மங்கலை கொண்டாள் மகாவெற்றி

சங்கல்பம் கொண்டு சமர்செய்ய வந்திங்கு
மங்கலை கொண்டாள் மகாவெற்றி-எங்கெங்கும்
நல்லவையே வென்றுவர நாயகி நாமங்கள்
சொல்லிப் பணிந்தால் சுகம்.

புத்தி வலிவும் பொருள்பலமும் பாங்கான
உத்தி பலமுமே உத்தமிதான் -சத்தியவள்
போடும் கணக்கின் பதிலீட்ட வேண்டியே
ஆடும் விதியாம் அரவு.

வண்ணத் திருவடிகள் வையத்தின் ஆதாரம்
கண்கள் கருணைக் கருவூலம்-பண்ணழகோ
தேவி குரலாகும் தேடும் மனவனத்தே
கூவி வருமே குயில்.

பொன்கயிலை ஆள்கின்ற பேரரசி மாதங்கி
மென்மயிலைப் போற்ற மனம்மலரும்-மின்னொயிலை
காணுதற்கும் நெஞ்சம் குழைவதற்கும் நாமங்கள்
பேணுதற்கும் தானே பிறப்பு.

 அத்தனுண்ட நஞ்சை அமுதாக்கித் தந்தவளை
 தத்துவங்கள் ஆள்கின்ற தத்துவத்தை-பித்துமனத்
தாய்மையை எங்கள் திருவை கலையழகை
போய்வணங்கச் சேரும் புகழ்.

காசி விசாலாட்சி கங்கை தனில்நீந்தும்
ஆசை மிகுமன்ன பூரணி-தேசுடைய
மீனாட்சி காமாட்சி மிக்க வடிவுகளில்
தானாட்சி செய்யும் திறம்.

எங்கள் அபிராமி; ஈசன் நடனத்தில்
சங்கமம் ஆகும் சிவகாமி-பொங்குமெழில்
கற்பகத்தாள் கோலவிழிமுண்டகக் கண்ணியின்
பொற்பதங்கள் நாளும் பணி.

கோனியன்னை எங்களது கோவையிலே தண்டுமாரி
ஞான மருள்பச்சை நாயகியாள்-ஆனைமலை
மாசாணி பண்ணாரி மாரியன்னை பேரருளால்
ஆசைநிச மாகும் அறி.

சித்தம் பதமாகும் செய்கை ஜெயமாகும்
நித்தம் விடியல் நலமாகும்-புத்தம்
புதிய புகழும் பலசேரும் தாயை
இதயம் தனிலே இருத்து.