பகவான் ரமணர்நீரில் நனைந்தும் நனையாத அக்கினியை
வேரினில் கொண்டானே வித்தகன்-நாரிலே
கல்லுரிக் கும்சிவனை காணுமண் ணாமலையில்
உள்ளுரித்துக் கண்டான் உவந்து.

ஆனை புகுந்தவுடல் ஆக உடலசைய
ஞான முனிவன் நடைபயின்றான் -தேனை
அருந்திச் செரித்த அறுகாலாய் ஜென்ம
மருந்தாய் அமர்ந்தான் மலர்ந்து.

உள்ளம் தனைக்கொன்றே ஊனில் புதைத்தவனோ
தள்ளிநின்று தன்னை தரிசித்தான் -பள்ளம்
புகமண்டும் கங்கைப் புனலாய் சிவனும்
அகம்வந்து சேர்ந்தான் அறி.

பாதாள லிங்கம் புடம்போட்ட தங்கம்தான்
ஆதாரம் தன்னை அறிந்தது-சேதாரம்
மேனி தனில்நேர, மேன்மைதவம் செய்கூலி
ஞானமென ஏற்கும் நயந்து