சொல்லாய் மலர்கிறவள்


ஏந்திய வீணையில் எழுகிற ஸ்வரங்கள்
எண்திசை ஆண்டிருக்கும்
மாந்திய அமுதம் பொய்யென தெய்வங்கள்
மதுரத்தில் தோய்ந்திருக்கும்
பூந்தளிர் இதழ்களில் பிறக்கிற புன்னகை
புதுப்புது கலைவளர்க்கும்
சாந்தமும் ஞானமும் சரஸ்வதி தேவியின்
சந்நிதி தனில்கிடைக்கும்


படைப்புக் கடவுளின் பத்தினித் தெய்வம்
படையல் கேட்கிறது
விடைக்கும் மனங்களின் அறியாமை தனை
விருந்தாய்க் கேட்கிறது
நடையாய் நடந்து நல்லவை தேடிட
நிழல்போல் தொடர்கிறது
படைகள் நிறைந்த மன்னவர் பணியும்
பெருமிதம் தருகிறது

பனையோலை முதல் கணினித் திரைவரை
பாரதி ஆளுகிறாள்
தனையே பெரிதென எண்ணிடும் மூடர்முன்
திரைகள் போடுகிறாள்
நினையும் நொடியில் கவியாய் கலையாய்
நர்த்தனம் ஆடுகிறாள்
வினைகள் ஆயிரம் விளையும் விரல்களில்
 வித்தகி வாழுகிறாள்

சின்னஞ் சிறிய மழலையின் நாவினில்
சொல்லாய் மலர்கிறவள்
கன்னஞ் சிவந்த கன்னியர் அபிநயக்
கலையாய் ஒளிர்கிறவள்
மின்னல் ஒளியாய் உளியின் முனையில்
மெருகுடன் மிளிர்கிறவள்
இன்னும் பலவகைக் கலைகளில் எல்லாம்
இன்பம் தருகிறவள்

வாணியின் நிழலில் வாழ்கிற பொழுதில்
வருத்தம் சுடுவதில்லை
தூணின் அழகிலும் தெரிகிற தேவியின்
தூய்மைக்கு நிகருமில்லை
காணும் திசைகளில் கவின்மிகு வடிவில்
காட்சி கொடுக்கின்றாள்
பேணத் தெரிந்தவர் வாழ்வினில் எல்லாம்
புத்தொளி தருகின்றாள்