நானிலம் காப்பாள் மடியில்

பச்சைப் பட்டின் முந்தானை -அந்தப்
பரமனின் நெற்றியை ஒற்றும்
பச்சை வண்ணத் திருமேனி-எங்கள்
பரமனின் பாதியைப் பற்றும்
பச்சைப் புயலாம் மயிலினிலே-ஒரு
பிள்ளை பூமியை சுற்றும்
பச்சை மாமலை திருமாலோ-அவள்
பிறந்த வகையின் சுற்றம்

மாம்பழம் பெற்ற முதல்பிள்ளை -எங்கள்
மாதுமை மடியினில் துஞ்சும்
தேம்பி யழுத பிள்ளைக்கோ-பால்
திருஞானத்துடன் விஞ்சும்
சாம்பல் மேட்டினில் சாம்பசிவம்-உடன்
சாம்பவிக் கொடிநின்று கொஞ்சும்
கூம்பிய உயிர்கள் மலர்ந்துவிட-அவள்
குளிர்மலர் அடிகளே தஞ்சம்

நாயகிஎங்கள் சிவகாமி -இந்த
நானிலம் காப்பாள் மடியில்
தாயாம் எங்கள் அபிராமி-துயர்
துடைத்திட வருவாள் நொடியில்
ஆய கலைகள் அனைத்தையுமே-அவள்
ஆதரிப்பாள் கைப்பிடியில்
மாயைகள் தீர்க்கும் மஹாமாயை -நம்
முன்வருவாள் பல வடிவில்   

தேரின் வடம்தொடும் கைகள்-அதில்
தேவதேவியின் முத்தம்
வேருக்கு நீர்விடும் கைகள் -தமை
வித்தகி கைகளும் பற்றும்
பேருக்கு ஆசையில்லாமல்-பணி
புரிபவர் மனமவள் முற்றம்
காருக்கும் நீர்தரும் கருணை-நிறை
கடைவிழி யால்புவி சுற்றும்