Tuesday, September 9, 2014

அலகுத் தேடல்

நிறைந்து கிடக்கிற பத்தாயத்தில்
வழிந்து கொண்டிருக்கிற தானியம்நடுவே
தன்பெயர் பொறித்த கார்நெல் தேடி
சின்னக் குருவி சமன்குலைக்கிறது.


பெயர்கள் பொறிக்கும் அவசரத்தில்
குருவியின் பெயர் விட்டுப் போனதாய்
கைகள் பிசையும் நான்முகனுக்கு
செய்வதேதெனத் தெரியவேயில்லை

தத்தும் குருவியின் கண்களில் படாமல்
பத்தாயத்தினுள் புழுவாய் இறங்கி
கிடைக்கும் நெல்லில் குருவியின் பெயரை
பொறித்து வரவே புறப்பட்டான் அவன்

யாதுஞ் சுவடு படாமையினாலே 
பேதுற்றிருக்கும் குருவியின் கண்கள்
பதுங்கி நெளியும் புழுவைப் பார்த்ததும்
ஒற்றை மின்னல் ஒடி நெளிந்தது
 

காரியம் ஈதெனக் கண்டுணரும் முன்
கூரிய அலகு கைப்பற்றியது.,
விசிய சிறகு விண்ணில் பறக்க
பேசிட முடியா பெரிய அவஸ்தையில்
உறுத்தும் அலகின் உறுதிப் பிடியில்
பிரம்மப் புழுவோ பதறி நெளிந்தது