ஆனாலும் நீதான் கடல்


கடவுளின் கைப்பேசி பார்த்தேன் -அவர்
கூப்பிட்ட ஒரே நண்பன் நீதான்
நடைபோட்டு உன்வாசல் சேர்ந்தேன் -என்
வழியெங்கும் ஒரேகாவல் நீதான்
தடைபோட்ட எல்லாமே மாறி-உன்
திசைகாட்டி நிற்கின்றதே
விடைகேட்டு போகின்ற எல்லாம் -உன்
வழிகேட்டு வரப்போகுதே

ஆனந்த அலையாக வந்தாய்
ஆனாலும் நீதான் கடல்
வானாக விரிகின்ற ஈசா-உன்
விழிபார்க்க எந்தன் மடல்

எங்கெங்கே யார்தோன்ற வேண்டும்
எல்லாமே நீபோட்ட கோடு
மங்காமல் ஆனந்தம் பொங்கும்
உன்னோடு நானுள்ள போது
பொங்காதோ நெஞ்சங்கள் இங்கே-ஒரு
பொன்வார்த்தை நீசொல்லும் போது
எல்லாமும் அடங்காதோ இங்கே-உன்
ஏகாந்த மௌனத்தின்  போது  

ஆனந்த அலையாக வந்தாய்
ஆனாலும் நீதான் கடல்
வானாக விரிகின்ற ஈசா-உன்
விழிபார்க்க எந்தன் மடல்

கண்ணீரில் அலைபாயும் நேரம்
கணநேரம் உன்பாதம் காட்டு
எண்ணங்கள் எல்லாமே பாரம்
எரியட்டும் உன்தீயை மூட்டு
எனக்கென்று வினையேதும் இல்லை-அட
எல்லாமே உன்பாதம் சேரும்
கணக்கேது வழக்கேது நாதா-என்
கடனெல்லாம் உன்னாலே தீரும்

ஆனந்த அலையாக வந்தாய்
ஆனாலும் நீதான் கடல்
வானாக விரிகின்ற ஈசா-உன்
விழிபார்க்க எந்தன் மடல்