சிரித்து நிறைகின்றாள்


மலைமகள் இரவுகள் நிகழ்ந்திடும் பொழுதுகள்
மலேய நாட்டினிலே
கலைமகள் அலைமகள் கடைவிழி பதிந்திடும்
காவிய வீட்டினிலே
நலம்பல வழங்கிடும் நாயகி எங்கெங்கும்
நின்று ஜொலிக்கின்றாள்!
சிலைகளில் மலர்களில் பனியினில் வெயிலினில்
சிரித்து நிறைகின்றாள்

மங்கலத் திருவடி நடமிடும் கொலுசொலி
மழைவரும் ஒலிதானே!
பங்கயத் திருமுகம் பொலிந்திடும் கலைநயம்
பகலவன் ஒளிதானே!
அங்கென இங்கென ஆயிரம் மாயைகள்
அவளது களிதானே!
எங்களின் அன்னையின் கைவிரல் தாயங்கள்
எழுகடல் புவிதானே!

வீசிய பாதங்கள் விசைகொள்ளும் விதமே
வருகிற காற்றாகும்
பேசிய வார்த்தைகள் வேதமென்றே இந்த
பூமியில் நிலையாகும் 
ஆசையில் ஊட்டிய பருக்கைகள் சிந்தி
ஆயிரம் பயிராகும்
ஈசனின் பாகத்தில் ஏந்திழை சேர்ந்ததே
இரவொடு பகலாகும்

புன்னகையால் சில புதிர்களை அவிழ்க்கும்
பேரெழில் நாயகியாம்
இன்னமுதாகவும் கொடுமருந்தாகவும்
இலங்கிடும் பைரவியாம்
தன்னையும் கடந்தவர் தவத்தினில் லயிக்கையில்
தென்படும் தேன் துளியாம்
அன்னையின் தாண்டவம் அரங்கேறும் இடம்
அதுதான் வான்வெளியாம்!