகைய முடிவுகளை எடுப்பார் என்று கணித்துவிட முடியும் என்கிற பொருளிலேயே இவ்வாறு சொல்லியிருக்கக் கூடும்"  என்றார் ஓஷோ.

ஆனால் மகாபாரதம் ஒழுங்கின்மைகளின் கருவூலம். ஆதி பருவம் தொடங்கி வேறெங்கும் கேள்வியுறாத உறவுமுறைகளும் பிள்ளைப்பேறுகளும் நிகழ்களம்.அதிலும் மேலோட்டமாகக் காணும்போது புலப்படாத அம்சங்களையும்,பல நிகழ்வுகளைப் பின்னின்றியக்கும் உளவியல் நுட்பங்களையும் முதற்கனல் ஒளிபாய்ச்சிக் காட்டுகிறது.

சௌப நாட்டிலிருந்து காசி நோக்கிச் செல்லும் அம்பை,தாய்வீடு தன்னைத் தள்ளாதென்ற நம்பிக்கையுடன் படகை விட்டிறங்குகிறாள்.ஆனால் அது தந்தை ஆள்கிற நாடென்பதை மறந்துவிட்டிருந்தாள்."அஸ்தினபுரியின் அரசி முறையான அனுமதியின்றி வரக்கூடாது அமைச்சரே " என்னும் அரசனின் குரல் அம்பையை நிலைகுலையச் செய்கிறது.

அடுத்த நாட்டுக்கு மணமாகிப் போன இளவரசி தந்தையின் நாட்டுக்கு வருவதற்கான விதிமுறைகளை அமைச்சர் ஃபால்குனர் வேறு வழியில்லாமல் உயிரற்ற சொற்களில் சொன்னார் என்று ஜெயமோகன் எழுதினாலும் அந்த விதிமுறைகள் சுவாரசியமாயிருக்கின்றன.


"முதலில் அஸ்தினபுரியில் இருந்து வருகைத் திருமுகம் இங்கு வரவேண்டும்.தூதர்கள் வந்து வழிமங்கலம் அமைக்க வேண்டும்.சத்ரமும் சாமரமும் உடன்வர வேண்டும்.தங்கள் அரசரோ,அவரது உடைவாளை ஏந்திய தளபதியோ,மைந்தரோ துணைவராமல்,தாங்கள் நாடுவிட்டு எழுந்தருள நூல்நெறிகள் அனுமதிப்பதில்லை".(ப-144)


இத்தனையையும் அம்பை பீஷ்மரால் சால்வனிடம் அனுப்பப்பட்டு,சால்வனால் திருப்பியனுப்பப்பட்ட செய்தியை அறிந்துகொண்டே அரசரும் அமைச்சரும் பேசுகின்றனர்.

தான் வாழ்ந்த அரண்மனையை ஏக்கத்துடன் நிமிர்ந்து பார்த்த அம்பை,அமைச்சரிடம் "அப்படியானால் இந்த அரண்மனையில் எனக்கினி இடமேஇல்லையா?" என்று ஒரு சிறுமிபோல் கேட்கையில் ஏழு மகள்களைப் பெற்ற ஃபால்குனர் ஒரு கணம் தன் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொள்ள எண்ணியதாகவும் தன் மகள்களின் முகங்கள் நினைவில் நிழலாடி அவ்வாறு செய்யவொட்டாமல் தடுத்ததாகவும் ஜெயமோகன் சொல்வது, ஃபால்குனரின் குணசித்திரத்தைத் தீட்டித் தந்து விடுகிறது.

"அஸ்தினபுரியின் அரசியே!அத்தனை கன்னியருக்கும் ஒரு தருணத்தில் பிறந்த இல்லம் அந்நியமாகி விடுகிறது என்று ஃபால்குனர் சொன்னதும் சரடுகள் அறுபட்ட கூத்துப்பாவை போல் அம்பையின் கைகளும் கால்களும் விழுந்தன" என்கிறார் ஜெயமோகன்.(ப-146)

கங்கை நோக்கி நடந்த அம்பை ஊர்த்துவபிந்து என்னும் பெருஞ்சுழியில் குதிக்க முற்பட்ட போது அவளைத் தொடர்ந்து வந்த மூன்று நிழல்கள் குறித்து சூதர்கள் பாடியதை முதற்கனல் சொல்கிறது.பொன்னிறம் செந்நிறம் பச்சைநிறமென மூன்று நிறங்கள் கொண்ட அந்த நிழல்களில் பொன்னிறம் கொண்ட தேவதை அம்பையை பற்றிக் கொண்டு பேசத் தொடங்குகிறது.(ப-147)

ஒரு பெண்குழந்தை பிறந்ததிலிருந்து துணைசெய்யும் சுவர்ணை என்ற அந்த தேவதையும்,கன்னிப் பருவத்தில் துணை செய்யும் சோபை என்னும் தேவதையும் உரையாடி நகர,விருஷ்டி எனும் தேவதை அருகில் வந்து பேசத் தொடங்குகிறது.முதற்கனல் நூலின் கவித்துவம் நிறைந்த பகுதிகளில் இதுவும் ஒன்று. அம்பை மழலைப் பருவத்திலிருந்தே தன்னை தாயாக உணர்ந்ததையும் ,அம்பையின் கருப்பையிலிருந்து புளகமெய்தச் செய்யும் சிருஷ்டி தேவதையே விருஷ்டி என்றும் அறிமுகப் படலம் நிகழ்கிறது.

முளைப்பதிலெல்லாம் தன் வாசனை இருப்பதை உணர்த்தும் விருஷ்டி அம்பை பீஷ்மன் மீது காதல் கொண்ட தருணத்தில் அவளை கையிலெடுத்துக் கொண்டதாய் சொல்ல அவள் சினக்கிறாள்.


அப்போது விருஷ்டி தரும் விளக்கம் அபாரமானது."காதல்கொண்ட ஒருவனைத் தேடிச் செல்லும்போது உள்ளூர இன்னோர் ஆணை என்னும் கீழ்மகளா நான்"என அம்பை கொதிக்கும்போது விருஷ்டி சொல்கிறாள்,"இல்லை.நீ ஒரு பெண்.உன் கருப்பை ஆசை கொண்டது.தீராத்தனிமையுடன் நின்றிருந்த மாவீரனைக் கண்டதும்,அவன் முன் மண்டியிடவும்,உன்னுடன் இணைத்துக் கொண்டு அவனை ஒரு குழந்தையாகப் பெற்று மடியில் போட்டுக் கொள்ளவும் அது விழைந்தது.அதுவே இப்பூவுலகை உண்டாக்கி நிலைநிறுத்தும் இச்சை.நான் அதன் தேவதை என்றாள் விருஷ்டி."(ப-151)

பீஷ்மன் மேல் தனக்குக் காதல் உள்ளூர உள்ளதை மெல்ல மெல்ல அம்பை உணரத் தொடங்குகையில் விருஷ்டி அடுத்து சொல்லும் வாசகங்கள் அவளை கங்கை மைந்தன் மீதான காதலில் மெள்ள மெள்ள அமிழச் செய்கின்றன.

"அவன் ஆணுருவம் கொண்ட நீ.நீ,பெண்வடிவம் கொண்ட அவன்.நெருப்பு நெருப்புடன் இணைவது போல நீங்கள் இணைய முடியும்".(ப-152).

ஒரு பெண்ணின் பல்வேறு குணாதிசயங்களிலும் குணபேதங்களிலும் கருப்பையின் தாக்கம் மிகப்பெரிது.
விலக்கு நாள்களில் அவளின் தோற்றத்திற்கும் கருவேற்கத் தக்க நாட்களின் பொலிவுக்கும் கருப்பையின் தன்மையே காரணம் என உடற்கூறியல் அறிந்தோர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.எனவேதான் விருஷ்டி,"இதயம் மிகச் சிறியது.கருப்பையோ முடிவற்றது" என்கிறாள்.


இப்போது கங்கையை நோக்கி நகரும் அம்பை சௌப நாட்டிலிருந்து ஆவேசமாய் வந்தமர்ந்த அதே படகில் மென்மையும் அழகிய சலனமும் கொண்டவளாய் சென்றமர்ந்தாள்.ஒரு தெய்வம் இறங்கிச் சென்று பிறிதொரு தெய்வம் வந்து படகேறியதாய் படகை செலுத்திய நிருதன் உணர்ந்தான் என்கிறது முதற்கனல். (ப-153)
 

காசியிலிருந்து சிறையெடுக்கப்பட்டு கங்கையில் பீஷ்மனிடம் அம்பைபேசிய அனல்பேச்சு தாளாமல் அவளை நிருதனின் படகில்தான் பீஷ்மர் ஏற்றி அனுப்பியிருந்தார்.

அம்பையை அஸ்தினபுரிக்கு சிறையெடுத்துச் செல்வது என்பதில் உறுதியாயிருந்த பீஷ்மரை பதறிப்போய் படகில் அம்பையை எந்தச் சொல் ஏற்ற வைத்தது??

இதற்கு மிகவும் அழகான உத்தியை முதற்கனலில் ஜெயமோகன் பின்பற்றுகிறார். 'சால்வனின் குழந்தையை மட்டுமே என் வயிற்றில் சுமப்பேன்.வேறெவரின் குழந்தையாவது என் கருவில் வளர்ந்தால் அதனை இந்த கங்கையில் மூழ்கடிப்பேன்"என்று அம்பை சீறியதும் அனல்பட்டதுபோல் சீறும் பீஷ்மர் அவளைப் படகிலேற்றி அனுப்புகிறார்.

இந்த உடனடி செய்கையை எதிர்பாராத அம்பை,"பீஷ்மருக்கும் கங்கைக்கும் என்ன சம்பந்தம் என்று வினவுகிற போதுதான் அவர் கங்கையின் மைந்தர் என்பதும்,அவருக்கு முன்னர் பிறந்த ஏழு குழந்தைகள் கங்கையில்   மூழ்கடிக்கப்பட்டனர் என்றும் அவளுக்குத் தெரிய வருகிறது.

தன் புதிய பிரதியில் ஜெயமோகன் எடுத்துக் கொள்ளும் இத்தகைய சுதந்திரங்கள் சுவையான உத்தியாகத் திகழ்வது மட்டுமின்றி கதைப்படகின் விசைப்பயணத்தை ஒழுங்கமைக்கின்றன.

 
அப்போது நிருதனின் படகிலேறிய அம்பைக்கு நிருதனின் பணிவும் நேயமும் பக்தியும் பெரும் ஆறுதலாய் அமைகிறது.
சால்வனைத் தேடிச் செல்லும் வேளையில் அம்பையின் மனநிலை எப்படி இருந்தது என்பதற்கு ஜெயமோகன் ஓர் உவமை சொல்கிறார்."பிரபஞ்சத்தில் கைவிடப்பட்டு திசை வெளியில் அலையும் அடையாளம் காணப்படாத கோளத்தைப் போலத் தன்னை உணர்ந்தாள்"(ப-137)

நிருதன் தன்னைப் பற்றி சொல்லத் தொடங்குகிறான். இராமனை படகிலேற்றிச் சென்ற குகன்,தன் குலமூதாதை என்றும், குகனின் தோளை இராமன் தழுவிய அந்த நினைவை வழிவழியாய் ஆபரணமாய் அணிந்திருப்பதாகவும் கூறி தன் தோளைக்காட்டுகிறான்.

பழுக்கக் காய்ச்சிய இரும்பால் போடப்பட்ட மூன்று காடுகள் இராமனின் விரல்களின் தொடுகையை நீட்டித்திருந்தன.
"இன்றும் நாங்கள் தசரதனுக்கும் இராமனுக்கும் நீர்க்கடன் செலுத்துகிறோம் அன்னையே" என்கிறான் நிருதன் (ப-138)

குகனுக்கு இராமன் தன்னை முதலில் தோழன் என்று சொன்னதே பெரும் பரவசத்தைத் தந்திருந்தது."தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ" என ஆனந்தக் கூத்தாடுகிறான்.

பின்னாளில் குகனை தன் நான்காவது தம்பியென்று தழுவிக் கொள்கிறான் இராமன்.
"என்னுயிரனையாய் நீ; இளவலுன் இளையான் இந்
நன்னுதலவள் நின் கேள்;இந் நளிர்கடல் நிலமெல்லாம்
உன்னுடையது : நானுன் தொழிலுரிமையில் உள்ளேன்"
                                                                                (கம்பன்)

இராமனின் இந்தச் சொல்,மகாபாரதக் காலத்திலும் அவன் சந்ததியினரை விசுவாசம் மாறாமல் வைத்திருக்கிறது என்பது சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.

குகனை தன் சகோதரன் என்று இராமன் சொன்னது, தசரதனை வேட்டுவர் குலத்தின் தந்தையாக்கி இராமனை தமையனாக்கி தலைமுறைகள் கடந்தும் நீர்க்கடன் செய்யும் நிலைக்குக் கொண்டுபோய் நிறுத்துகிறது.


பத்தாண்டுகளுக்கு முன்னர் கோவையில் காந்தியின் பெயரால் நிகழும் ஓர் அமைப்பின் சார்பில் காந்தியடிகள் நினைவுநாள் கூட்டத்தில் பேச அழைக்கப்பட்டிருந்தேன். விழா ஏற்பாட்டாளர்கள் பத்துப்பேர், அன்று அதிகாலை பேரூர் நொய்யலாற்றங்கரையில் போய் நீர்க்கடன் செய்து  மொட்டை போட்டுக் கொண்டுவந்திருந்தார்கள். "தேசத்தந்தை" என்கிற சொல் அவர்களிடையே அப்படியொரு நெருக்கத்தை வளர்த்து விட்டிருந்தது."சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ".


 (தொடரும்)