சில
விழாக்கள்,தனிமனிதர்களைக் கொண்டாடும். சில விழாக்களோ வெற்றிகளைக்
கொண்டாடும்.அபூர்வமாய் சில விழாக்கள்தான் வாழ்க்கையைக் கொண்டாடும்.
அப்படியொரு விழாவை தமிழ் மணக்க மணக்க நிகழ்த்தியது திருச்சி நகைச்சுவை
மன்றம்.நவம்பர் 24 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதன் பள்ளி கலையரங்கில் விழா நிகழ்ந்தது.
தமிழ் மேடைகளை நெடுங்காலமாய் தாங்கிப் பிடிக்கும் நாவன்மை மிக்க பேரறிஞர்கள்,பெரும்புலவர்.பா.நமசிவாயம்,
நாவுக்கரசர்.
சோ.சத்தியசீலன்,ஆய்வுரைத் திலகம் அறிவொளி,நகைச்சுவைத் தென்றல்
இரெ.சண்முகவடிவேல் ஆகியோருக்கு வணக்கம் செலுத்தி விருதளித்த விழா,அனைத்து
வகைகளிலும் அர்த்தமுள்ள விழா.
நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் திரு.திருச்சி சிவா
விருதுகளை வழங்க, விருதாளர்களின் வியக்கத்தக்க மேன்மைகளை
பேராசிரியர்.இரா.மாது அறிமுகம் செய்ய,
சொல்வேந்தர் திரு.சுகிசிவம்,அவர்களும் நானும் வாழ்த்துரை வழங்கினோம்.
என்னுடைய வாழ்த்துரையில்,
"சமயாச்சாரியர் நால்வர்,சந்தானக் குரவர்கள் நால்வர் என்பதுபோல் மேடைத்தமிழின் ஆச்சாரியர்கள் இந்த நால்வர்.
தமிழ்
மேடைகள் என்கிற களத்தையும் தளத்தையும் வடிவமைத்துக்
கொடுத்ததில்,இவர்களுக்கு மகத்தான பங்கு உண்டு.தமிழிலக்கிய மேடை என்பது
யாரும் நடக்காத காட்டுப் பாதையாக இருந்தபோது,அதில் காலடிகள் பதித்து
ஒற்றையடிப் பாதையை உருவாக்குவதில் வாரியார் சுவாமிகள்,கி.வா.ஜ.,பேராசிரியர்
ராதாகிருஷ்ணன் போன்றோர் பெரும்பங்காற்றினர்.
அந்த ஒற்றையடிப் பாதையை நெடுஞ்சாலையாக விரிவு செய்ததில் இந்த
நால்வருக்கு மகத்தான பங்கும் பணியும் உண்டு. திரு.சுகிசிவம்,இந்த
நெடுஞ்சாலையை தங்க நாற்கர சாலைபோல் விரிவு செய்து கொடுத்ததால் அவர்களின்
அடியொற்றி வந்திருக்கும் எங்கள் தலைமுறைப் பேச்சாளர்கள் எளிதாகவும்
விரைவாகவும் பயணம் செய்ய முடிகிறது.இவர்கள் நால்வருமே திராவிட இயக்கத்தின்
தாக்கத்தால் மேடைக்கு வந்தவர்கள்.ஆனால்,ஆன்மீகத் தமிழை முன்னெடுத்துச்
செல்லும் முயற்சியில் திராவிட இயக்கங்களையும் எதிர்கொண்டு
வளர்ந்தார்கள்.எழுந்தார்கள்.
அதனால்தான் இந்த மேடையில் பக்தி சிவமும் இருக்கிறார். பகுத்தறிவு சிவமும் இருக்கிறார்"என்றேன்..
நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் திரு.சிவா பேசும்போது,
"தமிழகத்தில்தான்
மக்கள் திரண்டு வந்து மேடைப்பேச்சைக் கேட்கும் முறை இருக்கிறது. இதனை
மக்கள் மத்தியில் நிலைக்கச் செய்ததில் இந்த நால்வருக்கும் மகத்தான
பங்கிருக்கிறது. இவர்கள் தமிழை மக்களை இணைக்கும் கருவியாகப்
பயன்படுத்தினார்கள். இத்தனை ஆயிரம்பேர் இந்தக் கூட்டத்திற்கு வந்ததே
அவர்கள் தமிழ்கேட்டு அவரவர்கள் வாழ்வில் பெற்ற உயரங்களுக்கு நன்றி
செலுத்தத்தான்.தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டுமென்று நாடாளுமன்றத்தில் நான்
தனிநபர் மசோதா கொண்டு வந்தேன்.
தமிழை மக்கள் உள்ளங்களில் நிலையான ஆட்சி செலுத்த வைத்த அறிஞர்களைக்
கொண்டடுவது நான் கடமை. இவர்கள் இங்கே விருது பெற்றார்கள் என்று சொல்வது
பிழை. விருதினை ஏற்றார்கள் என்று சொல்வதே முறை.
நான் என்
கைகளில் விருதினை வைத்துக் கொண்டு அவர்களை ஏற்குமாறு கேட்டுக்
கொண்டேன்.இவர்கள் பக்திநெறியை மக்கள் மத்தியில் கொண்டு செல்கிற போதும்
தமிழைக் கொண்டு போய் சேர்த்தவர்கள்" என்று புகழாரம் சூட்டினார்.
சொல்வேந்தர் திரு.சுகிசிவம் பேசும்போது "நாங்களெல்லாம்
பேச்சாளர்களாக வசதியுடன் இருக்கிறோம்,விமானத்தில் பறக்கிறோம்
என்றால்,அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்கள் இந்த நான்குபேர்கள்.
இவர்களுக்கு நன்றி செலுத்துகிற கடமை எங்களுக்கு உண்டு.இந்த விழாவில் கலந்து
கொண்டு நன்றி செலுத்தும் வாய்ப்பைத் தந்தமைக்காக
அமைப்பாளர்களுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.
ஒரு
பேச்சாளன் என்பவன் தனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்பவன் அல்ல. எதிரில்
இருப்பவர்களுக்கு என்ன தர வேண்டும் என்று சிந்தித்துப் பேசுபவனே சிறந்த
பேச்சாளன்.
அவனுக்கு சமரசம் கூடாது. இந்த நான்குபெரும் சொன்னதையே திரும்பச் சொல்லும்
பௌராணிகத்துக்கும் போகாமல் முழுக்கமுழுக்க கடவுள் எதிர்ப்பையும்
மேற்கொள்ளாமல் இரண்டுக்கும் நடுநிலையிலே நின்று தங்கள் கொடிகளை உயர்த்திப்
பிடித்தவர்கள். அதனாலேயே இருதரப்பாரின் எதிர்ப்புகளையும் எதிர்கொள்ள
வேண்டி வந்தவர்கள்.
இவர்கள் தமிழை ஆழ்ந்து கற்று அதன்வழியே மேடைக்கு
வந்தவர்கள்.இன்று தமிழகத்தில் ஓர் ஆபத்தான சூழல் இருக்கிறது.ஆழ்ந்த புலமையோ
சிந்தனைத் தெளிவோ இல்லாமல் வெறும் தொலைக்காட்சி புகழை வைத்துக் கொண்டே
பெரிய பேச்சாளர்களாக சிலர் பிரபலம் ஆகிறார்கள்.
ஆனால் தங்கள் தகுதியாலேயே தலைநிமிர்ந்தவர்கள் இவர்கள்" என்றார்.
விழாவை
பல மாதங்கள் முன்பே கனவு கண்டு,திட்டமிட்டு வெற்றிவிழாவாக ஆக்கித்தந்தவர்
நகைச்சுவை மன்ற செயலாளர் திரு,ஜி.சிவகுருநாதன். அவரே நிகழ்ச்சியைத்
தொகுத்து வழங்கினார். மன்றத் தலைவர் திரு.பாலசுப்பிரமணியன் தலைமை
தங்கினார்.அறங்காவலர்கள் டாக்டர் ஜெயபால்,திரு.செல்லப்பா ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.அறங்காவலர் திருமதி கௌரி ஜெகதீசன் நன்றி நவின்றார்.
விழா நாயகர்கள் நால்வரில் மூவர் அரங்கை அலங்கரிக்க,
ஆய்வுரைத்
திலகம் அறிவொளி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலும்
விழா அரங்கிற்கு வெளியே ஆம்புலன்ஸில் படுத்திருந்த வண்ணமே சிறிது நேரம்
விழா நிகழ்வுகளைக் கேட்டுக் கொண்டிருந்தார் என்ற செய்தி அறிவிக்கப்பட்டபோது
அரங்கம் நெகிழந்தது.தகைசால் தமிழறிஞர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்தியபடியே
கலைந்து சென்றனர் பங்கேற்ற பொதுமக்கள்.
இன்று காலை கோவை திரும்பியதும் அந்த விழாவின் அதிர்வுகள்
ஆழ்மனதில் நிறைவின் பாரத்தைத் தந்தன. எத்தனை சுகமான பாரமாயிருந்தாலும்
எழுத்தில்தானே இறக்கி வைக்க முடியும்...
மலைக்கோட்டை நகர்முழுதும் மல்லி வாசம்
முழுநிலவைக் கண்டலர்ந்த அல்லி வாசம்
கலைக்கோட்டை அரண்களான நால்வருக்கு
கவின்மிக்க விழாக்கண்ட நன்றி வாசம்
தலைக்கோட்டை தமிழுக்கே இவர்தான் என்று
தாரணியே சொன்னாலும் அகந்தையின்றி
நிலைக்கோட்டை போல்நிற்கும் நால்வருக்கும்
நகைச்சுவைமன்றம் தெளித்த பன்னீர் வாசம்
பகைச்சுவையே அறியாத பண்பின் மிக்கார்
பெரும்புலவர் நமசிவாயம் அய்யாவுக்கும்
தொகைச்சுவையே அறியாமல் தொண்டுக்காக
திசையளக்கும் சத்யசீலன் அய்யாவுக்கும்
வகைவகையாய் தமிழ்நூல்கள் வடித்தளிக்கும்
வியனறிவு வித்தகராம் அறிவொளிக்கும்
நகைச்சுவையே வடிவான ஆருர்ச் செல்வர்
சண்முகவடிவேலர்க்கும் விருதுக் கோலம்
திருச்சியிலே வதிகின்ற தமிழர் எல்லாம்
திருவிழாக் கூட்டம்போல் தேடிவந்தார்
திருமுறைக்கு வழிவகுத்த நால்வர்போல
தமிழ்வளர்க்கும் நால்வரையும் வணங்கி நின்றார்
ஒரு-முறைக்கு செய்வதுபோல் இன்றி, உள்ள்ம்
ஒருமித்து விழாக்கண்ட உயர்ந்த பண்பால்
வருகின்ற தலைமுறைக்கும் பெருமை சேர்த்த
விழாக்குழுவை விருப்பமுடன் வாழ்த்தி நின்றார்
ஆயிரமாய் தமிழ்மக்கள் திரண்டிருந்தோம்
அவைமகிழ அவர்சிறப்பை நினைந்திருந்தோம்
தூயவர்க்கு விருதளித்து மகிழ்ந்திருந்தோம்
தொண்டுநலன் தனைநினைந்து வணங்கி நின்றோம்
தாயகமே!தென்தமிழே!குறளே!எங்கள்
தீஞ்சுவைசார் இலக்கியமே !திசைகள் எட்டே!
நாயகமாம் இவர்நால்வர் நலன்கள் வாழ்க
நாளெல்லாம் இவர்தொண்டில் தமிழும் வாழ்க!