சத்குருவின் மஹா பாரத் நிகழ்ச்சி...அரங்கேறாத பாடல்
(2012 ல் சத்குரு ஈஷாவில் நடத்திய மஹாபாரத் நிகழ்ச்சியில் பாட சவுண்ட்ஸ் ஆஃப்  ஈஷா குழுவினருக்கு சில பாடல்கள் எழுதினேன். அவற்றில் அரங்கேறாத பாடல் இது )

வீணைகள் உறங்கிய இரவினிலே
   ராகங்கள் உறங்கவில்லை
 சேனைகள் தூங்கிய வேளையிலும்
   கோபங்கள்  தூங்கவில்லை

போர்க்களம் சிவந்தது போதாதோ
பாண்டவர் கௌரவரே
வாள்களின் பசியென்ன தீராதோ
  வீரர்கள் மாண்டனரே

குருதியின் நதியில் குளிக்கிறதே
  இதற்கா குருஷேத்ரம்
அருகினில் இறைவன் இருக்கின்றான்
   சாட்சி நிலைமாத்ரம்

உங்களின் வன்மம் தீர்வதற்கே
 உயிர்கள் மாளுவதோ
எங்கும் ரணகளம் ஏற்படுத்தி
  எவர்தான் ஆளுவதோ

மண்ணில் விழுந்த மனிதர்களோ
ஆயிரம் ஆயிரமே
கண்ண்முன் இன்றும் நடப்பதென்ன
பாரதக் காவியமே