படுவதே பாடம்வாழ்க்கையின் அபத்தம் புரிந்துவிட்டால் அது
 வாழ்வின் அற்புதம் ஆகும்
கூக்குரல் அழுகைகள் அடங்கிவிட்டால்-வரும்
மௌனம் நிரந்தரம் ஆகும்
கேட்கிற கதைகள் புரிவதில்லை-யாரும்
கேளாதிருப்பதும் இல்லை
வேட்கையும் பசியும் வளர்த்ததன்றி-ஒன்றும்
வெட்டி முறிக்கவும் இல்லை

 மமதையில் ஆடிடும் வேளைகளில்-விதி
 முகமூடிக்குள் சிரிக்கும்
நமதெனும் மிதப்பில் இருக்கையிலே-அதன்
நிழலும் பதுங்கிக் கிடக்கும்
திமிறிய மனிதன் நிமிருமுன்னே -அடி
தலைமேல் விழுந்து தொலைக்கும்
குமுறல்கள் கதறல்கள் பயனுமில்லை-அதன்
கணக்குகள்   மட்டும் நிலைக்கும்

உற்றவர் பாதையில் தென்படலாம்-அவர்
உடன்வரப் போவதும் இல்லை
பெற்றதும் சுமப்பதும் வினைவழியே-பிறர்
பாரங்கள் பெறவழி யில்லை
கற்றதும் மறந்ததும் வேடிக்கைதான் -அவை
கடைவழிக் கொருதுணை யில்லை
பற்றுகள் எல்லாம் விலங்குகள்தான் -இது
புத்தியில் புலப்பட வில்லை

கட்டிய கற்பனைக் கோட்டைகளை-வந்து
காலால் மிதிக்குது காலம்
எட்டிய வரைக்கும் எனது பலம் -எனும்
எண்ணத்தைப் புழுதியும் மூடும்
கிட்டிய தெல்லாம் கடவுள்செயல் -எனக்
கருதி யிருப்பதே லாபம்
ஒட்டியும் ஒட்டா திருப்பதுதான் -இந்த
உயிர்பெறும் அனுபவ ஞானம்